டாக்காவில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் வங்கதேசத்தை பாகிஸ்தான் அணி பந்தாடி முதல் ஒருநாள் போட்டித் தோல்விக்குப் பழி வாங்கியது. ஆனால் நேற்று வங்கதேச வீரர் மெஹதி ஹசன் மிராஸ் செய்த ஒரு காரியம், ஆட்ட விதிகளின்படி அவுட்தான். ஆனால் ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்பிரிட்டின்படி செய்யக் கூடாத தவறு என்று பாகிஸ்தான் வீரர் சல்மான் அலி அகா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சல்மான் அலி அகா 62 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆடிக்கொண்டிருந்தார். அப்போது பேட்டிங் முனையில் முகமது ரிஸ்வான் மெஹதி ஹசன் வீசிய பந்தை பஞ்ச் செய்தார். அந்தப் பந்து நேராக ரன்னர் சல்மான் அலி அகா இருக்கும் இடத்துக்கு வந்தது, அப்போது சல்மான் அலி கிரீசுக்கு வெளியே இருந்தார். வந்த பந்தை எடுத்து பவுலர் மெஹதி ஹசனிடம் கொடுக்கப் போனார். ஆனால் அதற்குள் மெஹதி ஹசன் பந்தை எடுத்து ரன்னர் முனை ஸ்டம்பைப் பெயர்த்தார்.
சல்மான் அகா அவுட் மேல் நடுவருக்குச் சென்றது. சல்மான் அகாவுக்குத் தெரியும் அது அவுட்தான் என்று. ஆனால், இப்படியா அவுட் ஆக்குவது என்பதில் அவர் கடும் கோபமும் அதிருப்தியும் அடைந்தார். ஹெல்மெட் கிளவ்களை எறிந்தார்.
பிறகு இது தொடர்பாக அவர் கூறும்போது, “ஸ்போர்ட்ஸ்மென் ஸ்பிரிட் வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் என்னை அவுட் ஆக்கியது விதிகளின்படி சரிதான், அதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் என்னுடைய கருத்தைக் கேட்டால், நான் ஸ்போர்ட்ஸ்மென் ஸ்பிரிட்டைத்தான் தூக்கிப் பிடிப்பேன், இப்படி அவுட் செய்ய கூடாது என்றுதான் கூறுவேன். நாங்கள் இப்படியெல்லாம் அவுட் செய்ததேயில்லை. எதிர்காலத்திலும் இப்படி எல்லாம் அவுட் செய்ய மாட்டோம்.
உண்மையில் ரிஸ்வான் அடித்த பந்து என்னை நோக்கி வந்து முதலில் என் கால்காப்பிலும், பிறகு மட்டையிலும் பட்டது. அதனால் அவர் என்னை ரன் அவுட் செய்ய முடியாது என்று நினைத்தேன். ஏனெனில் பந்து என் கால்காப்பையும் பேட்டையும் தாக்கியது. நான் பந்தை எடுத்து அவரிடம் கொடுக்க முயன்றேன். நான் ரன் எடுக்க முயற்சி செய்யவில்லை. ஆனால் அவர் என்னை இப்படி ரன் அவுட் செய்ய வேண்டும் என்று முதலிலேயே முடிவெடுத்து விட்டார் போலும்.
ஆனால் நான் கோபமாகச் செயல்பட்டதற்கும் வருந்துகிறேன், அந்தத் தருணத்தின் சூட்டில் அப்படி நிகழ்ந்து விட்டது. அப்போது லிட்டன் தாஸும் நானும் வாக்குவாதம் புரிந்தோம். ஆனால் என்ன பேசிக் கொண்டோம் என்பது நினைவில்லை. ஆனால் நல்லவிதமாக இருவரும் பேசிக்கொள்ளவில்லை” என்றார் சல்மான் அலி அகா.
இந்தப் போட்டியில் 128 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது. 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்று இதுவரை சமன் ஆகியுள்ளது.