ஓடிடி விமர்சனம்

Sara's: தாய்மையில் இருந்து விடுவித்துக் கொண்ட சாராவின் சாய்ஸ் | திரை தேவதைகள் 36

பாரதி ஆனந்த்

‘தாயான பின்புதான் நீ பெண்மணி...’, ‘அன்பென்றாலே அம்மா...’, ‘தாயெனும் கோயில்...’ போன்ற மகிமைத் துதிகளை நவீன கால பெண்களில் ஒருசாரார் ரசிப்பதில்லை.

“பெண் என்பவளே முழுமையானவள்தான். தாய்மை அந்தஸ்து அவளை முழுமைப்படுத்துவது கிடையாது. மாறாக, தாய்மை என்பது ஒரு விருப்பத்தேர்வு”

இதுதான் நியூ ஏஜ் பெண்களில் ஒரு கணிசமான சதவீதத்தினரின் பார்வையாக இருக்கிறது.

தாய்மை தேவையற்றது, தாய்மை ஒரு பெண்ணின் வளர்ச்சிக்குத் தடை, தாய்மையை விரும்பி ஏற்கும் பெண்கள் சிறுமையானவர்கள் போன்ற விமர்சனங்கள் எனக்கில்லை. சிலருக்கு தாயாக விருப்பம் இருந்து அதன் மீது பயம் இருக்கலாம். அவர்களுக்கு மருத்துவ, மனநல ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்பதிலும் மாறுபடவில்லை.

ஆனால், ஒரு பெண்ணை முழு மனுஷியாகப் பார்க்க தாய்மை இச்சமூகத்தில் முக்கிய அளவுகோலாக இருப்பதில் எனக்கு சில விமர்சனங்கள் இருக்கின்றன.

எனக்குத் திருமணம் வேண்டாம், குழந்தை வேண்டாம் என்று ஓர் ஆண் எடுக்கும் முடிவு மீதும், ஒரு பெண் அப்படியான முடிவை எடுப்பதன் மீதான சமூகப் பார்வையும் ஒரே மாதிரியானதாக இருப்பதில்லை. முதிர்கன்னி, விதவை, மலடி என்ற பட்டங்கள் எல்லாம் பெண்களுக்குத்தான் வழங்கப்படுகின்றன.

ஒரு பெண் திருமணம் செய்து கொண்டதே தாயாவதற்காக மட்டும்தான் என்பதுபோல் ஒரு பதற்றத்தை உருவாக்க இந்தச் சமூகம் தவறுவதில்லை. அக்கறை என்ற பெயரில் அவள் மீது ‘குட் நியூஸ்’ தோட்டாக்களை ஏவும்.

இப்போதைய காலம் கொஞ்சமேனும் பெண்களுக்கு சாதகமாக மாறியிருக்கிறது எனலாம். உதாரணத்துக்கு, திருமணத்துக்குப் பின்னரும் வேலைக்குச் செல்வதை பெண்கள் தங்கள் உரிமை, விருப்பம் என்ற நிலைக்கு நகர்த்திவிட்டனர். அதேபோல், எப்போது குழந்தை பெற்றுக் கொள்வது என்பது குடும்பத்தினரின் எதிர்பார்ப்புக்கு தீனியாவதிலிருந்து தம்பதியரின் முடிவு என்ற நிலைக்கு நகர்ந்துவிட்டது.

ஆனால், அன்றிலிருந்து இன்று வரை மாறாமல் இருக்கிறது தாய்மையை சுற்றிய குடும்ப, சமூக எதிர்பார்ப்புகள், புனித பிம்ப கட்டமைப்புகள்.

அத்தகைய அழுத்தங்களை உடைத்தெறிந்தவள் தான் சாரா. 2021-ல் ஆனா பென் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் சாரா’ஸ் (Sara's). மனோரமா மேக்ஸில் காணக் கிடைக்கிறது. அமேசான் ப்ரைமில் ரென்டலில் கிடைக்கிறது.

தான் தாயாக வேண்டாம் என்ற முடிவை பள்ளிப் பருவத்திலேயே எடுத்த சாரா தனது முடிவில் எவ்வளவு உறுதியாக இருக்கிறாள், தனது விருப்பத்தை எப்படி நிலைநாட்டுகிறாள் என்பதை நேர்த்தியாக சொல்லியிருக்கிறது இந்த ரொமான்டிக் காமெடி ஜானர் படம்.

நம் முடிவுகளை புற அழுத்தம் இன்றி நாமே எடுத்தால், நாம் சுதந்திரமானவர்கள். அதேபோல் நம் முடிவுகளை பிறர் மீது திணிக்காமல் இருந்தால் நாம் சர்வாதிகாரி அல்ல. யார் மீதும் எந்த முன்முடிவும் இல்லாவிட்டால், நாம் பண்புள்ள மனிதர்.

சாரா அப்படியானவள். அவளைப் பற்றி அலசுகையில் நாம் தாய்மை என்பது சாராவின் சாய்ஸாக இருந்ததுபோல் ஏன் ஒவ்வொரு பெண்ணின் சாய்ஸாகவும் இருப்பது அவசியம் என்பதைக் கண்டடையலாம்.

சாரா வின்சென்ட் (அன்னா பென்) சினிமா இயக்குநர் கனவுகளைச் சுமக்கும் இளம்பெண். சில படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து கொண்டே ஒரு த்ரில்லர் கதையை எழுதியிருக்கிறாள். அதைப் படமாக்கும் முயற்சியில் இருக்கும் அவளுக்கு ஜீவன் ஃபிலிப் (சன்னி வெய்ன்) அறிமுகமாகிறான்.

அக்கா வீட்டில் பேபி சிட்டிங் செய்து கொண்டிருக்கும் அவன், “குழந்தை பெத்துக்க மாட்டேன்னு சொல்ற பெண்ணைத்தான் திருமணம் செய்யணும்”-னு சொல்ல, அவனைப் பார்த்து சாரா புன்னகை புரியும்போது இருவர் மத்தியிலும் நட்பு தொடங்கி அது காதலாகிறது.

அதன்பின்னர் கல்யாணம் செய்து கொள்ள ஜீவன் வீட்டார் அழுத்தம் கொடுக்க, சாரா, “எனது முதல் படம் வெளியாக 2 வருடங்களாவது ஆகும். அதுவரை திருமணம் வேண்டாம்” என்பாள். “அதற்குள் என்னை வேறு யாருக்காவது அம்மா திருமணம் செய்து வைத்துவிடுவார்” என்று ஜீவனிடம், எந்தச் சலனமும் இல்லாமல் ‘செய்துகொள்’ என்கிறாள். சாராவுக்கு அவளுடைய லட்சியமே பிரதானம். அதன் குறுக்கே எது வந்தாலும் குற்றவுணர்ச்சியின்றி தட்டிவிடக் கூடியவள் தான்.

திருமணம் ஆனாலும் இருவரும் அவரவர் சுய விருப்பத்தில், லட்சியத்தில் குறுக்கிடாமல், பொறுப்புகளைப் பகிர்ந்து வாழலாம் என்று வாக்குறுதி கொடுக்கிறான் ஜீவன்.

நம்மைச் சார்ந்த பெண்கள் விடுதலை என்பது அவர்களின் முடிவுகளில் குறுக்கிடாமல் இருப்பதும், முடிந்தால் அந்த முடிவில் அவர்கள் உறுதியாக இருக்க உதவுவதுமே.

ஜீவன் ஃபிலிப் அந்த வகையில் சாராவுக்கு ஒரு நல்ல துணைவனாக இருக்கிறான். எல்லாம் சரியாகச் செல்கிறது. ஓராண்டுக்குப் பின்னர் சாரா கர்ப்பமாகிறாள். அதை மருத்துவரும் உறுதி செய்கிறார். ஆனால், சாரா உடனே மருத்துவரிடம் “இது ஒரு விபத்து. நாங்கள் திட்டமிடவில்லை. எனக்கு இந்தக் குழந்தை வேண்டாம்,” என்று தன் நிலைப்பாட்டில் சிறிதும் விலகாதவளாகக் கூறி விடுகிறாள்.

ஜீவனுக்கு ஏன் பெற்றுக் கொள்ளக்கூடாது என்ற ஆசை, ஜீவனின் குடும்பத்தாருக்கு வம்ச விருத்தி மகிழ்ச்சி, சாராவின் தாய்க்கு கடவுளுக்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றும் காலம் வந்துவிட்டதாக ஆசுவாசம். இவர்கள் மத்தியில்தான் சாரா தன் கர்ப்பத்தை கலைத்தாக வேண்டும்.

இந்திய மருத்துவக் கருக்கலைப்புச் சட்டம், 1971 (Medical Termination of Pregnancy Act, 1971)-ன் படி, குழந்தை வேண்டாம் என்று முடிவுசெய்த பிறகு உருவாகிற கருவால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ஏற்படும் மன உளைச்சல், அவரது மன நலத்தைப் பாதிக்கும் என்பதால், அந்தக் கருக்கலைப்பை சட்டம் அனுமதிக்கிறது.

சட்டம் அனுமதிக்கும் ஒன்றை குடும்பம் எப்படி அணுகுகிறது என்பதை சாரா’ஸ் (Sara's) நேர்த்தியாக அணுகியிருக்கிறது.

கருவைச் சுமக்க வலியுறுத்தும் மாமியாரிடம், “உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுடைய இரண்டு குழந்தைகளை வளர்ப்பதைத் தவிர நீங்கள் உங்களுக்காக என்ன செய்து கொண்டீர்கள்?” என்று கேட்டு தன் முடிவின் முக்கியத்துவத்தை உணர்த்துவாள்.

குழந்தை வேண்டாம் என்று சேர்ந்தே எடுத்த முடிவை மாற்றிக் கொண்ட ஜீவன், மவுனியாகிப் போனாலும் காதல் கணவனுக்காக சமரசம் செய்யாமல் தன் முடிவில் உறுதியாக இருப்பாள்.

இந்த விஷயத்தில் ‘எல்லோரும் போல் அப்பா இல்லை’ என்று நினைத்தது என் முட்டாள்தனம் என்று சொல்லும்போது சுதந்திரத்துக்கு எல்லை வகுத்து வைத்து போலி வேஷம் போடுவோரின் மனசாட்சியை உலுக்குவாள்.

இறுதியாக சாரா தனது முடிவை செயல்படுத்துவாள். “கருவுறுதல் இருவரும் விரும்பி, திட்டமிட்டு, எதிர்பார்த்து நடக்காவிட்டால் அது விபத்துதான். தாய்மைக்கு தயாராகாமல் தாயாகக் கூடாது. எல்லோரும் தாயாக வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. தாய்மையைச் சுற்றி நிறைய பொறுப்புகள், தியாகங்கள் உள்ளன. மோசமான பெற்றோராக இருப்பதைவிட பெற்றோர் ஆகாமல் இருப்பது நல்லது. சாரா தாயாக வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு அவளுடையது. கருக்கலைப்பு முடிவு அவளுடையதே. உன் உடல்; உன் உரிமை” என்று மருத்துவர் கவுன்சிலிங் வழங்குவார்.

சில காலத்துக்குப் பின் சாராவின் படம் வெளியாக, ஃபர்ஸ்ட் டே ஃப்ர்ஸ்ட் ஷோ ரியாக்‌ஷனுக்காக ஜீவன் தியேட்டர் வாசலில் பரபரப்பாக காத்திருப்பான். கிட்டத்தட்ட முதல் குழந்தைக்கான எதிர்பார்ப்போடு. சாராவின் வெற்றியை மொத்தக் குடும்பமே கொண்டாடும்.

முதல் முத்தத்தில் தொடங்கி தாயாக வேண்டாம் என்ற முடிவு வரை சாரா எதற்குமே தயங்காதவள். எல்லாவற்றிலும் உறுதியாக இருப்பவள்.

ஒரு பெண் தாயாக வேண்டாம் என்பதை எந்தவித குற்றவுணர்வுக்கும் ஆளாகமல் அனுபவிப்பதை இந்தச் சமூகம் எப்போது இயல்பெனக் கருதுகிறதோ அன்று ‘விடுதலை என்பது ஒருவர் அவர் விருப்பத்தை தேர்ந்தெடுப்பதை அனுமதித்தலில் இருக்கிறது’ என்பது நிரூபணமாகிவிடும்.

தாய்மை பற்றி பேசுகையில் எனக்கு இன்னும் இரண்டு படங்களையும் பட்டியலிடத் தோன்றுகிறது. முதலாவது Mimi (மிமி). சாரா’ஸ் வெளியான அதே 2021-ல் வெளியான இந்தித் திரைப்படம். நெட்ஃப்ளிக்ஸில் காணக் கிடைக்கிறது.

சாராவைப் போலத்தான் மிமி-யும் (க்ரித்தி சனோன்) சினிமா கனவை துரத்திக் கொண்டிருந்தவள். அவள் கனவுக்கு பணம் தேவைப்பட, வாடகைத் தாய் (சரகஸி) வலைக்குள் சிக்குகிறாள் மிமி. ‘உங்களுக்கு குழந்தை, எனக்குக் காசு’ என்று டீல் பேசி வெளிநாட்டு தம்பதியின் கருவைச் சுமக்கும் மிமி-க்கு பேரிடியாக வருகிறது பயாலாஜிக்கல் பெற்றோரின் திடீர் முடிவு. டவுன் சிண்ட்ரோம் இருக்கிறது என்ற கணிப்பால் குழந்தை வேண்டாம் என்று சொல்லி ஓடிவிடுகின்றனர் அவர்கள்.

‘அழகான ஆண் குழந்தை’ என்பதால் எல்லாத் தவறுகளையும் மன்னித்து குழந்தையை ஏற்றுக் கொள்கின்றனர் மிமி-யின் குடும்பத்தினர்.

பெற்றவர்கள் ஓடிவிட்டனர், நானும் உதறிவிட்டால் இக்குழந்தை அநாதையாகிவிடும், நானே வளர்க்கிறேன் என்ற மிமி-யின் நிபந்தனையற்ற அன்பை கேலிக்கு, கேள்விக்கு உள்ளாக்கவில்லை. ஆனால், 4 ஆண்டுகளுக்குப் பின் குழந்தைக்கு வெளிநாட்டு பெற்றோர் உரிமை கோரி வரும்போது வீட்டை விற்று வழக்கை நடத்த முன்வரும் பெற்றோர், முன்னரே மிமி-யின் கனவுக்காக ஏன் வீட்டை விற்றுப் பணம் கொடுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.

சாரா அபார்ஷன் முடிவுக்கு முன்னால் தன் தந்தையிடம் பேசும்போது, “உன் படத்துக்கான கதை எழுதுகையில் எத்தனை பேரிடம் வேண்டுமானால் யோசனைகள் கேட்கலாம், ஆலோசனை செய்யலாம். ஆனால் க்ளைமாக்ஸ் நீ எழுதியதாக இருக்க வேண்டும்,” என்பார். சாராவின் சாய்ஸுக்கு அது உத்வேகம் தரும்.

மிமி-யின் கனவுகளுக்கு குடும்பம் உறுதுணையாக இருந்திருக்க வேண்டும். அழகான ஆண் குழந்தை என்பதால் ஏற்றுக் கொண்டாலும், சரகஸி மூலம் பிறந்த குழந்தை என்ற உண்மையை அவள் சொன்ன பிறகாவது சட்டபூர்வமான அடுத்த நடவடிக்கை பற்றி ஆலோசித்திருக்கலாம். ஒரு தவறிலிருந்து விடுபடும் அனைத்து உரிமையும் மிமி-க்கு உள்ளது.

சாராவுக்கு தாய்மை ஒரு சாய்ஸ், மிமி-க்கு தாய்மை உணர்வுபூர்வ, குடும்ப, சமூக அழுத்தம்.

கருக்கலைப்பில் மட்டுமல்ல, சரகஸிக்குள் இருக்கும் ஏமாற்று வலை, மணமுறிவுக்குப் பின்னர் குழந்தையை கணவர் அவரது குடும்பம் பராமரிப்பில் குற்றவுணர்வின்றி அனுப்பிவைத்தல் என எல்லா வகையிலும் தாய்மையிலிருந்து விடுபடும் உரிமை சமமானதாக இருக்க வேண்டும். எனினும் வளர்ந்த குழந்தையின் கஸ்டடியில் குழந்தையின் விருப்பமே பிரதானம் என்பது குறிப்பிடத்தக்கது.

தாய்மை என்பது செல்ஃபோனில் வரும் ‘டீஃபால்ட் செட்டிங்’ அல்ல. குழந்தை வேண்டாம், பெற்றோராக வேண்டாம் என்ற முடிவுகள் திருமணம் என்ற சமூக அமைப்பின் மீதான பார்வையை மாற்றி எழுதத் தொடங்கியிருக்கிறது எனலாம்.

தாய்மை அடைதல் மீதான விருப்பத்தை குற்றமென்று சொல்ல முடியாது என்று ஆரம்பித்திலேயே சொல்லியிருந்தேன். அதற்கு சாட்சிதான் மிமி வளர்க்கும் குழந்தையின் வெளிநாட்டு பயாலாஜிக்கல் தாய் சம்மர்.

சரகஸி மூலம் குறைந்த செலவில் குழந்தை பெற்றுக் கொள்ள இந்தியாவை தேர்வு செய்யும் அந்தப் பெண், மிமி-யின் வாழ்க்கையில் விளையாடியிருந்தாலும் இறுதியில் இன்னொரு இந்தியக் குழந்தையை தத்தெடுத்துச் செல்வாள். அப்போது அவள், “பெற்றோராக இருக்க ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ளத்தான் வேண்டுமென்பதில்லை என்பதை உனைப் பார்த்துப் புரிந்து கொண்டேன்,” என்பாள்.

இந்த இரண்டு படங்களையும் அலசியதின் ஒரு பகுதியாக பெற்றோராக இருத்தல் எத்தகைய கூட்டுப் பொறுப்பு, தத்தெடுத்தல் (அடாப்ஷன்) அதுவும் இன்டர்னேஷனல் அடாப்ஷன் என்பது எத்தகைய சவாலானது என்பதைப் பற்றிப் பேசும் ‘A Mosquito in the Ear’ - 2026 படத்தை தொட்டுச் செல்வதும் பொருத்தமாகும் எனக் கருதுகிறேன்.

சாரா தாய்மையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள், மிமி பல்வேறு புறக் காரணங்களால் தாய்மையில் சிக்கிக் கொண்டாள், ‘A Mosquito in the Ear’ டேனிலியா தாய்மையை விரும்பி, அடாப்ஷனுக்கு தயாராகி அதில் உள்ள சவால்களை எதிர்கொண்டு குழந்தையின் அன்பை வெல்கிறாள்.

சில நாட்கள் முன்னர் வரை யூடியூபிலேயே காணக் கிடைத்த இந்தப் படம் இப்போதைக்கு இந்தியாவில் எந்த தளத்திலும் ஸ்ட்ரீம் ஆகவில்லை.

பெற்றோராக இருக்க ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டாம்தான், ஆனால் தத்தெடுக்கப் போகிற குழந்தையுடன் பிணைப்பை ஏற்படுத்துவதும் அவசியம்.

நான் தாயாக வேண்டும். அதற்கு நான் ஒரு குழந்தையை தத்தெடுக்கப் போகிறேன் என்று முடிவு செய்யும் அமெரிக்கப் பெண் டேனிலியா, இந்தியாவில் கோவாவில் இருக்கும் ஒரு காப்பகத்தில் உள்ள சார்வாரி என்ற 4 வயது குழந்தையை தத்தெடுக்க கணவர் ஆண்ட்ரூவுடன் வருகிறாள்.

குழந்தையுடன் உணர்வுபூர்வ பிணைப்பை ஏற்படுத்த டேனிலியா எடுக்கும் முயற்சி. அதில் அவள் காட்டும் அன்பு, அக்கறை, பொறுமை, நிதானம். கணவர் ஆண்ட்ரூவை தத்தெடுப்புக்கு உண்டான பொறுப்புகளுக்குப் பழகவைத்தல் என்று ஒரு முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

அமெரிக்க தம்பதி டேனிலியா - ஆண்ட்ரூவுக்கு உதவும் கன்னியாஸ்திரியும், சர்வதேச அளவில் அடாப்ஷனில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களை நேர்த்தியாக எடுத்துரைக்கிறார்.

சார்வாரியின் நம்பிக்கையைப் பெற டேனிலியா காட்டும் மெனக்கிடல்களும், ஒரு குழந்தையின் அத்தனை பிடிவாதங்களையும் சகித்துக் கொள்வதும் தாய்மைக்கு தயார்படுத்திக் கொண்ட ஒரு பெண்ணின் பொறுமைக்கான சாட்சிகள்.

தன்னை தத்தெடுத்தவர்களின் பாஷை புரியாமல், “அவர்கள் பேச்சு எனக்கு காதில் கொசு ரீங்காரமிடுவதுபோல் இருக்கிறது” என்று சொன்ன குழந்தை அடுத்த சில நாட்களில் அவர்களோடு அமெரிக்கா செல்ல மனதளவில் ஆயத்தமாகியிருக்கும்.

தாய்மை என்பது ஒரு பெண்ணின் சுய விருப்பம். அது தனிப்பட்ட பொறுப்பு அல்ல. பேரன்ட்ஹுட் என்ற கூட்டுப் பொறுப்பு. தாய்மையை பெண்ணின் அடையாளமாக்கி புனிதப்படுத்தி, அதன் சுமைகளை எல்லாம் தள்ளிவிட்டுவிட்டு, குழந்தையின் பெயருக்கு முதல் எழுத்து மட்டும் கொடுக்கும் போக்கை சமூகம் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

| தேவதைகள் தொடர்ந்து வலம் வருவர் |

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in

SCROLL FOR NEXT