ஓடிடி விமர்சனம்

All We Imagine As Light: இளைப்பாறுதல் தேடும் மனிதிகள் பார்வதி, பிரபா, அனு | திரை தேவதைகள் 32

பாரதி ஆனந்த்

புலம்பெயர்ந்தோர், அகதிகளின் வேதனைகளை கவிதைகளாக வடித்து சர்வதேச கவனத்தை ஈர்த்தவர் சோமாலிய - பிரிட்டிஷ் பெண் கவிஞர் வார்சன் ஷிரே. அவர், ‘ஹோம்’ (Home) என்ற தனது கவிதையில், “வீடென்பது ஒரு சுறாவின் வாயாக மாறாத வரை யாரும் வீட்டைவிட்டு வெளியேறுவதில்லை” - என்று எழுதியிருப்பார்.

அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறியோர் அவலத்தைச் சொல்லவே ஷிரே இந்த வரிகளை எழுதியிருந்தாலும் கூட, வேலைக்காக நகரங்களுக்கு, சில நேரம் வெளிநாடுகளுக்கு புலம்பெயரும் வர்க்க ரீதியில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த சில பெண்களின் பிழைப்போடு இதைப் பொருத்திப் பார்க்கலாம்.

சுறாவின் பிளந்த வாயாக மாறிப்போன அவர்களின் வீட்டாருக்கு இரை போடவோ, சில நேரங்களில் அதிலிருந்து தன்னை மட்டும் விடுவித்துக் கொள்ளவோ புலம்பெயர்ந்தவர்களாகவே அவர்களில் பெரும்பாலானோர் இருக்கிறார்கள்.

மதத்தால், சாதியால், வர்க்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை அதிகமாகச் சுமப்பது என்னவோ பெண்கள்தான். புலம்பெயர்வோரிலும் கூட ஆண்களைவிட பெண்களுக்கே இன்னல்கள் அதிகம். அது வெறுமனே பிழைத்துக் கிடக்க உதவும் அமைப்புசாரா தொழிலாக இருந்தாலும், இல்லை இன்னும்பிற தொழில்களாக இருந்தாலும் சரி!

இந்திய நகரங்களில் நவ நாகரிகம் வலுவாக நங்கூரமிட்டிருந்தாலும் கூட அது பெண்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான வாழ்விடமாக இருப்பது இல்லை.

வர்க்கம்... ஒரு பெண் எந்த மாதிரியான வாழ்க்கையை வாழ முடியும் என்பதைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணி!

2024-ல் வெளியான ‘All We Imagine As Light’ திரைப்படம் நாகரிக உலகில் மெட்ரோ நகரங்களில் சாதாரண வர்க்கப் பெண்கள், அதுவும் புலம்பெயர்ந்த பெண்கள் எதிர்கொள்ளும் அக, புறச் சவால்களைப் பற்றிப் பேசுகிறது. பெண் இயக்குநர் பாயல் கபாடியாவின் இந்தப் படம் ‘கான்’ (Cannes) திரைப்பட விழாவில் ‘கிராண்ட் ப்ரிக்ஸ்’ விருது பெற்றது. டிராமா ஜானரிலான இப்படத்தை நீங்கள் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் காணலாம்.

படத்தின் நாயகிகள் பார்வதி, பிரபா, அனு. முறையே 50+, 30+ 20+ என்று அவர்களின் வயதை ஊகிக்கலாம். மூவருமே மும்பை நகருக்கு புலம்பெயர்ந்தவர்கள் தான். பிரபாவும், அனுவும் கேரளத்தில் இருந்து வந்த செவிலியர். மும்பை மட்டுமல்ல, உலகம் முழுவதும் புலம்பெயர்ந்துள்ள லோயர் மிடில் க்ளாஸ் கேரள நர்ஸ்களின் பிம்பங்களாகக் கூட இவர்களை நாம் உள்வாங்கிக் கொள்ளலாம். முதுமையை தொட்டுவிட்ட பார்வதி மகாராஷ்டிராவின் குக்கிராமத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்.

‘வாழ்வான வாழ்வு வரும்’ என்ற நம்பிக்கையில் நகரத்துக்கு புலம்பெயர்ந்த அவர்கள் இழந்ததும், பெற ஏங்குவதும், தங்களுக்கான இளைப்பாறுதல் என்று அவர்கள் வகுத்து வைத்ததும் பின்னர் அதன் மீது ஏற்படும் புரிதலும், உண்மையான இளைப்பாறுதலைக் கண்டடைவதும்தான் படத்தின் சுருக்கம்.

இவர்களின் ஊடாகத்தான் புலம்பெயர்ந்த பெண் தொழிலாளர்களின் உணர்வுகள், நிலத்தின் மீதான உரிமைப் போராட்டம், கூடவே பெண்களின் உள்ளார்ந்த உணர்வுகள் பற்றிப் பேசப்பட்டிருக்கிறது.

படத்தில் பிரபாவாக கனி குஸ்ருதி, அனுவாக திவ்ய பிரபா, பார்வதியாக சாயா கதாம் ஆகியோர் நடித்திருக்கின்றனர். நடிப்பின் அழுத்தத்தில் ஒருவருக்கொருவர் விஞ்சி நிற்கின்றனர்.

புலம்பெயர்தல் ஒரு சமூகப் பிரச்சினை. தனியாக ஆழமாகப் பேசப்பட வேண்டிய பிரச்சினை என்றால், ஒரு பெருநகரத்துக்கு புலம் பெயரும் பெண்களின் பிரச்சினையும் அதே ஆழத்தோடு அணுகப்பட வேண்டியதுதான்.

உண்மையைச் சொல்லப் போனால் பெண்களுக்கு அன்றாடம் வீட்டிலிருந்து பணியிடத்துக்குச் சென்று திரும்புவதும் கூட சிறிய புலம்பெயர்தல் தான். ஏனெனில், ஒரே நாளில் பெண்கள் வீட்டிலும், பயண நேரத்திலும், அலுவல் இடத்திலும் பல்வேறு ரோல்களையும், அது தரும் சவால்களையும் நேர்த்தியாக ஏற்றாக வேண்டும். ஒரு நாளைக்குள் ஓராயிரம் உணர்வுகளை அந்த வாழ்தல் தாங்கியிருக்கும்.

ஏன் ஆண்களும் தானே வேலைக்குச் செல்கிறார்கள் என்று கேட்கலாம். ஆம், ஆனால் அவர்களின் சவால்கள் வேறு. பெண்களுக்கு சவால்களை எதிர்கொள்வதிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால் அது பேசப்பட வேண்டியதாக இருக்கிறது.

கதைப்படி பிரபாவின் கணவர் திருமணமான சில நாட்களில் வெளிநாடு சென்றுவிடுகிறார். அதிலிருந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக கணவனுடன் பேச்சளவில் கூட தொடர்பில்லாமல் வாழ்கிறாள் பிரபா. கணவருடனான தொலைபேசி தொடர்பு முயற்சிகள் கூட தோற்றுப் போக, அவன் அனுப்பியதாக வந்து சேரும் ரைஸ் குக்கரை அவனை நினைத்துக் கொண்டு வாரி அணைத்துக் கொள்வதுதான் அவளுடைய அதிகபட்ச ஸ்பரிஸ மகிழ்ச்சி வாய்ப்பாக இருக்கிறது.

பிரபாவின் ஏக்கம் கணவரின் பிரிவைவிட, தன்னை மறந்துபோன அவனுக்காக தன் வாழ்க்கையை சிறைவைப்பதா அல்லது தன்னுள் தீயாக இருக்கும் காமத்துக்கு வடிகால் தேடுவதா என்ற தவிப்பாகவே இருக்கிறது.

இருந்தாலும், தன்னுடன் பணிபுரியும் கேரளாவிலிருந்து புலம்பெயர்ந்த மருத்துவர் மனோஜின் கவிதை விடு காதல் தூதையும், ஏன் வெளிப்படையான காதல் கூறுதலையும் கூட ‘ஐ ஆம் மேரிட்’ என்று ஏற்க மறுக்கிறாள். என்றாவது ஒருநாள் கணவன் வருவான், ஊரில் கணவனோடு மகிழ்ந்திருந்த நாட்கள் மீண்டும் வசந்தமாக வரும் என்று நம்புகிறாள் பிரபா.

லோயர் மிடில் க்ளாஸ், மிடில் க்ளாஸ் பெண்கள் மீது அந்த அமைப்பு சில எதிர்பார்ப்புகளை, கட்டுப்பாடுகளை சுமத்தியிருக்கும். உண்மையில் அவற்றுக்கு எழுத்துகள் கொண்ட ‘ரூல் புக்’ அடித்து மிரட்டும் ‘லத்தி’-யோ இல்லை. என்றாலும் சில பெண்கள் அதற்குக் கட்டுப்பட்டே கிடப்பார்கள்.

பிரபா அப்படிப்பட்டவள்தான். அவளுக்குத் தேவை ஒரு துணை. ஆனால், அவள் ஒரு மாய வேலிக்குள் தன்னை சிறைவைத்துக் கொண்டிருப்பாள்.

அனு, முஸ்லிம் இளைஞர் ஷியஸை காதலிக்கிறாள். சதா சர்வகாலம் தன் திருமணப் பேச்சை மட்டுமே தூக்கிக் கொண்டு ஃபோனில் பேசும் குடும்பத்துக்கு தன் காதலை புரியவைத்து ஷியாஸை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற சவால் அவளுக்கு.

அனுவின் குடும்பம். வர்க்கரீதியாக பின் தங்கியிருந்தாலும் மதத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறது. அவளால் முஸ்லிம் இளைஞனைப் பற்றி வீட்டில் எளிதில் சொல்லிவிட முடியாது. அதற்காக அவர்கள் கடைவிரித்த சந்தையிலிருந்து ஒருவனைத் தேர்ந்தெடுக்கவும் முடியாது.

ஏனென்றால், அனுவுக்கு குடும்பத்தால் ஏற்பாடு செய்யப்படும் திருமணங்களில் நம்பிக்கையில்லை. அந்நியருடன் எப்படி வாழ்வது என்பது அவளுக்கு புரியாத புதிர்.

அதை சந்தேகமாகக் கேட்கும்போது, “சில நேரங்களில் காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்கூட நமக்கு அந்நியமானவர் போல் நடந்து கொள்ளலாம்” என்று பிரபா சொல்வாள்.

உறவுச் சிக்கல்களுக்கு அடிப்படையே அன்பு, அக்கறை உணர்வுகளற்று ஒருவருக்கொருவர் அந்நியமாகிப் போதல் தான். இந்தியக் குடும்பங்களில் பல தம்பதிகள் ஒரு கூரையின் கீழ் வாழும் இரு அந்நியர்களாகத் தான் இருக்கிறார்கள். ஒருவருக்காக இன்னொருவர் சமைத்தலும், சம்பாதித்தலும் மட்டும் தான் பிணைப்பாக இருக்கிறது.

ஆனால், பிரபாவைப் போல் அல்லாது அனுவுக்கு காதலும், காமமும் முக்கியம். அவளுக்கு நகரத்தில் தன் இணையுடன் காதல் பறவைகளாக உலா வர வேண்டும். வானத்துக் கிள்ளைகள் போல் எந்தவித தடங்கலும் இல்லாமல் கொஞ்சிக் குலாவி வாழ வேண்டும். குடும்பத்தின், சமூகத்தின் பார்வைகள், முன் தீர்மானங்கள் இன்றி ஷியாஸுடன் தன் வாழ்க்கையை வாழ வேண்டும்.

தவிக்கும் பிரபா, ஏங்கும் அனு என்று நகரத்து வாழக்கையில் தத்தளிக்கிறார்கள். இவர்களுடன் பயணிக்கும் 50+ வயதை எட்டிய பார்வதிக்கு, பிழைக்க வந்த மும்பை மெட்ரோ நகரில் 22 ஆண்டுகளாக வாழ்ந்த இடத்தை கார்ப்பரேட் நிறுவனத்திடமிருந்து காப்பாற்ற வேண்டிய போராட்டம்.

பார்வதி கலந்து கொள்ளும் அமைப்புசாரா உழைப்பாளர்களின் உரிமைப் போராட்டக் கூட்டத்தில், “இந்த நகரை உருவாக்கிய கைகள் நம்முடையதே; நமக்கான உரிமையையும் நாமே நிலைநாட்டுவோம்” என்ற உத்வேகப் பேச்சைக் கேட்டு கைதட்டுகிறாள். ஆனால், நகரம் உண்மையில் அந்த எளிய மக்களின் உரிமைப் போராட்டங்களுக்கு வெற்றி மாலைகளைச் சூடுவதில்லை.

பார்வதியால் முடிந்தது எல்லாம், தனக்கு அநீதி செய்த கார்ப்பரேட் கட்டுமான நிறுவனத்தின் பேனர் மீது கல் வீசுவது மட்டுமே. அந்த பேனரில், ‘Class is a privilege. Reserved for the previleged’ என்று எழுதியிருக்கும்.

ஆம்! வர்க்கம் என்பது மேட்டுக்குடிகளுக்கான சலுகை. அது எழுப்பும் சுவர் மீது பொருளில்லாதோர் எரியும் கற்கள் எல்லாம் பாதிவழியில் சாம்பலாகும் விண்கற்கள் போன்றவை தான்.

கையறு நிலையில், மீண்டும் கிராமத்துக்கு திரும்பப்போவதாக சொல்லும் பிரபாவிடம் சொல்லும் பார்வதி, மும்பை நகரத்தின் உயர்ந்த கட்டிடங்களைக் காட்டி “இப்படி விண்ணை முட்டும் கட்டிடங்களைக் கட்டுவோர் தாங்கள் கடவுளாகி விடலாம் என நினைக்கிறார்கள்” என்பாள். அவள் சொல்லும் அந்த வார்த்தைகள் எல்லாம் பெருநகரிலும் அன்றாடம் நில உரிமைக்காகப் போராடும் மனித முகங்களாகவே தெரியும்.

நகரத்தில் பிழைக்க புலம்பெயர்ந்து வரும் மிடில் க்ளாஸ், லோயர் மிடில் க்ளாஸ் பெண்கள் சிலரின் நிலைமை இப்படியான போராட்டங்களில் தான் சிக்கிக் கொண்டிருக்கிறது.

மூன்று வெவ்வேறு வயதுடைய பெண்களின் வெவ்வேறு போராட்டங்கள் தான் கதைக்கரு என்றாலும் அடிப்படையிலும் எல்லாவற்றையும் பிணைப்பது அவர்களுக்குள் இருக்கும் சகமனிதி, சகோதிரிப் பாசம்.

தோல்விகளோடு, வேதனைகளோடு, ஏக்கங்களோடு இருக்கும் மூவருமே ஒருவொருக்கொருவர் ஆதரவாகவும், உதவியாகவும், ஆறுதலாகவும் இருக்கிறார்கள். வேரறுந்து நிற்பவர்களுக்குத் தானே அப்படிப்பட்ட நிற்கதியானவர்களின் துயர் தெரியும் என்பதுபோல்.

பெண்களுக்கிடையேயான நட்பு என்பது பெரும்பாலும், மற்றொரு பெண்ணின் தனிமையை, அவளது எல்லைகளை மதித்து அரவணைப்பதிலிருந்தே பிறக்கிறது. தேவைப்படும்போது இயற்கையைப் போல எந்த எதிர்பார்ப்புமின்றி தன் இருப்பின் ஆறுதலை பகிர்ந்து கொள்வதில் தான் அந்த நட்பு நீடித்து நிலைத்திருக்கிறது.

பார்வதியும், பிரபாவும், அனுவும் அப்படியான நட்பில் தான் இருக்கிறார்கள். அவர்களுக்குள் எல்லைகள் இருக்கிறது. பரஸ்பரம் மரியாதை இருக்கிறது. அதேவேளையில் தேவையெனில் ஒருவர் மீது இன்னொருவரின் அரவணைப்புக் கரங்களும் நீள்கிறது.

பார்வதியின் கிராமத்துக்குச் செல்லும் அனுவும், பிரபாவும் மதுவை சுவைப்பதும், அங்கு அனுவும், பார்வதியும் மெய்மறந்து ஆடும் நடனமும், அதன் பின்னணியில் வரும் இந்திப் பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பு நமக்கான ஞான உபதேசம்.

போதை நடனமும் ஞான உபதேமும் மொட்டைத் தலை முழங்கால் முடிச்சுபோல் உங்களுக்குத் தோணலாம். காட்சி அமைந்த இடமும், விதமும் அதைப் பார்க்கும்போது உங்களுக்குப் புரிதலை ஏற்படுத்தும்.

நல்ல சம்பாத்தியம், நல்லதொரு குடும்பம், சாதி, மதக் கோட்பாடுகளின்படி வாழ்தல், உண்மைக் காதல், நேர்மையான காமம் என்று சமூகம் வகுத்த எல்லைகளை அடைந்துவிடுதலே ஒரு பெண்ணுக்கான வெற்றி, அதுவே அவளுக்கான ஒளி என்று தீர்மானிக்கிப்பட்டிருக்கிறது. அதை சர்கஸ் ரிங் மாஸ்டர் போல் உருட்டி, மிரட்டி செய்ய வைக்கிறது குடும்பம்.

ஒருவேளை குடும்பம் சுறாவின் வாயைப்போல் இருக்கும்போது பெண்கள் புலம்பெயர்ந்தாலும், எத்தனை தூரத்துக்கு வேண்டுமானாலும் அந்தக் கடிவாளத்தை நீட்டக் கூடியதாகவே சாதி, மதம், வர்க்க அமைப்புகள் இருக்கின்றன.

வெகு சிலர் மட்டுமே நாம் உள்வாங்கிக் கொள்ளும் ஒளியெல்லாம் ஒளியல்ல, எல்லாம் மாயைதான் என்று உணர்கிறார்கள். மாயையில் இருந்து புலம்பெயர்தலே யதார்த்தம். அதுவே வாழ்தல். அந்த வாழ்தலை எட்டியவர்களாக பிரபா, அனு, பார்வதியை புரிந்து கொள்ளலாம்.

கடற்கரை ஒட்டிய திறந்தவெளியில் ஷியாஸுடன் இணைந்து கொள்கிறாள் அனு. யார், யாருக்கோ பயந்து தேக்கி வைத்த அத்தனை அன்பையும் அனுவும், ஷியாஸும் பரிமாறிக் கொள்கிறார்கள். அங்குதான், குடும்பத்தின் சம்மதத்தோடு, சமூகத்தின் அங்கீகாரத்தோடுதான் வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்ற தனக்குப் பிடிக்காத கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டு ஒரு எதிர்காலத்தை உணர்கிறாள் அனு. இனி அவள் அவளுடைய வீட்டாரின் அழைப்புகளைக்கூட ஏற்பாளா என்று தெரியாது.

அனுவையும், அவள் காதலனையும் நெருக்கமாகப் பார்க்கும் பிரபாவுக்கு தன் தேவை என்னவென்று தெளிவாகிறது. காத்திருத்தல் அல்ல, அதிலிருந்து விடுபடுதலே தேவை எனப் புரிந்து கொள்கிறாள்.

அந்தப் புரிதலோடு அமர்ந்திருக்கும் அவள் கடலில் இருந்து மீட்கப்பட்ட நபருக்கு முதலுதவி செய்யும் காட்சிகள் கவித்துவமானவை. அது உண்மையா, கற்பனையா என்று பார்வையாளர்கள் விரும்பியபடி எடுத்துக் கொள்ளலாம்.

பிரபாவின் தொடர்பில்லா கணவர் போலவே பேசும் அந்த ஆண் கதாபாத்திரம், “நான் வெளிநாட்டில் சிக்கிக் கொண்டேன். நான் ஒளியென்று எதை நினைத்தேனோ அது என்னை குருடாக்கிவிட்டது. இருட்டில் ஒளியை கற்பனை செய்கிறோம். இப்போது நான் உன்னுடன் புது வாழ்க்கையை வாழ நினைக்கிறேன். முன்புபோல் இருக்காது. இது சத்தியம்” எனக் கூறி பிரபா ஏங்கிய ஸ்பரிசங்களையும், முத்தங்களையும் கொடுக்கும்போது, “நான் உன்னை இனி எப்போதுமே பார்க்கவே விரும்பவில்லை” என்று கண்ணீர் வழிய பிரபா கூறுகிறாள். முற்றிலுமாக மனத்தாங்கல்களில் இருந்து விடுபடுகிறாள் எனப் புரிந்து கொள்ளலாம். அதன் நீட்சியாக அனுவின் காதலை அங்கீகரிக்கிறாள்.

பெருநகரங்கள் எல்லாம் ‘கனவுகளின் நகரம்’ என்ற நம்பிக்கை மட்டும் மாயை அல்ல. நாம் எதையெல்லாம் ஒளி, வழிகட்டி என நினைத்துக் கொள்கிறோமோ, அவை எல்லாமும் கூட மாயைதான் என்று பிரபாவும், பார்வதியும், அனுவும் புரிந்து கொள்கிறார்கள்.

ஒவ்வொரு பறவையும் தாங்கள் இளைப்பாறும் கிளை எதுவென்பதை சுதந்திரமாக தீர்மானிப்பதுபோலத்தான் All We Imagine As Light-ன் பார்வதி, பிரபா, அனு ஆகியோர் வாழ்தலுக்காக தாங்கள் புலம்பெயர்ந்த நகரத்து பரபரப்பு, தங்களின் குடும்பம், ஊர், வர்க்கம், மதம் சுமத்தும் எதிர்பார்ப்புகளின் ஊடே தங்களுக்கு இளைப்பாறுதல் தரும் சரியான கிளைகளை தாங்களே தேடி அடைந்த மனிதிகள்.

அவர்களைப் போலவே நகரங்களில் ஏராளமான மனிதிகள் இளைப்பாறுதல் தேடிக் கொண்டிருக்கிறார்கள். சாதி, மத, வர்க்க பேதங்களைத் தாண்டி அதை நிச்சயம் கண்டடைவார்கள்.

| தேவதைகள் தொடர்ந்து வலம் வருவர் |

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in

SCROLL FOR NEXT