தமிழக அரசியல், இந்திய அரசியல் மற்றும் உலக அரசியல் என கிட்டத்தட்ட 1957-லிருந்து நடந்த முக்கிய நிகழ்வுகளை தொகுத்து இங்கே நான் பதிவு செய்து வருகிறேன். இதற்கிடையே கடந்த 26-ம் தேதி (நவ.26) இந்திய அரசியல் சாசன நாள் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. இதுகுறித்து மேலோட்டமாக சில தகவல்களை நான் முன்பே குறிப்பிட்டிருந்தேன். அதை சற்று விரிவாக உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். காரணம், இன்றைக்கு அரசியல் சாசனம் குறித்து எல்லோராலும் பேசப்படுகிறது. மக்களிடையே அரசியல் சாசனம் குறித்து பல்வேறு தகவல்கள் சமூக ஊடக தளங்களிலும் பகிரப்பட்டு வருகின்றன.
மேலும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், அரசியல் சாசனம் காப்போம் என்று சமீப காலமாக உரக்கப் பேசி வருகிறார். இதுதவிர காங்கிரஸ் தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணிக் கட்சிகளான திமுக, சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளும் அரசியல் சாசனம் குறித்து பேசி வருகின்றன. எனவே இதுகுறித்து சற்று விரிவாகப் பின்னோக்கிப் பார்க்க வேண்டியது அவசியம் என கருதுகிறேன்.
இந்திய அரசியல் சாசனம் 1949-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த நாளை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். இந்த அரசியல் சாசனத்தின் ஷரத்துகள் பல முறை திருத்தியமைக்கப்பட்டன.
அந்த வகையில் இந்தியாவில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்திய பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சியின்போது 42-வது அரசியல் சாசனத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதில் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படக் கூடிய வகையில் நீதிமன்றங்களின் அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளை சீர்குலைக்கும் வகையில் எல்லா முடிவுகள் எடுக்கும் அதிகாரம் பிரதமருக்கே என்றவாறு திருத்தத்தைக் கொண்டு வந்தார்.
இந்திரா காந்தியின் இந்த நடவடிக்கையை எதிர்த்து அன்றைய எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து ஜெயப்பிரகாஷ் தலைமையில் போராட்டத்தை மேற்கொண்டன. அன்றைய அரசியல் களத்தில் முக்கிய தலைவர்களாக இருந்த திமுக தலைவர் கலைஞர், அகிலேஷ் யாதவின் தந்தை முலாயம்சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ் போன்றோரும், சிபிஎம் கட்சியும் எதிர்ப்புக்குரல் எழுப்பினார்கள். அப்போதைய காலகட்டத்தில் இந்த திருத்தத்தை சிபிஐ கட்சி ஆதரித்தாலும் பிற்காலத்தில் தாங்கள் ஆதரித்தது தவறு என்று பட்டுண்டா மாநாட்டில் அக்கட்சி தெளிவுபடுத்தியது.
இந்தியா, பல்வேறு இனங்கள். மொழிகள், கலாச்சாரங்கள் கொண்ட மக்கள் வாழும் மாபெரும் நாடாக உள்ளது. கிட்டத்தட்ட 140 கோடி மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. உலகத்திலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும் விளங்குகிறது. 140 கோடி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய மாபெரும் பொறுப்பு இந்தியாவை ஆளும் கட்சிக்கும், மாநிலங்களை ஆளும் பிராந்திய கட்சிகளுக்கும் உள்ளது. பல மாநிலங்களின் மக்கள் தொகை ஐரோப்பிய யூனியன் நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகமாக இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டினுடைய மக்கள் தொகை ஜப்பானை விட அதிகம்.
ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்து இந்தியா விடுதலை பெற்ற பின் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 1949, நவ.26-ம் தேதி அரசியல் நிர்ணய சபையால் அங்கீகரிக்கப்பட்டு 1950, ஜன.26 முதல் அமல்படுத்தப்பட்டது. இதற்கு முன்னதாக கிழக்கிந்திய கம்பெனி ஆளுகையின் போதே 1773 காலகட்டத்தில் அரசியல் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
பிளாசி போர், பக்சார் போர் போன்ற யுத்தங்களில் பிரிட்டிஷார் வெற்றி பெற்ற பின்னர், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின், வங்காளத்தின் முதல் கவர்னர் ஜெனரலாக வாரன் ஹேஸ்டிங்ஸ் பொறுப்பேற்றார். அவரால் 1773-ல் கொண்டு வரப்பட்ட‘ரெகுலேட்டிங் ஆக்ட்’தான் இன்றைய அரசியல் சாசனத்தின் மூலமாகும். அதைத் தொடர்ந்து 1786, 1793, 1813, 1833, 1853, 1854-ஆம் ஆண்டுகளில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதைத் தொடர்ந்து, மாண்டேகு - ஜெம்ஸ்போர்டு சீர்திருத்தத்தின் அடிப்படையில் 1935-ம் ஆண்டு ‘கவர்ன்மென்ட் ஆஃப் இந்தியா’ சட்டம் இயற்றப்பட்டது. இதுதான் இன்றைய அரசியல் சாசனத்தின் அடிப்படை.
இந்தியா விடுதலை பெறவிருந்த காலகட்டத்தில் 1946-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் பிராந்திய அவைகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட 389 உறுப்பினர்கள் ஒன்றுகூடி இந்தியாவுக்கான அரசியல் சாசனத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார்கள். இதற்கிடையே, இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு உறுப்பினர்களின் எண்ணிக்கை 289 ஆகக் குறைந்தது. இவர்களைக் கொண்டு அரசியல் சாசனத்தை எப்படி உருவாக்குவது என்பது குறித்து விவாதங்கள் நடைபெற்றன. முடிவில் 167 நாட்களில் 11 முறை உறுப்பினர்கள் கூடி, 1 லட்சத்து 45 ஆயிரம் வார்த்தைகளைக் கொண்ட 395 பிரிவுகள், 8 அட்டவணைகள் என மிகப் பெரும் அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டது. இதை உருவாக்குவதற்கு அன்றைக்கு ஆன செலவு ரூ.64 லட்சம்.
இவ்வாறு அரும்பாடுபட்டு உருவாக்கிய அரசியல் சாசனங்கள் இன்றைய நடைமுறைக்கு உகந்ததாக அமைந்ததா என்பதைப் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள என்னுடைய கடந்தகாலப் பதிவுகளின் மூலம் நீங்களே அறிந்து கொள்ளலாம்.
அரசியல் சாசனத்தில் மண்வாசனை!
இந்தியா விடுதலைப் பெற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்ததும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஏற்பட்ட நிறை, குறைகளை அறிய ஒரு குழு அமைக்கப்படும்; நாட்டின் பல்வேறு சவால்களைச் சந்திக்கக்கூடிய வகையில் அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாற்றம் செய்யப்படும் என, 1997 காலகட்டத்தில் பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகளின் தேசிய செயல் திட்டத்தில் குறிப்பிடப்பட்டது.
அரசியல் சட்டத்தில் சூழ்நிலைக்கேற்றவாறு திருத்தம் தேவை என முன்னாள் குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி, என்.டி.ராமாராவ், பி.கே.நேரு மற்றும் பல்வேறு அறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த காலங்களில் ஏற்பட்ட அனுபவங்கள், நாம் சந்தித்த பிரச்சினைகள் குறித்து ஆழ்ந்து பரிசீலனை செய்து புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை வகுத்துக்கொள்ள வேண்டிய காலம் வந்துள்ளது என குடியரசுத் தலைவராக இருந்தபொழுது, நீலம் சஞ்சீவ ரெட்டி தமது சுதந்திர நாள் செய்தி ஒன்றில் தெளிவுபடுத்தினார்.
அரசியல் சட்டத்தை வடிவமைத்த டாக்டர் அம்பேத்கர், ‘மக்களுடைய பிரச்சினைகளுக்கு ஏற்ப திருத்தங்கள் செய்யலாம்’ என்று கூறினார். அரசியல் சட்டத்தைத் திருத்த முடியாது எனப் பழைமைவாதம் பேசுவது அர்த்தமற்றது எனக் கூறியுள்ளார் நீதிபதி கிருஷ்ணய்யர். இன்றுள்ள இந்தியாவின் நிலைக்கு ஏற்றவாறு புதிய அரசியல் அமைப்புச் சட்டம் அல்லது தற்போதைய சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வருவது தேவையான, தலையாய பணியாக இருக்கிறது.
ஊழல், நிலையற்ற ஆட்சி, பொருளாதாரச் சீர்குலைவு போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கின்ற வகையில் நாட்டின் அரசமைப்புப் பணிகள் இருக்க வேண்டும். அரசில் என்ன நடைபெறுகிறது என்பதை ஒளிவு மறைவின்றி மக்கள் தெரிந்து கொள்வதை அடிப்படை உரிமையாக்க வேண்டும். மக்களவை, சட்டமன்றத் தொகுதிகளை பல ஆண்டுகளாகியும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு பிரித்து நிர்ணயம் செய்யப்படவில்லை. தேர்தல் தில்லுமுல்லுகளுக்கு தீர்வு கண்டால்தான் நாம் செல்கின்ற பாதை சரியாக இருக்கும்.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பற்ற நிலை, விலைவாசி ஏற்றம், அரசு நலப் பணிகளில் மெத்தனம், பல்வேறு தேசிய இனப் பிரச்சினைகள், தீவிரவாதம் போன்ற சிக்கல்களை இன்றைக்கு இந்தியா எதிர்நோக்கியுள்ளது.
இந்நிலையில் தற்சமயம் விவாதிக்கப்பட்டு வரும் ‘தேசிய அரசு’ இந்தியாவுக்கு சாத்தியம்? அதுபோன்று இந்தியாவிற்கு அதிபர் ஆட்சி முறை வேண்டுமா? அல்லது இன்றைய நாடாளுமன்ற ஆட்சி முறையே நீடிக்கலாமா? என்று இந்தியாவின் அடிப்படை அமைப்புகளைப் பற்றி தினமும் விவாதங்கள் நடந்து வருகின்றன. இதற்கு விடை அளிக்கும் வகையில், இந்திய அரசியல் சாசனம் அமைய வேண்டும்.
இந்தியா கூட்டாட்சி அமைப்பா அல்லது கூட்டாட்சி கலந்த ஒற்றையாட்சி அமைப்பா? என்பதைத் தெளிவாக அரசியல் சாசனத்தில் தெரிவிக்க வேண்டும். இந்திய அரசியல் சாசனம் நெகிழாத் தன்மை கொண்டதா அல்லது நெகிழும் தன்மையுடையதா? என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.
அரசின் வழிகாட்டிக் கொள்கைகளை நீதிமன்றம் மூலம் எவ்வாறு நெறிப்படுத்தலாம் என்பதையும் அரசியல் சாசனம் திட்டவட்டமாகத் தெரிவிக்கவில்லை. மத்திய - மாநில உறவுகளைப் பற்றியும் மாநிலங்களுக்கு இடையே உள்ள நதிநீர்ச் சிக்கல்களை விரைவில் தீர்க்கவும் அரசியல் சட்டம் ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும். மத்திய - மாநில உறவுகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி சர்க்காரிய குழு, நீதிபதி ராஜமன்னார் குழு போன்ற குழுக்களின் பரிந்துரைகள் அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்.
அரசியல் சட்ட 356-ஆவது பிரிவைப் பயன்படுத்தி மாநில அரசுகளைக் கலைப்பது குறித்தும் ஆரோக்கியமான விவாதம் தேவை. நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்யவும், பிரதம அமைச்சரைக்கூட நீக்கவும், நாடாளுமன்றத்தைக் கலைக்கவும் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் இருந்தாலும், அவர் ஒரு சம்பிரதாயத் தலைவராகவே இருக்கிறார். பிரதம அமைச்சருக்கும், இந்தியக் குடியரசுத் தலைவருக்கும் உள்ள உறவை அரசியல் சாசனம் தெளிவுபடுத்தவில்லை. இதனால் பண்டித நேருவுக்கும், இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத்துக்கும் பல சமயங்களில் கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டன. நீதித்துறைக்கும் நாடாளுமன்றத்துக்கும் சில சமயங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன. திட்டக் கமிஷன் மற்றும் நிதிக் கமிஷன் பற்றிய பணிகள் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.
சிறையில் இருந்துகொண்டு ஜார்ஜ் பெர்னாண்டஸ், சிம்ரஞ்சித் சிங் மான் ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் சிறையில் உள்ளவர்கள் தேர்தலில் வாக்களிக்க இந்தியாவில் வாய்ப்பு இல்லை. சிறுபான்மையினர் நலன் வெறும் எழுத்துகளில் இல்லாமல் திட்டங்களில் வரவேண்டும். உண்மையான மதச்சார்பின்மை நாட்டில் நிலவி, அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ வழிவகுக்க வேண்டும்.
இன்றைக்கு இருக்கின்ற நமது அரசியல் சாசனத்தில் பல தெளிவின்மைகள் இருக்கின்றன. ஒரு நாட்டின் ஜீவநாடியாக உள்ள அரசியல் சாசனம், நாட்டை நடத்திச் செல்லும் வழிகாட்டியாக விளங்க வேண்டும். 1946-இல் அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள், இந்தியாவின் அனைத்துத் தரப்பு மக்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு, வயது வந்தவர்கள் அனைவரும் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படவில்லை.
ஒரு குறிப்பிட்ட மேல்தட்டு, கல்வி கற்றோர் என்ற அடிப்படையில், அரசியல் நிர்ணய சபைக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எனவே, இன்றைக்கு உள்ள இந்திய அரசியல் சட்டம் என்பது நாட்டின் அனைத்து மக்களின் பிரதிபலிப்பல்ல.
50 ஆண்டுக்குள்ளேயே 82-க்கும் மேற்பட்ட திருத்தங்கள் கொண்டு வரவேண்டிய காரணமே, இந்திய அரசியல் சட்டத்தில் சில தெளிவின்மைகள் இருப்பதால்தான் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அமெரிக்க அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு கிட்டதட்ட 210 ஆண்டுகள் ஆயினும், (1971-ஆம் ஆண்டு வரை) 26 சட்டத் திருத்தங்களே அதில் செய்யப்பட்டுள்ளன.
உலக அளவில் பார்த்தால் இந்திய அரசியல் சாசனம்தான் அதிகமான பிரிவுகளும், பக்கங்களும் அடங்கிய அரசியல் சாசனமாகும். இந்திய அரசியல் சாசனம் இங்கிலாந்தில் உள்ள அரசியல் மரபுகளையும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளின் அரசியல் சாசன பிரிவுகளையும் பின்பற்றி உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு அரசியல் சாசனமும் ஒரு புரட்சி அல்லது போராட்டம் ஆகியவற்றுக்குப் பிறகுதான் உருவாக்கப்படுகிறது. இந்திய அரசியல் சாசனம் விடுதலைப் போராட்ட உணர்வுகளால் ‘பன்மையில் ஒருமை’ என்ற தத்துவத்தின்கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், பல்வேறு மொழிகள், இனங்கள், கலாச்சாரங்கள் ஆகியவற்றை எல்லாம் ஒட்டுமொத்தமாக கட்டுக்கோப்பாகச் சேர்த்து வைக்கின்ற கருவியாக அரசியல் சாசனம் இருக்கவில்லை.
மாநில அரசு மீது மாற்றாந்தாய் மனப்போக்கோ, சட்டாம்பிள்ளைத்தனமோ இல்லாதவாறு மத்திய அரசின் அணுகுமுறை இருக்க அரசியல் சாசனம் உறுதி செய்யவேண்டும். சமுதாய ஏற்றத்தாழ்வு இல்லாமல் பார்த்துக்கொள்ளும் வகையில் அது அமைய வேண்டும். இந்தியாவினுடைய பிரச்சினைகள், கலாச்சாரம் மற்றும் மக்களின் தேவைகளை மனத்தில் கொண்டு மண்வாசனைகளையும் பிரதிபலிக்குமாறு நமது அரசியல் சாசனம் அமைய வேண்டும். நாட்டு மக்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிப்பதாக அது இருக்க வேண்டும்.
‘மற்ற நாடுகளின் அரசியல் சாசனப் பிரிவுகளை நாம் பயன்படுத்துவதைவிட, நமது கலாச்சாரம், நமது தேவைகளை அறிந்து நாம் நமது அரசியல் சாசனத்தை வகுக்க வேண்டும்’ என நாடாளுமன்ற முன்னாள் செயலர் சுபாஷ் கஷ்யப் கூறுகிறார்.
‘அரசியல் சட்டம் மனித குலம் வளம் பெறுவதற்காக உருவாக்கப்படுவதாகும். அது அரசமைப்புக்கு மட்டுமே உருவாக்கப்படுவதல்ல’ என்று ஒரு சமயம் அரசியல் அறிஞர் பி.கே. நேரு கூறினார்.
அரசியல் சாசனம் திருத்தம் காலத்துக்கேற்ப திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை இதைவிட எளிமையாக எப்படிச் சொல்ல முடியும்? (1998-ம் ஆண்டில் என்னுடைய பதிவு).
(தொடர்வோம்...)