தமிழக காங்கிரஸ் கோஷ்டி பூசல் வரலாறு - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 76

தமிழக காங்கிரஸ் கோஷ்டி பூசல் வரலாறு - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 76
Updated on
5 min read

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் தனித்தனி கோஷ்டிகள், பூசல்கள் இருப்பதாக இன்றைய அரசியலாளர்கள், பத்திரிகைகள் தொடர்ந்து எழுதி வருகின்றன. இந்தப் பிரச்சினை இந்தியா விடுதலைப் பெற்ற காலத்துக்கு முன்பிருந்தே இருந்து வருகின்றன.

1919, டிசம்பர் 27 முதல் 1920 ஜனவரி 1 வரை அமிர்தசரஸில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மட்டுமல்ல; அதற்கு முன்பு ஓமந்தூரார் சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சராகப் பதவியேற்றபோதே அவருக்கு எதிர்ப்பாளர்கள் தோன்றினர். அவர் முதல்வரான பின்பு சிலரின் சிபாரிசுகளுக்கு செவி கொடுக்காததால் கட்சிக்குள் பிரச்சினைகள் ஏற்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளானார் ஓமந்தூரார். பின்னர் அவரே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இன்றைக்கு சமூக நீதி என்று பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. ஆனால், அன்றைக்கு ஓமந்தூரார் ஆட்சிக் காலத்திலேயே சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தார். அவரது நடவடிக்கைகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின.

ஓமந்தூரார் சிக்கலில் மாட்டிக் கொண்டிருந்தபோது, பிராமணர்கள் ஆதிக்க எதிர்ப்பு கொள்கையைக் கடைப்பிடித்த பெரியார் கூட அவருக்கு ஆதரவாக ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. அன்றைய சூழலில் ஓமந்தூராருக்கும் காமராஜருக்கும் இடையே அவ்வளவாக நட்பு இருந்ததில்லை. அதேநேரம் ஓமந்தூராருக்கு ராஜாஜி ஆதரவாக இருந்தார். அப்படியிருந்தும் தன் பதவியை ராஜினாமா செய்தார் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்.

அவரைத் தொடர்ந்து பெரியாரும் காங்கிரசில் இருந்து வெளியேறினார். இந்தித் திணிப்பை எதிர்த்தார். ஆனால் ராஜாஜியோடு நல்ல நட்பில் இருந்தார். மணியம்மையாரை பெரியார் திருமணம் செய்ய முடிவெடுத்தபோது, ராஜாஜியின் ஆதரவைப் பெற, திருவண்ணாமலையில் அவர் தங்கியிருந்த ரயில்வே சலூனுக்கு நேரடியாகச் சென்று அவரைச் சந்தித்தார் பெரியார். இந்த விவகாரத்தில் காமராஜர் எந்தக் கருத்தையும் கூறவில்லை. பெரியார் - மணியம்மை திருமண விஷயத்தில் ஜி.டி.நாயுடு தலையிட்டார் என்று அப்போது கூறப்பட்டது.

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்குப் பிறகு ராஜபாளையம் குமாரசாமி ராஜாவை சென்னை மாகாண முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என்று பிரதமர் நேரு விரும்பினார். அந்த சமயத்தில் குமாரசாமி ராஜா நோய்வாய்ப்பட்டு சென்னை பொது மருத்துவமனையில் (இன்றைய ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை) சிகிச்சை பெற்று வந்தார். அவரை தினமணி ஆசிரியர் தென்காசி சொக்கலிங்கம் சந்தித்து, நேருவின் விருப்பத்தைக் கூறினார்.

மேலும் ஆந்திராவும், சென்னையும் இணைந்து சென்னை ராஜதானியாக உள்ள இம் மாநிலத்தில், தெலுங்கு பேசுபவராக நீங்கள் இருந்தாலும், இரு மாநில மக்களுக்கும் பொதுவானவர்; அதனால் உங்கள் தலைமையை ஏற்றுக் கொள்வார்கள். எனவே இந்தப் பதவியை நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று வற்புறுத்தினார். அதன்பேரில் முதலமைச்சராக குமாரசாமி ராஜா பொறுப்பேற்றார். அந்த காலகட்டத்திலும் காங்கிரசுக்குள் பிரச்சினைகள் ஏற்பட்டன. அதைத்தொடர்ந்து குமாரசாமி ராஜா தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு ராஜாஜி முதலமைச்சரானார். அவருக்கும் கட்சிக்குள் எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் பிரதமர் நேரு தலையீட்டின் பேரில் எதிர்ப்புக்குரல்கள் சற்று அடங்கியிருந்தன.

அதேநேரம், ராஜாஜி ஆட்சியில் பல்வேறு பிரச்சினைகள் தலைதூக்கின. குறிப்பாக விலைவாசி உயர்வு, ரேஷன் கடைகள் ஒழிப்பு, இந்தி எதிர்ப்பு, குலக்கல்வி திட்டம் போன்றவை ராஜாஜிக்கு எதிராகத் திரும்பின. மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அன்றைக்கு சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் ப.ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி, எம்.கல்யாணசுந்தரம், மணலி கந்தசாமி, கேரள கம்யூனிஸ்ட்களாக இருந்த ஈ.எம்.எஸ்.நம்பூதிரி பாடு, ஆந்திராவின் தென்னட்டி விசுவநாதம் மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சஞ்சீவ ரெட்டி போன்றோர் கூட சட்டப்பேரவையில் பிரச்சினையைக் கிளப்பினார்கள்.

இத்தகைய சூழலில், ராஜாஜி ஆந்திராவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்த காலகட்டத்தில் தனி ஆந்திரம் வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றிருந்தது. இதனால் அம்மாநில மக்கள் ராஜாஜிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மேலும் சாலை போடுவதற்காகக் கொட்டப்பட்டிருந்த தாரை உருண்டைகளாக உருட்டி அவர் மீது வீசினார்கள்.

அப்போது ராஜாஜி, ‘என் மீது தார் வீசுவதால் மட்டும் தனி ஆந்திரா கிடைத்துவிடப் போவதில்லை’ என்று பதிலளித்தார். தனி ஆந்திர மாநிலம் கோரிக்கையை வலியுறுத்தி, பொட்டி ஸ்ரீராமுலு 58 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டார். இந்நிலையில், 1952-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி அவர் உயிரிழந்தார். இதனால் ஆந்திராவில் பெரும் கலவரம் மூண்டது. அதைத்தொடர்ந்து, வேறு வழியில்லாமல் 1953-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி தனி ஆந்திர மாநிலம் உதயமாவதற்கு பிரதமர் நேரு சம்மதித்தார்.

ஆந்திரா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டாலும், தமிழகத்துக்கும், ஆந்திராவுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை தலைதூக்கியது. இதற்காக மா.பொ.சி. போன்ற தலைவர்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆந்திர மக்கள் சென்னையைக் கேட்டபோது ராஜாஜி, அதை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அதன்பிறகு ஏற்பட்ட அரசியல் சூழல்களால் ராஜாஜியும் முதல்வர் பதவியில் இருந்து விலகினார் என்பதையெல்லாம் முன்பே நான் பதிவு செய்து உள்ளேன்.

ராஜாஜிக்குப் பிறகு சென்னை மாகாண முதல்வராக காமராஜர் பொறுப்பேற்றார். அப்போது அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்றத் தொகுதி எம்.பி.யாக இருந்தார். அவர் முதல்வராகத் தொடர வேண்டும் என்றால் சட்டப்பேரவை உறுப்பினர் ஆக வேண்டும். இந்நிலையில் 1954-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், குடியாத்தம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அந்தச் சூழலில் காங்கிரஸ் எதிர்ப்பாளராக பெரியார் இருந்த போதிலும், காமராஜருக்கு ஆதரவாக தேர்தல் பணி ஆற்றினார். அதேபோல் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் அண்ணாவும், காமராஜருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தாமல், காமராஜர் வெற்றி பெற உதவினார்.

குடியாத்தம் தொகுதி, ‘கம்யூனிஸ்டு கட்சியின் கோட்டை’ என்று கருதப்பட்ட தொகுதியாகும். காமராஜரை எதிர்த்து கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கே.கோதண்டராமன் போட்டியிட்டார். (அப்போது கம்யூனிஸ்டு கட்சி பிளவுபடாமல் ஒரே கட்சியாக இருந்தது.) இந்தத் தேர்தலில் காமராஜர் வெற்றி பெற்றார். அவருக்கு 64,344 ஓட்டுகளும், கம்யூனிஸ்டு வேட்பாளர் கோதண்டராமனுக்கு 26,132 ஓட்டுகளும் கிடைத்தன.

சென்னை மாகாண முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜாஜி விலகியதால், அவரது ஆதரவாளர்கள் கோபத்தில் இருந்தினர். காங்கிரசுக்கு எதிராகப் பேசத் தொடங்கினார்கள். அவர்களை சமாதானப்படுத்தும் வகையில், நேரு சில நடவடிக்கைகளை எடுத்தார். அதாவது பஞ்ச சீலக் கொள்கை, உலக சமாதானம், அணிசேரா நாடுகள், அணு ஆயுதங்கள் கூடாது போன்றவை பற்றியும், இந்தியாவின் நிலைப்பாட்டையும், உறுதிப்பாட்டையும் பற்றி பேச அமெரிக்கா, சோவியத் யூனியன் நாடுகளுக்கு இந்தியப் பிரதிநிதிகளை நேரு அனுப்பினார்.

அந்த வகையில் அமெரிக்க அதிபர் கென்னடியிடம் பேசுவதற்காக ராஜாஜி, இந்திய ராஜாங்கத் தூதராக அனுப்பி வைக்கப்பட்டார். அவர் கென்னடியுடன் நெருக்கமானவர் என்ற அடிப்படையில் இந்த முடிவை நேரு எடுத்தார்.

இந்திய அரசியலில் மூத்த தலைவர்களுள் ஒருவராக இருந்த ராஜாஜியின் கருத்துகளை மகாத்மா காந்தியோ, பிரதமர் நேருவோ தங்களுடைய இறுதிக் காலம் வரை கேட்டு வந்தனர். பலவற்றை செயல்படுத்தியும் வந்தனர். சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக அவர் இருந்தபோது காங்கிரஸ் உறுப்பினர்களோடு நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான் இந்திய - பாகிஸ்தான் இருதேச கோட்பாடு.

இதையொட்டியே முஸ்லிம் லீக் தலைவர் முகமது அலி ஜின்னாவுடன் மகாத்மா காந்தி 1944 செப்டம்பர் 9 முதல் 27-ம் தேதி வரை பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை சுமுகமாகச் சென்றாலும், அது வெற்றிகரமாக அமையவில்லை என்பது வேறு விஷயம்.

ஆக, டெல்லி அரசியலில் ராஜாஜிக்கு என்று ஒரு தனிப்பட்ட செல்வாக்கு இருந்ததை அனைவரும் ஒப்புக் கொண்டார்கள். இருந்தபோதிலும் தமிழ்நாட்டில் காமராஜருடனான மோதல் காரணமாக காங்கிரசில் இருந்து விலகி சுதந்திரா கட்சியை ஆரம்பித்ததெல்லாம் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த காமராஜரும் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்தார். காங்கிரசை தீவிரமாக எதிர்க்கும் பெரியாரோடு காமராஜர் நெருக்கமாக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்தியாவின் அஸ்திவாரமே காங்கிரஸ் கட்சி என்று இருக்கும் நிலையில், அந்த அஸ்திவாரத்தையே தகர்க்க வேண்டும் என்று பெரியார் பேசி வருகிறார். அவரோடு காமராஜர் எப்படி நட்பில் இருக்கலாம் என்று பலர் கேள்வி எழுப்பினர். விமர்சனங்கள் செய்தனர்.

அதோடுமட்டுமல்ல, இன்றைக்கு சென்னை வேப்பேரி பகுதியில் உள்ள பெரியார் திடல், அன்றைக்கு டிராம் வண்டிகள் நிறுத்தும் இடமாக இருந்தது. அதை பெரியாருக்கு சலுகை விலையில் காமராஜர் தரை வார்த்துவிட்டார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அந்த காலகட்டத்தில் பெரியார், இன்றைக்குள்ள அண்ணாசாலை காதி பவனுக்குப் பின்னால் உள்ள ஒரு தெருவில்தான் குடியிருந்தார். அங்கேதான் அவரது அலுவலகமும் இருந்தது. அதேநேரம் ‘குடிஅரசு’ உள்ளிட்ட பத்திரிகை வேலைகள் எல்லாம் ஈரோடு இல்லத்தில் நடைபெற்று வந்தன.

இந்த காலகட்டத்தில்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு திருச்சியில் 1956-ம் ஆண்டு மே 17 முதல் 20-ம் தேதி வரை நடைபெற்றது. அதில், திராவிட முன்னேற்றக் கழகம், தேர்தல் அரசியலில் ஈடுபட வேண்டுமா? அல்லது இயக்கமாகவே செயல்பட வேண்டுமா என்பது குறித்து பொதுக்குழு உறுப்பினர்களுடனும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடமும் கருத்து கேட்பது என முடிவெடுக்கப்பட்டது.

மாநாட்டு மேடையில் கருப்பு, சிவப்பு என இரு வண்ணத்தில் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. வெறும் சமூக இயக்கமாக தொடரலாம் என்று விரும்புபவர்கள் கருப்பு நிறப் பெட்டியிலும், தேர்தலில் போட்டியிட்டு அரசியல் இயக்கமாக மாற வேண்டும் என்று விரும்புபவர்கள் சிவப்பு நிறப் பெட்டியிலும் தங்கள் வாக்குகளைச் செலுத்த வேண்டும் என்று அண்ணா அறிவித்தார். அதன்படி தொண்டர்களும், நிர்வாகிகளும் தங்கள் விருப்பத்தை ஓட்டுகளாகப் பெட்டியில் போட்டனர்.

அதில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று 57 ஆயிரம் ஓட்டுகளும், தேர்தலில் போட்டியிடாமல் சமூக இயக்கமாகச் செயல்படலாம் என்று 3 ஆயிரம் ஓட்டுகளும் விழுந்தன. அதைத் தொடர்ந்து தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடும் என்ற தீர்மானம் அன்றைய மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

மாநாட்டு நடைபெற்ற அடுத்த ஆண்டு அதாவது 1957-ம் ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் தமிழகத்தில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் 124 வேட்பாளர்கள் திமுக சார்பில் போட்டியிட்டார்கள். அப்போது திமுக புதிய கட்சி என்பதால் பொதுச் சின்னம் கிடைக்கவில்லை. வெவ்வேறு சின்னங்களில் வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். ஒருசிலருக்கு உதயசூரியன் சின்னம் கிடைத்தது. காங்கிரசை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்று திமுகவினர் கங்கணம் கட்டிக் கொண்டு தேர்தல் வேலைகளில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும் 15 சட்டப்பேரவை தொகுதிகளிலும், 2 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மட்டுமே திமுகவால் வெற்றி பெற முடிந்தது.

தமிழக காங்கிரஸ் வரலாற்றில் எப்போதும் 2 அணிகள் இருந்து வந்துள்ளன. ராஜாஜி இருந்தபோது அவருக்கு எதிராக சத்தியமூர்த்தி தலைமையிலான ஒரு அணி இருந்தது. இதனால் காங்கிரஸின் வளர்ச்சி தடைபட்டது. இதில் கோபம் கொண்டுதான், பசும்பொன் தேவர்கூட, நேருவின் ஆலோசனையை ஏற்காமல் காங்கிரசில் இருந்து வெளியேறி. நேதாஜியின் பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்தார். பார்வர்டு பிளாக் கட்சி அப்போது பல மாநிலங்களில் உத்வேகத்துடன் செயல்பட்டது. குறிப்பாக மேற்கு வங்கம், தமிழ்நாட்டில் நல்ல செல்வாக்கு இருந்தது. அக்கட்சியின் சின்னமாக சிங்கம் இருந்தது. ‘சிங்கம்னா அது பார்வர்டு பிளாக் கட்சிதான்’ என்ற பேச்சு பரவலாக இருந்தது.

தமிழக காங்கிரசில் இரண்டு அணிகள் கோட்பாடு போய் பின்னாளில் மேலும் பல அணிகளாகவும் மாறியது. நான் மாணவர் காங்கிரசில் இருந்தபோது, சி.சுப்பிரமணியம் தலைமையில் ஒரு அணி, ஆர்.வெங்கட்ராமன் தலைமையில் ஒரு அணி என மேலும் விரிவடைந்தது. காமராஜர் மறைவுக்குப் பின்னர் ஸ்தாபன காங்கிரசும், மத்தியில் ஆளும் காங்கிரஸ் ஒன்றாகின. அதற்குப் பிறகும் ஜி.கே.மூப்பனார், நெடுமாறன் தலைமையில் தனித்தனி அணிகள் தலைதூக்கின. என்னைப்போன்ற பலர் நெடுமாறன் ஆதரவாளர்களாக இருந்தோம். பின்னாளில் காங்கிரசில் இருந்து நெடுமாறன் விலகிய பின்னர், ஆர்.வெங்கட்ராமன், எம்.பி.சுப்பிரமணியம், வாழப்பாடி ராமமூர்த்தி போன்ற தலைவர்கள் காங்கிரசிலேயே இருந்துவிட்டனர். இப்படியாக தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல்கள் இன்றுவரை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

இதற்கெல்லாம் முக்கியக் காரணமாகச் சொல்லப்படுவது நேரு காலம் தொட்டு தேசிய காங்கிரஸ் தலைமை, மாநிலங்களில் உள்ள தலைவர்களை நம்பியிருப்பதுதான். அந்த வகையில் தமிழ்நாட்டில் காமராஜர், கேரளத்தில் சங்கர், ஆந்திராவில் சஞ்சீவரெட்டி, கர்நாடகத்தில் நிஜலிங்கப்பா, ஒரிசாவில் பட்நாயக், மகாராஷ்டிராவில் எஸ்.கே.பாட்டீல், ராஜஸ்தானில் மோகன்லால் சுகாடியா, ஒன்றுபட்ட பஞ்சாபில் பார்தாப் சிங் கைரோன், காஷ்மீரில் பக்‌ஷி குலாம் ஆசாத், உத்தரப் பிரதேசத்தில் கோவிந்த் பல்லப் பந்த், மேற்கு வங்கத்தில் பி.சி.ராய் என ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலத் தலைவர்களை வளர்த்தார்கள். இதே நடைமுறை சாஸ்திரி காலத்திலும் தொடர்ந்தது.

அதற்குப் பிறகு வந்த இந்திரா காந்தி சற்று மாறுபட்டார். தனக்கு ஆதரவான தலைவர்களை மாநிலங்களில் நியமித்தார். இதனால், மாநிலத் தலைவர்களை மதிக்கவில்லை என்று காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள் வருத்தப்பட்டது உண்டு. இந்த காரணத்தினாலேயே இந்திரா தலைமையிலான காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ் என காங்கிரஸ் இரண்டு பட்டது...

(தொடர்வோம்...)

தமிழக காங்கிரஸ் கோஷ்டி பூசல் வரலாறு - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 76
தமிழக காங்கிரஸ் கமிட்டியும், அன்றைய நெருக்கடிகளும் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 75

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in