இந்தியா

“பாஜகவின் திசை திருப்பும் தந்திரமே ‘வந்தே மாதரம்’ விவாதம்” - மக்களவையில் பிரியங்கா காந்தி சாடல்

மோகன் கணபதி

புதுடெல்லி: நாட்டின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பவே ‘வந்தே மாதரம்’ பாடலை பாஜக பயன்படுத்துகிறது என்று மக்களவையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார்.

நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த ‘வந்தே மாதரம்’ பாடலின் 150-வது ஆண்டை முன்னிட்டு, அது குறித்த விவாதம் மக்களவையில் இன்று தொடங்கியது. பிரதமர் மோடி விவாதத்தை தொடங்கி வைத்துப் பேசினார். இதையடுத்து, பல்வேறு உறுப்பினர்கள் பேசினார்கள்.

விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா, "இந்த விவாதத்தை நீங்கள் ஏன் கொண்டு வந்தீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். இதற்கு முதல் காரணம், தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த விவாதத்தை நீங்கள் விரும்பவில்லை. இரண்டாவது காரணம், வர இருக்கும் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல்.

உண்மையான சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகழ் வெளிச்சத்தை நீங்கள் பறிக்க விரும்புகிறீர்கள். நீங்கள் கடந்த காலத்தில் வாழ்கிறீர்கள். எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க விரும்பவில்லை.

பிரதமர் அழகாக உரைகளை நிகழ்த்துகிறார். ஆனால், அவற்றில் உண்மை இல்லை. வந்தே மாதரத்தை முதன்முறையாக ரவீந்திரநாத் தாகூர் ஒரு மாநாட்டில் பாடியதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால், அது காங்கிரஸ் மாநாடு என்பதை அவர் கூற மறந்துவிட்டார்.

வந்தே மாதரம் பாடலை பயன்படுத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நேதாஜிக்கு நேரு கடிதம் எழுதியதாக மோடி கூறினார். ஆனால், அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக, இதுபற்றி கொல்கத்தா காங்கிரஸில் விவாதிக்குமாறு நேருவுக்கு நேதாஜி கடிதம் எழுதினார்.

நேரு உட்பட பல சுதந்திரப் போராட்ட வீரர்களை நீங்கள் அவமதிக்கிறீர்கள். நீங்கள் அரசியலமைப்பு சபையைக் குறை கூறுகிறீர்கள். நேரு நாட்டுக்காக 12 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தார். அவர் இல்லாமல் இருந்திருந்தால் எந்த ஐஐடியும், ஐஐஎம்-மும் இருந்திருக்காது. நீங்கள் விற்கும் ஒவ்வொரு பொதுத்துறை நிறுவனத்தையும் உருவாக்கியவர் நேரு.

விலைவாசி உயர்வு, வேலையின்மை ஆகியவையே இன்றைய பிரச்சினை. அதுபற்றி நாம் பேசலாம். உண்மையான பிரச்சினைகளை புறக்கணிக்க உருவாக்கப்பட்ட திசை திருப்பும் தந்திரமே இந்த விவாதம்.

நாங்கள் தோற்றாலும் நாட்டின் உண்மையான பிரச்சினைகளைப் பற்றிப் பேச நாங்கள் இங்கு மீண்டும் வருவோம். 1830-களில் இருந்து காங்கிரஸ் ஒவ்வொரு மாநாட்டிலும் வந்தே மாதரம் பாடலை பாடுகிறது. நீங்கள் எத்தனை முறை பாடியுள்ளீர்கள். தேசியப் பாடலைப் பற்றி விவாதம் செய்வது பாவம்" என்று பிரியங்கா காந்தி பேசினார்.

முன்னதாக, “சுதந்திரப் போராட்டத்துக்கும், இந்திய மக்களுக்குமே ‘வந்தே மாதரம்’ சொந்தமானதே தவிர, எந்த அரசியல் கட்சிக்கும் சொந்தமானது அல்ல. ஆளும் பாஜக அனைத்தையும் அரசியல் ஆதாயத்துக்காக சொந்தமாக்கிக் கொள்ள முயற்சிக்கிறது. சுதந்திர போராட்ட இயக்கத்தில் பங்கேற்காதவர்களுக்கு ‘வந்தே மாதரம்’ பாடலைக் கொண்டாடுவது பற்றி என்ன தெரியும்?” என்று மக்களவையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆவேசமாக பேசினார்.

SCROLL FOR NEXT