

புதுடெல்லி: “வந்தே மாதரம் சுதந்திரப் போராட்டத்திற்கும், இந்திய மக்களுக்கும் சொந்தமானது; எந்த அரசியல் கட்சிக்கும் சொந்தமானது அல்ல. ஆளும் பாஜக அனைத்தையும் அரசியல் ஆதாயத்திற்காக சொந்தமாக்கிக் கொள்ள முயற்சிக்கிறது” என சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார்.
வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு விழா குறித்த மக்களவை சிறப்பு விவாதத்தில் பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், "ஆளும் பாஜக அனைத்தையும் அரசியல் ஆதாயத்திற்காக சொந்தமாக்கிக் கொள்ள முயற்சிக்கிறது.
‘வந்தே மாதரம்’ சுதந்திரப் போராட்டத்திற்கும், இந்திய மக்களுக்கும் சொந்தமானது, எந்த அரசியல் கட்சிக்கும் சொந்தமானது அல்ல. நாட்டின் மில்லியன் கணக்கான மக்களை விழித்தெழச் செய்யும் பாடலை வழங்கியவர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி.
‘வந்தே மாதரம்’ பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான ஒரு பேரணியாக மாறியது, லட்சக்கணக்கான மக்களை உத்வேகப்படுத்தியது. இந்தப் பாடல் விடுதலைப் போராட்டம் சாதாரண மக்களைச் சென்றடைய உதவியது.
1905 மற்றும் 1908-க்கு இடையில் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தப் பாடலைத் தடை செய்தது. வகுப்பறைகளில் இப்பாடலை பாடியதற்காக வங்காளத்தில் பள்ளி மாணவர்களை சிறையில் அடைத்தது. ஆனால் புரட்சியாளர்கள் தடையை ஏற்கவில்லை; அவர்கள் அந்தப் பாடலை தங்கள் இதயங்களிலும் மனங்களிலும் உயிர்ப்புடன் வைத்திருந்தனர், மேலும் மக்கள் மத்தியில் இயக்கத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றனர்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “வந்தே மாதரம் வெறுமனே பாடப்படுவதற்காக அல்ல, மாறாக வாழப்படுவதற்காக, கடந்த சில பத்தாண்டுகளை பாருங்கள், பாஜகவில் உண்மையில் எவ்வளவு பேர் அதன்படி வாழ்ந்திருக்கிறார்கள். இன்று, பிரிவினை சக்திகள் இந்த தேசத்தை உடைக்க விரும்புகின்றன. இவர்கள்தான் முன்பு தேசத்தை காட்டிக் கொடுத்தார்கள், இப்போதும் கூட அவர்கள் நாட்டை காட்டிக் கொடுக்கிறார்கள்.
சுதந்திர போராட்ட இயக்கத்தில் பங்கேற்காதவர்களுக்கு, வந்தே மாதரம் பாடலைக் கொண்டாடுவது பற்றி என்ன தெரியும்?
உண்மை என்னவென்றால், அந்த நாட்களில், உண்மையிலேயே வந்தே மாதரம் என்று இதயத்திலிருந்து சொன்னவர்கள் தேசபக்தர்கள். மறுபுறம், சிலர் ஆங்கிலேயர்களுக்கு உளவாளிகளாகவும், தகவல் கொடுப்பவர்களாகவும் செயல்பட்டனர். அவர்கள் தேசியவாதிகள் அல்ல; அவர்கள் தேச விரோத சக்திகள்.
பிரிட்டிஷ் கொள்கை பிரித்தாளும் ஆட்சி, இன்றும் கூட, சிலர் அதே பாதையைப் பின்பற்றுகிறார்கள், பிரிவினையின் பாதையில் நடக்கிறார்கள். சுதந்திரத்திற்கு முன்பு இந்தப் பாடலை அவர்கள் ஏன் பாடவில்லை, சுதந்திரத்திற்குப் பிறகும் ஏன் அதைப் பாடவில்லை என்பதை அவர்களின் வரலாறு நமக்கு காண்பிக்கும்” என்று கூறினார்.