

புதுடெல்லி: வந்தே மாதரம் என்பது ஒரு மந்திரம், சுதந்திர இயக்கத்துக்கு சக்தி மற்றும் உத்வேகத்தைக் கொடுத்த, தியாகம் மற்றும் தவத்துக்கான பாதையைக் காட்டிய ஒரு முழக்கம் என்று பிரதமர் நரேந்திர மோடி வந்தே மாதரம் பாடலுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டை கொண்டாடும் விதமாக நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் இன்று தொடங்கியது. விவாதத்தை மக்களவையில் தொடங்கிவைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் தனது உரையில், “வந்தே மாதரம் என்பது ஒரு மந்திரம், சுதந்திர இயக்கத்துக்கு சக்தி மற்றும் உத்வேகத்தைக் கொடுத்த ஒரு முழக்கம், தியாகம் மற்றும் தவத்துக்கான பாதையைக் காட்டிய ஒரு முழக்கம். வந்தே மாதரத்தின் 150வது ஆண்டைக் கொண்டாட்டத்தின் சாட்சிகளாக நாம் இருப்பது பெருமைக்குரிய விஷயம். இது ஒரு வரலாற்றுத் தருணம். பல வரலாற்று நிகழ்வுகள் மைல்கற்களாகக் கொண்டாடப்படும் ஒரு காலம் இது.
சமீபத்தில் நமது அரசியலமைப்பின் 75-வது ஆண்டை நாடு கொண்டாடியது. சர்தார் படேல் மற்றும் பிர்சா முண்டாவின் 150வது பிறந்த நாளை நாடு கொண்டாடுகிறது. குரு தேக் பகதூரின் 350வது தியாக தினத்தை கொண்டாடுகிறோம். இப்போது, நாம் வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டைக் கொண்டாடுகிறோம்.
வந்தே மாதரம் 50 ஆண்டுகளை நிறைவு செய்தபோது இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. 100 ஆண்டுகளை நிறைவு செய்தபோது இந்தியா அவசரநிலையின் பிடியின் கீழ் இருந்தது. அப்போது, தேசபக்தர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். நமது சுதந்திர இயக்கத்துக்கு உத்வேகம் அளித்த பாடலின் 100வது ஆண்டு நிறைவின்போது துரதிருஷ்டவசமாக நாடு ஒரு கருப்புக் காலகட்டத்தைக் கண்டது.
வந்தே மாதரத்தின் 150வது ஆண்டு என்பது, அதன் பெருமையையும் நமது கடந்த காலத்தில் அதற்கு இருந்த பங்கினையும் மீண்டும் நிலைநிறுத்த ஒரு வாய்ப்பாகும். 1947ம் ஆண்டு நமடு சுதந்திரம் பெற இந்த பாடல் உந்து சக்தியாக இருந்தது.
வந்தே மாதரம் பாடலின் ஆழத்தை நாம் அனைவருமாக சேர்ந்து ஏற்கவும், பாராட்டவும் நாம் இங்கே கூடி இருக்கிறோம். இந்த பாடலால்தான் நாம் அனைவரும் இங்கே ஒன்றாக இருக்கிறோம். இது ஒரு புனிதமான சந்தர்ப்பம். இது வடக்கில் இருந்து தெற்கு வரையும், கிழக்கில் இருந்து மேற்கு வரையும் நாட்டை ஒன்றிணைத்தது. மீண்டும் ஒன்றிணைந்து நாம் அனைவருடனும் இணைந்து பயணிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இந்த பாடல் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நிறைவேற்ற நம்மை ஊக்குவிப்பதாகவும், உற்சாகப்படுத்துவதாகவும் இருக்கட்டும். 2047-க்குள் நமது தேசத்தை சுயசார்பு கொண்டதாகவும் வளர்ச்சி அடைந்ததாகவும் மாற்றுவதற்கான உறுதியை நாம் மீண்டும் வலியுறுத்துவோம்.
வந்தே மாதரம் என்பது அரசியல் ரீதியில் நாம் சுதந்திரம் அடைவதற்கான ஒரு மந்திரம் மட்டுமல்ல. அது நமது சுதந்திரத்துக்கானது மட்டுமல்ல. அதற்கும் அப்பாற்பட்டது. சுதந்திர இயக்கம் என்பது நமது தாய்நாட்டை அடிமைத்தனத்தின் பிடியில் இருந்து விடுவிப்பதற்கான ஒரு போர். நமது வேதங்களில், இந்த நிலம் எனது தாய்; நான் இந்த மண்ணின் மகன் என்று கூறப்பட்டுள்ளது. வந்தே மாதரம் பாடல் நமது சிறந்த கலாச்சார மரபின் நவீன அவதாரம்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது இந்தியாவை ஒரு பலவீனமான, பயனற்ற, சோம்பல் மிகுந்த, இழிவான ஒரு நாடாக காட்டுவது ஒரு ஃபேஷனாக மாறியது. நமது நாட்டிலும்கூட இதே போன்று பேசப்பட்டது. இந்நிலையில், நாட்டின் மனசாட்சியை உலுக்கி விழிப்புணர்வை ஏற்படுத்த பங்கிம் சாட்டர்ஜி இந்த பாடலை இயற்றினார். இந்த பாடல், நமது ஆயிரம் ஆண்டுகால வரலாற்றையும் மரபையும் மீட்டுப்பதற்காக இருந்தது.
ஆங்கிலேயர்கள் தங்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கான ஆய்வகமாக வங்களாத்தைப் பயன்படுத்தினர். வங்கத்தின் அறிவுசார் திறன் நாட்டுக்கு வழிகாட்டுவதாகவும், வலிமை மற்றும் உத்வேகத்தை அளிப்பதாகவும் இருப்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். வங்கத்தின் திறன், நாட்டின் மையப் புள்ளி என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். அதனால்தான், அவர்கள் வங்கத்தைப் பிரித்தார்கள். வங்கத்தைப் பிரித்தால் நாடு பிளவுபடும் என்று அவர்கள் நம்பினார்கள். 1905-ல் அவர்கள் வங்கத்தை பிரித்தபோது வந்தே மாதரம் பாடல் ஒரு பாறை போல நின்றது” எனத் தெரிவித்தார்.