புது டெல்லி: பிஎஃப் திட்டத்தில் மாதச் சம்பள உச்சவரம்பை ரூ.15,000-லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனை தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் முன்மொழிவை ஏற்று, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கீழ் கட்டாயப் பாதுகாப்புக்கான மாதச் சம்பள வரம்பை ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், கூடுதலாக 51 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் கட்டாய பிஎஃப் வரம்புக்குள் கொண்டுவரப்படுவார்கள்.
2004 முதல் 2014 வரையிலான பத்தாண்டுகளில் பிஎஃப் மாதச் சம்பள வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதன் பின்னர் செப்டம்பர் 2014-ல் இது ரூ.6,500-ல் இருந்து ரூ.15,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இடைப்பட்ட ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான ஊதிய உயர்வு, வருமான அதிகரிப்பு மற்றும் முறைசார் வேலைவாய்ப்பின் விரிவாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தற்போது இந்த ஊதிய வரம்பு ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது, மாதத்துக்கு ரூ.15,000-க்கு மேல் ஊதியம் பெறும் புதிய ஊழியர்கள் பிஎஃப் வரம்புக்குள் வருவதில்லை. இதனால் அவர்கள் கட்டாய வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் மற்றும் அதனுடன் தொடர்புடைய காப்பீட்டுப் பாதுகாப்பு ஆகியவற்றை பெற முடிவதில்லை.
தற்போது ஊதிய வரம்பை ரூ.25,000 ஆக உயர்த்துவதன் மூலம், ரூ.15,000 முதல் ரூ.25,000 வரையிலான ஊதியப் பிரிவில் உள்ள ஊழியர்கள் பிஎஃப் வரம்புக்குள் கொண்டுவரப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.