பதவிக்கு பணம் கேட்ட தகராறு வீடியோ வைரல்: தவெக கடலாடி நிர்வாகி நீக்கம்

பதவிக்கு பணம் கேட்ட தகராறு வீடியோ வைரல்: தவெக கடலாடி நிர்வாகி நீக்கம்
Updated on
1 min read

ராமநாதபுரம்: தவெகவில் பதவிக்கு பணம் கேட்பதாகக் கூறி, அக்கட்சியை சேர்ந்த இரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலான நிலையில், கடலாடி மேற்கு ஒன்றியச் செயலாளர் பதவிநீக்கம் செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த வணிகர் சங்க நிர்வாகி பெத்தராஜ். தவெகவில் இணைந்துள்ள இவர், தனது உறவினர் ஒருவருக்கு அக்கட்சியில் சாயல்குடி நகரில் பதவி வாங்கித் தர 2 ஒன்றியச் செயலாளர்களை அணுகினார். கட்சியில் புதிதாக சேர்ந்தவருக்கு பொறுப்பு வழங்க பரிந்துரை செய்ய அந்நிர்வாகிகள் மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பெத்தராஜ், கடலாடி மேற்கு ஒன்றியச் செயலாளர் ஸ்ரீதரனை அணுகினார்.

அப்போது அவர் நகர் பொருளாளர் பதவி வாங்கித் தர ரூ.15 லட்சம் செலவாகும் எனக் கூறியதாக சொல்லப்படுகிறது. மேலும் ஏற்கெனவே பதவி வாங்கித்தர மறுத்த 2 ஒன்றியச் செயலாளர்களை பற்றி ஆபாசமாக பேசியுள்ளனர். இந்த ஆடியோவை இருவரும் பதிவு செய்துள்ளனர். அதனையடுத்து சாயல்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபாண்டி, நகர் செயலாளர் அந்தோணி மாதவடியான் ஆகியோருக்கு, பெத்தராஜ் பேசிய ஆடியோ அனுப்பப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த வீரபாண்டி, அந்தோணி மாதவடியான் ஆகியோர் பெத்தராஜிடம் சென்று, அதுகுறித்து கேட்டுள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த தகராறு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் நகர் செயலாளர் அந்தோணி மாதவடியான், சாயல்குடி தெற்கு ஒன்றியச் செயலாளர் மணிகண்டன் ஆகியோர், பெத்தராஜ் உள்ளிட்ட 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாயல்குடி போலீஸில் புகார் அளித்தனர். இதற்கிடையே கடலாடி மேற்கு ஒன்றியச் செயலாளர் ஸ்ரீதரனை, அப்பதவியிலிருந்து நீக்கி தவெக ராமநாதபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் மதன் உத்தரவிட்டுள்ளார்.

பதவிக்கு பணம் கேட்ட தகராறு வீடியோ வைரல்: தவெக கடலாடி நிர்வாகி நீக்கம்
திருச்சி மலைக்கோட்டை கோயிலில் விநாயகருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in