நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு அவசர வழக்காகத் தாக்கல் செய்த மனுவை வரும் 11-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது.
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது
ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி என இருமுறை குற்றவாளிகள் 4 பேருக்கும் டெத் வாரண்ட் பிறப்பித்தது டெல்லி விசாரணை நீதிமன்றம். ஆனால், இருமுறையும் குற்றவாளிகள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்ததால் தண்டனையை ஒத்திவைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
டெல்லி நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசும், டெல்லி அரசும் தாக்கல் செய்த மேல் முறையீ்ட்டு மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மத்திய அரசும், டெல்லி அரசும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து அவசர வழக்காகக் எடுக்கக் கோரினர்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர். பானுமதி, அசோக் பூஷன், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகினார். அவர் வாதிடுகையில், " மத்திய அரசின் மனுவை ஏற்றுக் குற்றவாளிகள் 4 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் வழக்கு மேலும் தாமதமாகும்" என்று கோரினார்.
அப்போது நீதிபதிகள், " இந்த வழக்கை வரும் 11-ம் தேதி விசாரிக்கிறோம். அப்போது குற்றவாளிகள் 4 பேருக்கும் நோட்டீஸ் அனுப்புவது அவசியமா என்று பரிசீலிக்கப்படும்" எனத் தெரிவித்தனர்.
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், " தேசத்தின் பொறுமை சோதிக்கப்படுகிறது, இந்த விஷயத்தில் சட்டத்தை நீதிபதிகள் வகுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்
தவறவிடாதீர்..