

சிகப்பழகு க்ரீம் விளம்பரங்களுக்கு ரூ.50 லட்சம் அபராதமும் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கும் வகையில் ட்ரக்ஸ் அண்ட் மெடிசின் ரெமடீஸ் 1954 சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
இந்த க்ரீமைப் பயன்படுத்தினால் வெள்ளையான அல்லது சிகப்பான சருமம் பெறலாம், பாலுறவுத் திறனை வலுவாக்கும் அல்லது தூண்டும் மாத்திரை / மருந்துகள், திக்குவாயைக் குணப்படுத்தும் மருந்துகள், பெண்களின் மலட்டுத்தன்மையை நீக்குதல், முதுமையைக் கட்டுப்படுத்துதல், இளநரையைக் கட்டுப்படுத்துதல் என்பன உள்ளிட்ட 78 வகையான நோய்களைக் குணப்படுத்தலாம் என்று தவறான தகவலைக் குறிப்பிட்டு விளம்பரங்கள் செய்யத் தடை விதிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையைக் காண..
இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால், முதல் முறை தவறுபவருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனையோ அல்லது அதனுடன் கூடிய அபராதமோ விதிக்கப்படும். மீண்டும் தவறினால், ஓராண்டு சிறையும், அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.
முதல் முறை ரூ.10 லட்சம் அபராதமும், இரண்டாம் முறை ரூ.50 லட்சம் அபராதமும் வசூலிக்கலாம் என சட்ட மசோதாவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத் திருத்த முடிவு மாறி வரும் கால சூழலையும் தொழில்நுட்பத்தையும் கருத்தில் கொண்டு எடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், இது தொடர்பான கருத்துகள், பரிந்துரைகள், எதிர்க்கருத்துகளை பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தாரிடமிருந்து வரவேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3-ம் தேதி இது தொடர்பான அறிவிக்கை வெளியாகியுள்ளது. அதிலிருந்து 45 நாட்களுக்குள் கருத்துகள் வரவேற்கப்படுவதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும், காட்சி ஊடகத்தில் மட்டுமல்லாது, அச்சு, இணையதளம், பேனர், போஸ்டர், துண்டுப் பிரசுரம், லேபிள், ஒலிப்பெருக்கி, ரேடியோ என எந்த விதத்திலும் இவற்றை விளம்பரப்படுத்தக் கூடாது என்று சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
தவறவிடாதீர்: