ஹைதராபாத்: “பாஜகவுக்கு அவ்வளவு அனுதாபம் இருந்தால், அவர்கள் ஏன் இன்னும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான கணக்கெடுப்பு நடத்தாமல் இருக்கிறார்கள்?” என்று அசாசுதீன் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார். தெலங்கானாவில் ‘ஓபிசி முதல்வர்’ பற்றிய பேசிய அமித் ஷாவின் பேச்சுக்கு இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
தெலங்கானாவில் உள்ள சூரியாபேட்டையில் வெள்ளிக்கிழமை நடந்த பாஜக பேரணியில் கலந்துகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "தெலங்கானாவில் அடுத்த மாதம் நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒருவர் மாநிலத்தின் முதல்வராக்கப்படுவார்" என்று அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ஜகீராபாத்தில் அன்று இரவு நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாசுதீன் ஒவைசி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "அமித் ஷா அவர்களே... நான் மிகவும் பொறுப்புடன் உங்களிடம் சொல்கிறேன். நீங்களும் காங்கிரஸ் கட்சியும் இரட்டையர்களாகிவிட்டீர்கள். தெலங்கானாவில் உங்களைப் போன்றவர்களுக்கு ஆதரவாக எதுவும் நடந்து விடப்போவதில்லை. இந்தத் தேர்தல் உங்கள் இருவருக்குமான வழியனுப்புதலாகவே இருக்கும். நான் அமித் ஷாவிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மீது உங்களுக்கு அவ்வளவு அனுதாபம் இருந்தால், நீங்கள் ஏன் இதர பிற்படுத்த பிரிவினருக்கான கணக்கெடுப்பை நடத்தவில்லை.
மேலும், நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் பிற்படுத்தப்பட்ட மற்றும் முஸ்லிம் பெண்களுக்கான உள் இடஒதுக்கீடு வேண்டும் என்ற எனது கோரிக்கையை பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் எம்.பி.,ராகுல் காந்தி ஏன் ஆதரிக்கவில்லை?" எனக் கேள்வி எழுப்பினார்.
ஏஐஎம்ஐஎம் கட்சி, பாஜகவுடன் ரகசிய ஒப்பந்தம் வைத்துள்ளது என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துப் பேசிய ஒவைசி, "கடந்த 2019-ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தில் 185 இடங்களில் காங்கிரஸும் பாஜகவும் நேரடியாக போட்டியிட்டன. ஆனால், காங்கிரஸால் 16 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அங்கு இந்த ஒவைசியின் பங்கு என்னவாக இருந்தது. ராகுல் காந்தி ஏன் அமேதி தொகுதியில் தோற்றுப்போனார்? அங்கு காங்கிரஸ் எவ்வாறு தோற்றது?" என்றார்.
தொடர்ந்து, எங்கெல்லாம் ஏஐஎம்ஐஎம் கட்சிப் போட்டியிடவில்லையோ அங்கெல்லாம் அக்கட்சி பாரதீய ராஷ்ரா சமிதி கட்சியை ஆதரிக்கும் என்று மீணடும் வலியுறுத்தினார். மேலும். “இப்போது ஜகீராபாத் மற்றும் மூனுகோடு ஆகியவற்றில் இருந்து காங்கிரஸும், பாஜகவும் இரட்டையர்களாகி விட்டார்கள் என்று தெளிவாக தெரிந்துவிட்டது. மாநிலக் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் இடங்களில் மாநிலக் கட்சிகளுக்கே ஆதரவு கொடுங்கள். ஒருவேளை தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பின்னர் உங்கள் பிரச்சினைகளை யாராலும் எடுத்துச் சொல்ல முடியாது" என்றார்.
தெலங்கானா சட்டமன்றத்துக்கு அடுத்த மாதம் 30-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜகவும், காங்கிரஸும் தீவிரமாக முயற்சித்து வரும் நிலையில், பிஆர்எஸ் கட்சி ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.