

புதுடெல்லி: ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசதுத்தீன் ஒவைசி நேற்று கூறியதாவது: இண்டியா கூட்டணி, பாஜகவுக்கு மாற்று அல்ல. நாட்டை சுமார் 50 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்தது. 18 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. தேசத்திற்கு பாஜக, காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அரசாங்கம் இப்போது தேவைப்படுகிறது.
இண்டியா கூட்டணி, உயரடுக்கு மக்களின் கிளப் ஆக உள்ளது. உண்மையில் அவர்கள் எங்களை துஷ்பிரயோகம் செய்கின்றனர். உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி, தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் உள்ளிட்ட சில முக்கிய அரசியல்வாதிகள் இண்டியா கூட்டணியில் சேரவில்லை. இவ்வாறு ஒவைசி கூறினார்.
பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ள தொகுதிகளில் ஏஐஎம்ஐஎம் கட்சி தனது வேட்பாளர்களை நிறுத்துவதன் மூலம் பாஜகவின் ‘பி’ அணியாக செயல்படுகிறது என இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.