

புதுடெல்லி: ‘‘தமிழக முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி சனாதன ஒழிப்பு பற்றி பேசியிருப்பது, இண்டியா கூட்டணி தலைவர்கள் இந்து மதத்தை வெறுப்பதையே காட்டுகிறது’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
ராஜஸ்தானில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சியை தேர்தலில் தோற்கடித்து ஆட்சி அமைக்க பாஜக தலைவர்கள் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு கட்டமாக, ராஜஸ்தான் மாநிலம் தங்கர்பூர் பகுதியில் ‘பரிவர்த்தன் யாத்திரை’யை உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகன் அமைச்சர் உதயநிதி, சனாதன தர்மத்தை ஒழிப்பது குறித்து பேசியிருக்கிறார். இதுபோன்ற பேச்சுகள், இந்து மதத்தையும், நமது கலாச்சாரத்தையும் ‘இண்டியா’ கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் வெறுக்கின்றனர் என்பதை தெளிவாக்குகிறது. மேலும், அவர்களுடைய பேச்சு இந்து மதத்தின் மீதும் நமது கலாச்சாரத்தின் மீதும்நடத்தப்படும் தாக்குதலாகும். உதயநிதியின் பேச்சு வாக்கு வங்கிக்காக நடத்தப்படுகிறது. மற்றவர்களை சமாதானப்படுத்துவதற்கான தந்திரம். தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக காங்கிரஸ் கட்சி எந்த எல்லைக்கும் செல்லும்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2010-ம் ஆண்டுலஷ் கர் இ தொய்பா தீவிரவாதஅமைப்புடன் இந்து அமைப்புகளை ஒப்பிட்டு பேசினார். அப்போது அவர் லஷ்கர் தீவிரவாதஅமைப்பை விட இந்து அமைப்புகள் மிகவும் அபாயமானவை என்று பேசினார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சுஷில் குமார் ஷிண்டே, இந்தியாவில் இந்து தீவிரவாதிகள் உள்ளனர் என்று பேசினார். (ஜெய்ப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் சுஷில் குமார் அப்படி பேசினார். எனினும், உடனடியாக அதை அவர் வாபஸ் பெற்றுக் கொண்டார்.)
இதுபோன்ற பேச்சுகள் எல்லாம் இந்து மதத்தின் மீது அவர்களுக்கு உள்ள வெறுப்புணர்வையே காட்டுகிறது. சனாதன தர்மம் என்பது மக்களின் மனங்களில் உள்ளது. ஆனால், மோடி மீண்டும் பிரதமராக வந்தால், சனாதன ஆட்சி வந்துவிடும் என்று பொய் பிரச்சாரம்செய்கின்றனர். சனாதனம் என்பதுமக்கள் மனங்களை ஆட்சி செய்கிறது. மேலும், அரசியலமைப்பு சட்டத்தின்படிதான் இந்தியாவில் ஆட்சி இருக்கும் என்று பிரதமர் மோடி பல முறை உறுதியாக தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்து வந்தது. இப்போது வரும் ஜனவரி மாதம் பிரம்மாண்டமான ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. இதை இண்டியா கூட்டணியால் தடுத்து நிறுத்த முடியாது. இவ்வாறு அமித் ஷா பேசினார்.
இதற்கிடையில், உதயநிதியின் பேச்சுக்கு பாஜக தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ‘‘இந்துக்களை இனப் படுகொலை செய்யும் வகையில் உதயநிதியின் பேச்சு அமைந்துள்ளது. உதயநிதியின் பேச்சை இண்டியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்களா? என்று பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
உதயநிதி மீது டெல்லி போலீஸில் வழக்கறிஞர் புகார்: இதனிடயே, சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லியில் வழக்கறிஞர் ஒருவர் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் வினித் ஜிண்டால். இவர் டெல்லி போலீஸில் உதயநிதிக்கு எதிராக அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: சனாதனம் குறித்து தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சுகள், ஆத்திரமூட்டும் வகையிலும், எரிச்சலூட்டும் வகையிலும், இழிவான மற்றும் தூண்டிவிடும் வகையிலும் உள்ளது. அவருடைய பேச்சு சனாதனத்துக்கு எதிராக உள்ளது. ஒருஇந்துவாகவும் சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவனாகவும் உள்ள எனது மத உணர்வுகள் உதயநிதி ஸ்டாலின் பேச்சால் புண்படுத்தப்பட்டுள்ளன.
சனாதன தர்மத்தை ஒழிப்பதாக அவர் பேசியுள்ளார். அத்துடன் சனாதன தர்மத்தை டெங்கு, கரோனா, மலேரியா, கொசுவுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். சனாதனதர்மத்துக்கு எதிரான வெறுப்புணர்வே உதயநிதியின் பேச்சில் வெளிப்படுகிறது. அவர் எம்எல்ஏ.வாகவும், அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். அரசியலமைப்பு சட்டத்தின்படி பணியாற்றுவேன் என்று அவர் உறுதிமொழி எடுத்திருக்கிறார். அவர் அனைத்து மதங்களையும் கட்டாயம் மதிக்க வேண்டும். ஆனால், உள்நோக்கத்துடன் அவர்ஆத்திரமூட்டும் வகையிலும் மக்களை தூண்டி விடும் வகையிலும் பேசியிருக்கிறார். மதத்தின் பெயரால் மக்களிடையே மோதல் ஏற்படும் வகையிலும், பகை ஏற்படும் வகையிலும் பேசியிருக்கிறார்.
‘சனாதன தர்மாவை எதிர்க்க கூடாது. கரோனா, டெங்கு, மலேரியாவை போல் அதை ஒழிக்க வேண்டும்’ என்று உதயநிதி பேசியிருப்பது இந்து தர்மத்தைப் பின்பற்றுபவர்களை இனப்படுகொலை செய்வதற்கு தூண்டிவிடுவது போல் உள்ளது. இது 153ஏ மற்றும் பி, 295ஏ, 298 மற்றும் 505 ஆகிய இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றமாகும். எனவே, உதயநிதி மீது மேற்கூறிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் வினித் ஜிண்டால் கூறியிருக்கிறார்.