கல்வி

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு: இதுவரை 3.35 லட்சம் பேர் விண்ணப்பம்

சி.பிரதாப்

சென்னை: வரும் கல்வியாண்டில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கைக்காக இதுவரை 3.35 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான (2024-25) மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து வழக்கத்தை விட முன்னதாக இந்தாண்டு சேர்க்கைப் பணிகள் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் தொடங்கப்பட்டன.

அதனுடன் மாணவர் சேர்க்கையை முன்வைத்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்பலனாக மாநிலம் முழுவதும் பெற்றோர்கள் பலர் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் ஆர்வமுடன் சேர்த்துவருகின்றனர். இதுவரை 3.35 லட்சம் மாணவர்கள் வரை அரசுப் பள்ளிகளில் இணைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, “அரசுப் பள்ளிகளில், இதுவரை 3.35 லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அங்கன்வாடி மையங்களில் படித்து முடித்த மற்றும் சுகாதாரத் துறை மூலம் பெறப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களிடம் தலைமையாசிரியர்கள் மூலம் சேர்க்கை குறித்து நேரடியாக பேசி வருகிறோம். இந்த மாத இறுதிக்குள் 4 லட்சம் மாணவர்களை சேர்க்க வேண்டுமென இலக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னரும் சேர்க்கைப் பணிகள் தீவிரப்படுத்தப்படும்” என்றனர்.

SCROLL FOR NEXT