

சென்னை: கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை தெரிவிப்பது, விதிகளுக்கு புறம்பாக கருக்கலைப்பில் ஈடுபட்டதால் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கெடன்ஸ் மருத்துவமனையை மூடி சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள கெடன்ஸ் என்ற தனியார் மருத்துவமனை ஒன்றில், கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்துகருவில் உள்ள சிசு ஆணா, பெண்ணா என்பதை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து வருவதாக புகார் எழுந்தது.
பொது சுகாதாரத் துறை இயக்குநர் மற்றும் மருத்துவர் களத்தூர் ரவிகிருஷ்ணா ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இதுதொடர்பாக விசாரணை நடத்த சிறப்புக் குழு ஒன்றை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன் அமைத்தார்.
அதன்படி, கடந்த 2-ம் தேதியும், 23-ம் தேதியும் அதிகாரிகள் நேரடி ஆய்வு நடத்தினர். மருத்துவமனையில் போதிய பணியாளர்கள் இல்லை என்பதும், தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) சட்டம் 1997-ன் கீழ்உரிய அனுமதி பெறாமல் மருத்துவர்கள் பணியாற்றியதும் கண்டறியப்பட்டது. அது மட்டுமன்றி விதிகளுக்கு புறம்பாக கருக்கலைப்பு செய்வதும், மகளிர்நலன் மற்றும் குடும்ப கட்டுப்பாடுஅறுவை சிகிச்சைகளை உரியதுறைசார் மருத்துவர்கள் இல்லாமல் மேற்கொண்டதும் தெரியவந்தது.
அதேபோல், அவசர சிகிச்சைகளுக்கான மயக்கவியல் நிபுணர், பொது நல மருத்துவர் மற்றும் அவசரகால மருத்துவர்கள் இல்லாததும், அனுமதி பெறாமல் மனநல சிகிச்சைகள் அளித்ததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் நலன் கருதி, அந்த மருத்துவமனைக்கான பதிவுச் சான்றிதழை ரத்து செய்து அரசு ஆணையிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 23-ம் தேதி முதல் மருத்துவமனை மூடப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.