கொலை வழக்கில் கைதானவர்கள் 
க்ரைம்

இளைஞர் கொலை வழக்கு: தந்தை, தாய், சகோதரர் உள்பட 4 பேர் கைது

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் இளைஞர் கொலை வழக்கில் தந்தை, தாய், சகோதரர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி வீராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் குமார். இறால் மற்றும் கனவா மீன்களை வாங்கி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் ரஞ்சித்குமார் (40), அவருடைய மனைவி அனிதாவுடன் பிரான்ஸில் வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் ரஞ்சித்குமார், பிரான்ஸில் இருந்து வீராம்பட்டினத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்தார். மதுப்பழக்கம் கொண்ட ரஞ்சித்குமார் கையில் பணம் இல்லாததால், தந்தை செய்யும் தொழிலில் தனக்கும் பங்கு கொடுக்க வேண்டும் எனக் கேட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், அவருக்கும் அவரது தந்தை குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல் கடந்த 10-ம் தேதி இரவும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ரஞ்சித்குமார், அவரது தாயைத் தாக்கியதாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த தந்தை குமார் வீட்டில் இருந்த இரும்புக் கம்பியால் மகன் ரஞ்சித்குமாரைத் தாக்கியதாகவும் கூறப்பட்டது.

இதில், ரஞ்சித்குமார் மயங்கி விழுந்த நிலையில், அவரது கை, கால்களைப் புடவையால் கட்டிய குமார், மீண்டும் அவரை சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே ரஞ்சித்குமார் ரத்த வெள்ளத்தில் இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அரியாங்குப்பம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று ரஞ்சித் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வழக்குப் பதிவு செய்து இந்தக் கொலை தொடர்பாக குமாரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், ரஞ்சித்குமாரைக் கொலை செய்ததாக இன்று (பிப்.13) காலை குமார், கொலையை மறைத்ததாக, அவரது மனைவி அன்னக்கொடி, உடந்தையாக இருந்ததாக இளையமகன் செந்தில்குமார், உறவினர் செல்வம் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

தவறவிடாதீர்!

SCROLL FOR NEXT