பாலியல் வன்கொடுமை செய்து செவிலியர் கொலை: 2 பேருக்கு தூக்கு நெல்லை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டு, நகைகளை கொள்ளையடித்த வழக்கில் 2 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
கல்லிடைக்குறிச்சி கேட்வாசல் தெருவைச் சேர்ந்த 40 வயது பெண், மணிமுத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். ஏற்கெனவே, இவரது கணவர் காலமானார். இவரது மகன் 2008-ம் ஆண்டில் கோவையிலுள்ள பொறியியல் கல்லூரியில் படித்துவந்தார்.
கடந்த 30.9.2008-ம் தேதி வீட்டில் தனியாக வசித்து வந்த அந்த பெண் செவிலியர், வீட்டு மாடியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது வாயில் டவல் திணிக்கப்பட்டிருந்தது. நைலான் கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்டிருந்தது. வீட்டில் பீரோவில் இருந்த 67 கிராம் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
அப்போது, திருநெல்வேலி சரக டிஐஜியாக இருந்த கண்ணப்பன், அம்பாசமுத்திரம் டிஎஸ்பி ராஜமோகன் ஆகியோர் விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கையில் செவிலியர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இவ்விவகாரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த எம்.கார்த்திக் (33), மகேந்திரன் என்ற ராஜேந்திரன் (36), வசந்தகுமார் என்ற கணேஷ் (42), ராஜேஷ் (39), கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு கணேசன் (50), தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் சின்னத்துரை (39) ஆகிய 6 பேரை, கல்லிடைக்குறிச்சி போலீஸார் கைது செய்தனர்.
வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. மொத்தம் 75 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். செவிலியர் அணிந்திருந்த உடைகள், அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள், மீட்கப்பட்ட நகைகளை ஆவணங்களாக போலீஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர்.
வழக்கை விசாரித்து, வசந்தகுமார் என்ற கணேஷ் (42), ராஜேஷ் (39) ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து, நீதிபதி இந்திராணி தீர்ப்பு கூறினார். இவர்கள் இருவரும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது, டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதற்கான அறிக்கை அரசுத் தரப்பில் முக்கிய சாட்சியமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் கைதான மற்ற 4 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, அவர்களை நீதிமன்றம் விடுவித்தது.
