தமிழ் சினிமா

‘அட்டாக்கர்’ படத்தில் பிரபலமான இரண்டு வாரிசுகள்!

செய்திப்பிரிவு

கபடி, கிரிக்கெட், கால்பந்து, குத்துச்சண்டை எனப் பெரும்பாலான பிரபல விளையாட்டுகளை மையப்படுத்தி கோலிவுட் ‘ஸ்போர்ட்ஸ் டிராமா’களைக் கொடுத்துவிட்டது. எஞ்சியிருந்த கைப்பந்தை அறிமுக இயக்குநர் தாமோ நாகபூஷணம் கையிலெடுத்திருக்கிறார்.

பா.இரஞ்சித்திடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். ‘அட்டாக்கர்’ என்று தலைப்பு சூட்டப்பட்டிருக்கும் இப்படத்தின் மூலம் நடிகர் தனுஷின் அக்காள் மகன் பவிஷ் நாயகனாகவும் நடிகரும் அரசியல்வாதியுமான குஷ்பு - சுந்தர்.சி தம்பதியின் மகள் அவந்திகா நாயகியாகவும் இணைகிறார்கள்.

சினிமா மீடியா அண்ட் எண்டெர்டெயின்மெண்ட் லிமிடெட் சார்பில் தினேஷ் ராஜ் தயாரித்து வரும் இப்படத்தின் அறிமுகக் காணொளி வெளியாகி சமூக ஊடகங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்படம் குறித்து இயக்குநரிடம் கேட்டபோது, “முழுக்க முழுக்க வாலிபாலை அடிப்படையாகக் கொண்டு, அந்த விளையாட்டுடன் பின்னிப் பிணைந்த உணர்வுகள், அதில் முழுமையாக ஈடுபாடு காட்டும் வீரர்களின் சமூகப் பின்னணி, கலாச்சார அடையாளங்களை ஆராயும் படம் இது.

படத்துக்கு மேலும் நம்பகத்தன்மை சேர்க்கும் வகையில், இந்தியாவின் முன்னணி வாலிபால் வீரர்கள் பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர்.

நாயகன் - நாயகி இருவரும் தங்களுடைய கதாபாத்திரங்களுக்காக ஆறு மாதங்களுக்கும் மேலாகத் தொழில்முறை வாலிபால் வீரர்களுடன் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.

SCROLL FOR NEXT