'வலிமை' படத்தின் வில்லனாக நவ்தீப் நடித்து வருவதாக வெளியாகியுள்ள தகவலுக்கு படக்குழு அமைதி காத்து வருகிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'வலிமை'. ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வருகிறார் போனி கபூர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ளது.
சென்னையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கும் நேரம், நாட்களை முன்வைத்து 1 நாள், 2 நாள் என தொடர்ச்சியாக சத்தமின்றி படப்பிடிப்பை நடத்தி வருகிறது படக்குழு. இதுவரை சுமார் 30% படப்பிடிப்பு முடிந்திருக்கும் என்கிறார்கள்.
இதனிடையே, ஒரு பெரிய ஷெட்யூலைத் திட்டமிட்டு வருகிறார்கள். டெல்லி, மும்பை போன்ற இடங்களில் பண்ணலாமா அல்லது ஹைதராபாத்தில் அரங்கிலேயே எடுத்துவிடலாமா என்ற ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஷெட்யூலில் முக்கியமான காட்சிகள் மற்றும் ஒரு பெரிய ஆக்ஷன் காட்சியைப் படமாக்கவுள்ளனர்.
முதலில் 'வலிமை' படத்தில் அஜித்துக்கு வில்லனாக நவீன் சந்திரா நடித்து வருவதாகத் தகவல் வெளியானது. இது தொடர்பாக விசாரித்தபோது, படக்குழு மறுப்பு தெரிவித்தது. தற்போது வில்லனாக நவ்தீப் நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாயின. இதற்கு படக்குழு அமைதி காத்து வருகிறது. சமீபமாக தனது உடலமைப்பை முழுமையாக மாற்றியுள்ளார் நவ்தீப். இதனை முன்வைத்தே இப்படி ஒரு தகவல் வெளியாகியுள்ளதாகத் தெரிகிறது.
இப்போதைக்கு ஹியூமா குரோஷி நடிப்பது மட்டும் உறுதியாகியுள்ளது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் இசையமைத்து வருகிறார். காவல்துறை அதிகாரியாக அஜித் நடித்து வருவதாகவும், தீபாவளிக்குப் படம் வெளியாகும் எனவும் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
தவறவிடாதீர்