

தன்னிடம் ஒரு சிறுவன் நடந்து கொண்ட விதம் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் டிடி.
விஜய் டிவியில் முக்கியமான தொலைக்காட்சி தொகுப்பாளராக வலம் வருபவர் டிடி. இவருக்கென்றே தனி ரசிகர் வட்டம் உண்டு. தொகுப்பாளராக வலம் வந்தாலும், 'ப.பாண்டி', 'சர்வம் தாளமயம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'துருவ நட்சத்திரம்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இன்று (பிப்ரவரி 17) தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இவருக்கு பல்வேறு திரையுலக மற்றும் தொலைக்காட்சி பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே, தன்னிடம் ஒரு சிறுவன் செல்ஃபி கேட்கும் போது நடந்து கொண்ட விதத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விவரித்துள்ளார் டிடி.
அதில் டிடி, "உண்மையான குழந்தைகளைப் பற்றிய சின்ன கதை. ஒரு சிறுவன், பத்து வயதிருக்கும். தன் பெற்றோருடன் வந்து உங்களை மிகவும் பிடிக்கும், ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்றான். எடுத்துக் கொண்டேன். சில நிமிடங்கள் கழித்து மீண்டும் என்னிடம் வந்து உங்களை மிகவும் பிடிக்கும் ஆனால் அதைச் சொல்லப் பயமாக இருந்தது.
முதல் முறை அப்படி இருந்தது. இப்போது இல்லை என்றான். எவ்வளவு இனிமையாக, மரியாதையாகப் பேசியிருக்கிறான், மிகவும் அப்பாவித்தனமாக இருந்தான். இந்த ஒரு அன்பு விலைமதிப்பற்றது என நினைக்கிறேன். ஏன் இன்னொரு புகைப்படம் வேண்டும் என்று கேட்டேன். சும்மா வேண்டும் என்றான்.
கதை இதோடு முடியவில்லை. நான் என் காருக்குள் ஏறியவுடன் அவனைப் பார்த்து கை அசைத்தேன். அவன் தன் கையில் ஒரு மொபைலுடன் எனக்குக் கையசைத்தான். அந்த மொபைலில் என்னுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வால்பேப்பராக வைத்திருந்தான்.
அவ்வளவுதான், அதோட அன்றைய தினம் எனக்குச் சிறப்பானதாக ஆகிவிட்டது. என் குட்டி பையா, எங்கிருந்தாலும் சரி, நீ ஒரு கண்ணியமான ஆணாக வளர்வாய். உனது காதலி மிகவும் அதிர்ஷ்டமானவளாக இருப்பாள்" என்று தெரிவித்துள்ளார் டிடி.
தவறவிடாதீர்