தமிழ் சினிமா

தயவுசெய்து வேண்டாம்: ட்வீட் சர்ச்சை குறித்து விஜய் சேதுபதி கருத்து

செய்திப்பிரிவு

தான் வெளியிட்ட ட்வீட் குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்துள்ளார் விஜய் சேதுபதி.

’பிகில்’ படம் சம்பந்தப்பட்ட முக்கியமான நபர்கள் அனைவரது வீட்டிலும் வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்தச் சோதனை ஏன் என்பது குறித்து பல்வேறு செய்திகள், தகவல்கள் சமூக வலைதளத்தில் வெளியாகின. அதில் கிறிஸ்தவக் குழுக்கள் விஜய் மூலமாகத் தமிழகத்தில் காலூன்ற நினைப்பதாகவும், இதில் முதல் படியாக விஜய் சேதுபதி, ஆர்யா, ரமேஷ் கண்ணா, ஆர்த்தி உள்ளிட்டோர் சமீபத்தில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார்கள்.

இந்தச் செய்தியைத் தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து விஜய் சேதுபதி, "போயி வேற வேலை இருந்தா பாருங்கடா..." என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்த ட்வீட் பெரும் வைரலானது. இந்தச் சம்பவத்தை முன்வைத்து பல்வேறு தொலைக்காட்சிகளில் விவாதம் எல்லாம் நடந்தது.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு 'கன்னி மாடம்' என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் விஜய் சேதுபதி. இதனால் அங்கு பத்திரிகையாளர்கள் குவிந்தனர்.

போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கன்னி மாடம்' இசை வெளியீடு நேற்று (பிப்ரவரி 14) சென்னையில் நடைபெற்றது.

முதலில் மேடையில் பேசும்போது விஜய் சேதுபதி, "தொடும் பொருளில் நமது கை ரேகை பதியறது மாதிரி, ஒரு மனிதனுடைய சொல்லிலும், செயலிலும் அவனது குணத்தோட ரேகை இருக்கும் என நம்புகிறேன். அந்தக் குணத்தின் ரேகையைத்தான் போஸ் வெங்கட் பேச்சில் பார்த்தேன். அவரை 'மெட்டி ஒலி' சீரியலிலிருந்து பார்த்து வருகிறேன். ரொம்ப நம்பத்தகுந்த முகம். வாழ்க்கையில் எந்தவொரு கஷ்ட காலத்திலும் அவருடைய முகத்தைப் பார்த்தால் ஒரு நம்பிக்கை வரும். அப்படியொரு முகம் அவருக்கு.

'கவண்' படத்தில் போஸ் வெங்கட் எப்படி படத்துக்குள் வந்தார் என்று சொல்லிக் கொண்டிருந்தார். இவர் அந்தப் படத்துக்கான சாய்ஸே கிடையாது. சொட்டை மண்டை இருக்கும் ஒரு ஆள் தேவை. இவரோ மண்டையை சேவ் பண்ணிவிட்டுப் போய், இது ஒ.கே வா இப்போ நான் பண்ணலாமா என்று கேட்டிருக்கார். அந்த டெடிகேஷன் அவரது அனைத்து வேலையிலும் இருக்கும் என நம்புகிறேன்.

அவருடைய குணத்தை வைத்துச் சொல்கிறேன். இது ரொம்ப நல்ல படமாக இருக்கும். அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகள். முடிந்தவரை அன்பை மட்டுமே பரப்புவோம். ரொம்ப ஜாக்கிரதையாகப் பரப்புவோம்" என்று பேசினார் விஜய் சேதுபதி.

அதனைத் தொடர்ந்து விழா அரங்கிலிருந்து விஜய் சேதுபதி வெளியே வரும் போது பத்திரிகையாளர்கள் அவரிடம் ட்வீட் தொடர்பாகக் கேள்விகள் எழுப்பினர். அதற்கு, “அது பேசி முடித்துவிட்டேன். தயவுசெய்து வேண்டாம். எல்லாம் சேர்த்துத்தானே போட்டிருந்தேன்” என்று பதிலளித்துவிட்டு நிற்காமல் சென்றுவிட்டார் விஜய் சேதுபதி.

தவறவிடாதீர்

SCROLL FOR NEXT