'சூரரைப் போற்று' பாடல் வெளியீட்டு விழாவின் போது மாணவர்களின் கேள்வியால் நெகிழ்ச்சி அடைந்ததாக சூர்யா கூறினார்.
ஏர்டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து 'சூரரைப் போற்று' படத்தை இயக்கியுள்ளார் சுதா கொங்காரா. இந்தப் படத்திலிருந்து 'வெய்யோன் சில்லி' என்ற பாடலை விமானத்தில் பறக்கும் போது வெளியிட்டது படக்குழு. இந்த நிகழ்வு இன்று (பிப்ரவரி 13) சென்னையில் நடைபெற்றது.
சூர்யா, மோகன் பாபு, சிவகுமார் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் ஒரு முக்கிய நிகழ்வாக 'அகரம்' அறக்கட்டளையில் பயிலும் குழந்தைகளில் 70 பேரைத் தேர்வு செய்து விமானத்தில் அழைத்துச் சென்றனர். அவர்கள் அனைவருமே விமானத்தில் முதல் முறை பயணிப்பவர்கள் என்பது நினைவு கூரத்தக்கது.
சென்னை விமான நிலையத்துக்கு உற்சாகமாக வந்த மாணவர்கள், விமானத்தில் பறக்கும் போது சூர்யாவுடன் புகைப்படம் மற்றும் கையெழுத்து பெற்றனர். பாடல் வெளியீட்டு விழா முடிந்தவுடன், சென்னை விமான நிலையத்துக்கு வெளியே நின்று கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் மத்தியில் சூர்யா பேசும் போது, " முதல் முறையாக விமானத்தில் பறக்கிறவர்களை வைத்து இந்தப் பாடல் வெளியீட்டைப் பண்ணலாம் என நினைத்தோம். அவர்களுடைய கனவுகளைப் பற்றி ஒரு கட்டுரை எழுதச் சொன்னோம்.
அதில் ஜவ்வாது மலை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சுமார் 100 மாணவர்கள் ஜெயித்தார்கள். அதில் ஜெயித்த பலரும் 'நாங்கள் ஜெயித்தோம். ஆனால் எங்க அம்மாவை அனுப்ப முடியுமா? பாட்டியை அனுப்புறேன். அப்பாவை அனுப்புறேன்' என்று சொன்னார்கள். அவர்கள் தன்னுடைய வீட்டில் இருப்பவர்களைப் பங்கேற்க வைத்துள்ளார்கள். அதை இன்னும் ஒரு அழகான விஷயமாக பார்க்கிறேன். முதல் முறையாக விமானத்தில் பறக்கும் போது கிடைக்கும் சந்தோஷத்தை அளவிடவே முடியாது. இன்னும் பல விமானங்களில் பறந்து, பெரிய உயரத்தைத் தொடுவார்கள்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் சூர்யா.