'காடன்' படத்துக்காகப் பட்ட கஷ்டங்கள் குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ராணா பேசினார்
பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காடன்'. ஈராஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் டீஸர் மற்றும் மேக்கிங் வீடியோக்கள் ஆகியவை பத்திரிகையாளர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இதில் ராணா, பிரபு சாலமன், விஷ்ணு விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் ராணா பேசியதாவது:
'பாகுபலி' படத்துக்காகச் சென்னை வந்தேன். மீண்டும் சென்னைக்கு இந்தப் படத்துக்காகச் சென்னை வந்திருப்பதில் மகிழ்ச்சி. 'பாகுபலி' படத்தைப் போன்ற ஒரு அனுபவம் கிடைக்குமா என்று விஷ்ணு விஷால் தனது பேச்சில் தெரிவித்தார்.
பிரபு சாலமன் சார் அதை இந்தப் படத்தின் படப்பிடிப்பில் ஒரே வாரத்தில் மாற்றிவிட்டார். 5 ஆண்டுகள் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டோம் சார் என்று ராஜமவுலி சாரிடம் சொல்வேன். ஆனால், இந்தப் படத்தின் படப்பிடிப்புக்குப் பிறகு ராஜமவுலியிடம் "நீங்கள் எனக்கொரு அரசாங்கத்தையே வைத்திருந்தீர்கள். ஆனால் இவரோ என்னைக் காட்டுக்குள் விட்டுவிட்டார்" என்றேன்.
எனக்குப் பல மொழிகளிலுமிருந்து கதைகள் சொல்வார்கள். ஒரு நல்ல கதையிருந்தால் அது நிறையப் பேரை சென்றடைய வேண்டும் என விரும்புவேன். இது தான் எனது முதல் 3 மொழி படம். கதையில் என்ன இருந்தாலும், படப்பிடிப்பு தளத்தில் தான் பிரபு சார் அதை முடிவுச் செய்வார். தமிழ் காட்சி தான் முதலில் எடுப்போம். அது ஒரு 35 டேக் போகும். பின்பு தெலுங்கில் ஒரு 10 டேக் போகும். அதே இந்தி முடித்தவுடன், 'சார்... இந்தி மாதிரியே தமிழைச் செய்துவிடுவோம்' என்று மீண்டும் தமிழ் டேக்கை எடுப்பார். எத்தனை நாள் படப்பிடிப்பில் இருந்தோம் என்று எனக்கே தெரியாது.
இது ஒரு முக்கியமான படம். காடுகளுக்காகவும், யானைகளுக்காகவும் போராடும் ஒருவனுடைய படம். இந்தப் படம் கமர்ஷியலாக செய்தால் மட்டுமே மக்களிடையே போய் சேரும். இதற்காகப் பிரம்மாண்ட சண்டைக் காட்சிகள் எல்லாம் எடுத்துள்ளோம். 300 அடி மரத்தில் ஒரு சண்டைக் காட்சி எடுத்துள்ளோம். அதில் மரத்தின் அடியில் நடப்பதைத் தாய்லாந்திலும், ஒரு பகுதியைக் கேரளாவிலும், மற்றொரு பகுதியை அரங்கிலும் படமாக்கியுள்ளோம். அது சண்டை இயக்குநர் சாம் இல்லாமல் சாத்தியமில்லை.
என் முதல் படமான ’லீடர்’ தெலுங்கு படமாக இருந்தாலும், அதைத் தயாரித்தது ஏ.வி.எம் நிறுவனம். அன்று முதலே, தமிழில் ஒரு படம் பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்போதிலிருந்து நிறைய இயக்குநர்களைச் சந்தித்தேன். ஆனால், எதுவுமே சரியாக அமையவில்லை. தற்போது இந்தியிலிருந்து தயாரிப்பு நிறுவனம், தெலுங்கிலிருந்து ஒரு நடிகர், தமிழிலிருந்து ஒரு நடிகர் என அனைவருமே ஒன்றிணைந்து இருக்கிறோம். அப்படி என்றால் எவ்வளவு முக்கியமான கதை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பில் ஜாலியாக எதுவும் ஒரு விஷயம் நடந்தால் அதுக்கு விஷ்ணு விஷால் தான் காரணமாக இருக்கும். இது தான் நான் நடித்ததிலேயே கடினமான படம் என்று சொல்வேன். இந்தப் படத்திலிருந்து நிறைய கற்றுக் கொண்டேன் என்பதையும் பெருமையாகச் சொல்வேன். பிரபு சாலமன் ஒரு சிறந்த ஆசிரியர். நடிப்பு என்பதை எல்லாம் தாண்டி வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்தார்.
எப்போதுமே தமிழ்ப் படங்களில் நடிக்க ரொம்பவே ஆசை. ஆகையால், எனக்கான படப்பிடிப்பு இல்லை என்றால் விமானத்தில் சென்னை வந்து இயக்குநர்களைச் சந்தித்துக் கொண்டிருப்பேன். அப்போது 6 வருடங்களுக்கு முன்பு அப்பா சொன்னது இப்போதும் ஞாபகம் இருக்கிறது. அவ்வளவு எளிதாகத் தமிழ் சினிமாவில் நுழைந்துவிட முடியாது. கதை சொல்வதன் மீதும், இலக்கியத்தின் மீதும் நம்பிக்கை வைக்கும் கலாச்சாரம் தமிழில் உள்ளது. ஆழமான கதைகளில் நம்பிக்கை கொண்டது என்றார் அப்பா. அப்படி சற்று ஆழமான நபராக மாற சற்று தேர்ந்த நடிகராக 10 வருடம் எடுத்துள்ளது
இவ்வாறு ராணா பேசினார்.
தவறவிடாதீர்