

சந்தானம் நடிப்பில் உருவான 'சர்வர் சுந்தரம்' படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பால்கி இயக்கத்தில் சந்தானம், வைபவி சாண்டில்யா, ராதாரவி, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'சர்வர் சுந்தரம்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் அனைத்துமே 2016-ம் ஆண்டே முடிந்துவிட்டது.
ஆனால், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பைனான்ஸ் சிக்கலால் பலமுறை இந்தப் படத்தின் வெளியீடு அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. இறுதியில் அனைத்துப் பிரச்சினைகளும் பேசித் தீர்க்கப்பட்டு ஜனவரி 31-ம் தேதி 'சர்வர் சுந்தரம்' வெளியீடு என அறிவிக்கப்பட்டது. ஆனால், அன்றைய தினம் சந்தானம் நடிப்பில் உருவான 'டகால்டி' படம் வெளியானதால், 'சர்வர் சுந்தரம்' வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
அன்றைய தினமே, பிப்ரவரி 14-ம் தேதி 'சர்வர் சுந்தரம்' வெளியீடு என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தினமும் படத்தின் போஸ்டர்கள் மற்றும் வீடியோ பாடல் என வெளியிட்டுப் படத்தைத் தொடர்ச்சியாக விளம்பரப்படுத்தி வந்தது படக்குழு.
ஆனால், மீண்டும் படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழுவினர் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். நீண்ட காலமாக இந்தப் படத்தின் வெளியீடு, அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
தவறவிடாதீர்!