தமிழ் சினிமா

குழுமிய ரசிகர்கள் கூட்டம்:  வேன் மீது ஏறி விஜய் செல்ஃபி

செய்திப்பிரிவு

'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பில் ரசிகர்கள் ஒன்று திரண்டதைத் தொடர்ந்து, வேன் மீது ஏறி செல்ஃபி செல்ஃபி எடுத்துக் கொண்டார் விஜய்.

வருமான வரிச்சோதனை முடிவுற்றதைத் தொடர்ந்து, 'மாஸ்டர்' படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் விஜய். நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் விஜய் - ஆண்ட்ரியா - விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பாஜகவின் போராட்டம் நடத்தவே, விஜய் ரசிகர்களும் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து தினமும் விஜய்யைப் பார்க்க ரசிகர்கள் பெரும் திரளாகக் கூடி வருகிறார்கள்.

தினமும் படப்பிடிப்பு முடித்துவிட்டு வெளியே வரும் போது ரசிகர்களைப் பார்த்துக் கையசைத்து வாழ்த்துக் கூறி வருகிறார் விஜய். அதே போல் இன்று (பிப்ரவரி 9) படப்பிடிப்பு முடிந்து விஜய் வெளியே வந்தார். ஞாயிற்றுக்கிழமை என்பதால் ரசிகர்களோடு, அங்குள்ள மக்கள் பலரும் குடும்பமாக வந்திருந்தனர். இதனால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. போலீசாரும் லேசான தடியடி நடத்தினார்கள்.

அப்போது அங்கிருந்த வேன் மீது ஏறிய விஜய், தனது மொபைலில் செல்ஃபி எடுத்துக் கொண்டார். அங்கிருந்த கூட்டத்தினரைப் பார்த்து சில நிமிடங்கள் கையசைத்துவிட்டு, காரில் கிளம்பிச் சென்றார் விஜய். அப்போது அவருடைய காரின் மீது ரசிகர்கள் பலரும் மாலையை எறிந்தனர். இதனால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாக மீண்டும் போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

நெய்வேலி சுரங்கத்தில் நாளை (பிப்ரவரி 10) நடைபெறும் படப்பிடிப்புதான் இறுதி நாள் எனக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சென்னையில் சில முக்கிய காட்சிகளைப் படமாக்கவுள்ளது படக்குழு.

தவறவிடாதீர்

SCROLL FOR NEXT