தமிழ் சினிமா

'தனுஷ் - கார்த்திக் சுப்பராஜ்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

செய்திப்பிரிவு

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றுள்ளது.

'அசுரன்' படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் தனுஷ். லண்டனில் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.

லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி மற்றும் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்துள்ளனர். முதற்கட்ட படப்பிடிப்பு மட்டும் சுமார் 64 நாட்கள் லண்டனில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான், மதுரை ஆகிய இடங்களில் படப்பிடிப்புகளைத் தொடர்ந்து ராமேசுவரத்தில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இதன் காட்சிகள் அனைத்து முடிக்கப்பட்டு, ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும், படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பிப்ரவரி 19-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. சஷிகாந்த் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

முன்னதாக, இந்தப் படத்துக்கு ‘சுருளி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால் படக்குழுவினர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். கார்த்திக் சுப்பராஜ் படத்தை முடித்துவிட்டு, தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கர்ணன்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ்.

SCROLL FOR NEXT