'மாஸ்டர்' படப்பிடிப்பில் பாஜகவினர் நடத்திய போராட்டத்தில் தனக்கு உடன்பாடில்லை என்று அந்தக் கட்சியைச் சேர்ந்த காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
'பிகில்' படம் தொடர்பாக ஏஜிஎஸ் அலுவலகம், விஜய் வீடு, ஸ்கிரீன் சீன் அலுவலகம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகள் ஆகியவற்றில் வருமான வரிச்சோதனை நடைபெற்றது. இதில் பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் மட்டும் தற்போது வரை சோதனை நிறைவு பெறவில்லை.
இந்தச் சோதனைக்காக 'மாஸ்டர்' படப்பிடிப்பிலிருந்து சென்னை அழைத்து வரப்பட்டா விஜய். தன் வீட்டில் நடந்த சோதனை நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, இன்று (பிப்ரவரி 7) மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் விஜய். நெய்வேலி சுரங்கத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் இடத்தில் பாஜகவின் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அங்கு விஜய் ரசிகர்களும் கூடி, பாஜகவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இந்த வீடியோக்கள் செய்திகளாக வெளியிடப்பட்டன. இது தொடர்பாக பாஜக கட்சியைச் சேர்ந்த காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
தமிழக பாஜகவா? தீர்மானமாகத் தெரியுமா? அதிர்ச்சியாக இருக்கிறது. ஏன் திடீர் போராட்டம்? அர்த்தமே இல்லை. விஜய் அவர்கள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை பாஜகவால் அல்ல என்பதை என்னால் கண்டிப்பாகச் சொல்ல முடியும். ஒரு பாஜக உறுப்பினராக எனக்கு அது தெரியும்.
என்ன போராட்டம், ஏன் போராட்டம் என்பது எனக்குத் தெரியவில்லை. இந்த போராட்டத்தில் எனக்கு உடன்பாடில்லை. தமிழக பாஜக இதைப் பார்க்க வேண்டும். இந்த போராட்டத்தை நிறுத்த வேண்டும். திரைத்துறையைச் சேர்ந்தவளாக, பாஜக உறுப்பினராக இது எனது கோரிக்கை.
இவ்வாறு காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
தவறவிடாதீர்