

5 வருடங்களில் பல வீழ்ச்சிகளைச் சந்தித்துள்ளார் என்று சரத்குமார் குறித்து ரயான் மிதுன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
தனா இயக்கத்தில் சரத்குமார், ராதிகா சரத்குமார், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'வானம் கொட்டட்டும்'. மணிரத்னம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சித் ஸ்ரீராம் மற்றும் கே இருவரும் இணைந்து இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று (பிப்ரவரி 7) வெளியாகியுள்ளது.
இந்தப் படம் பார்த்தவர்கள் பலரும் சரத்குமார் மற்றும் ராதிகா இருவரின் நடிப்பையும் பாராட்டி வருகிறார்கள். இதனிடையே ராதிகாவின் மகளான ராயன் மிதுன் தனது ட்விட்டர் பதிவில் கடிதமொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பத்து முறை விழுந்தாலும், எவ்வளவு தூரம் விழுந்தாலும், 11-வது முறை மீண்டு வருவதே வெற்றி என்பது. வீழ்வது தோல்வி அல்ல. வீழ்ந்த பிறகு என்ன செய்கிறோம் என்பதே. இந்த ஐந்து வருடங்களில் இந்த மனிதர் பல வீழ்ச்சிகளைச் சந்தித்திருக்கிறார். ஆனால் அவை இவரை இன்னும் வலிமையாக்கியிருக்கின்றன.
அவரை இந்தப் படத்தில் பார்த்தது என்னை உணர்ச்சிகரமாக்கியது. அவரை அணைத்து உங்களைப் பிடித்திருக்கிறது, உங்களை நினைத்துப் பெருமையாய் இருக்கிறது என்று மட்டுமே நான் சொல்ல நினைத்தேன். இது வெறும் ஆரம்பம் மட்டுமே அப்பா. இனிமே எல்லாம் முன்னோக்கி, உயரத்தை நோக்கியே இருக்கும். சென்று படத்தைப் பாருங்கள்.
இவ்வாறு ராயன் மிதுன் தெரிவித்துள்ளார்.
தவறவிடாதீர்