தமிழ் சினிமா

குனிந்து பழக்கப்பட்டவர்கள்; காலணியைக் கழட்டக் குனிய முடியவில்லையா? - ஸ்ரீப்ரியா சாடல்

செய்திப்பிரிவு

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் செயலைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் ஸ்ரீப்ரியா.

நீலகிரி மாவட்டத்தில் யானைகள் புத்துணர்வு முகாம் இன்று (பிப்.6) தொடங்கியது. முகாம் தொடக்கத்துக்கு முன்பாக கோயிலில் பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பூஜைக்காக கோயிலுக்குள் செல்ல காலணியைக் கழற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த பழங்குடியினச் சிறுவனை அழைத்து காலணியைக் கழற்றி விடச் சொன்னார். அந்தச் சிறுவன் கழட்டி விடும்போது யாரும், வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க முடியாத வகையில் அதிகாரிகள் மறைத்து நின்றிருந்தனர். இந்த வீடியோ பதிவு காலையிலிருந்து ட்விட்டர் தளத்தில் வைரலாகி வருகிறது.

பலரும் அமைச்சர் திண்டுக்கல் சீனுவாசனின் செயலுக்கு தங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகிறார்கள். அமைச்சரின் இந்தச் செயலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்தவரும், நடிகையுமான ஸ்ரீப்ரியா தனது ட்விட்டர் பதிவில், "அட...ம்! காலில் விழ குனிந்து பழக்கப்பட்டவர்கள், தன் காலணியைக் கழட்டக் குனிய முடியவில்லையா? ஊரார் பிள்ளையைக் காலணியைக் கழட்டச் செய்வது அதிகாரத்தின் உச்சகட்டம்! அரசு இதைக் கண்டிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

தவறவிடாதீர்

SCROLL FOR NEXT