தமிழ் சினிமா

’மாயவன்’ தோல்வி, வாழ்க்கையில் எடுக்கும் ரிஸ்க், அப்பாவின் மறைவு: கண் கலங்கிய சி.வி.குமார்

செய்திப்பிரிவு

'மாயவன்' படத்தின் தோல்விக்குப் பிறகு அப்பா கொடுத்த ஊக்கம், பின்பு அவரது மறைவு என சி.வி.குமார் கண் கலங்கியபடியே பேசினார்.

ஜானகிராமன் இயக்கத்தில் கலையரசன், ஆனந்தி, ஆஷ்னா ஜாவேரி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்'. சி.வி.குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (பிப்ரவரி 5) காலை சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன், சி.வி.குமார் தயாரிப்பில் படங்களை இயக்கிய இயக்குநர்களும் ஒன்றாகக் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் தயாரிப்பாளர் சி.வி.குமார் பேசியதாவது:

" 'டைட்டானிக்' படம் தொடங்கி 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார்கள். இந்தப் படத்தின் கதைக்கு அவ்வளவுதான் தேவைப்பட்டது. அந்த 25 நாட்களிலேயே சுமார் 60 நாட்களுக்கான செலவு பண்ணினார்கள். இயக்குநர் பா.இரஞ்சித் 'அட்டகத்தி' படத்தை 54 நாட்களில்தான் எடுத்தார். 1.75 கோடி ரூபாய்தான் செலவு பண்ணினார். இவர்களோ 25 நாளில் சுமார் 2.25 கோடி ரூபாய் செலவு பண்ணினார்கள்.

இந்தப் படம் முன்பே வெளியாகியிருக்க வேண்டியது. சில காரணங்களால் வெளியாகவில்லை. இந்தப் படம் எப்போது வெளியானாலும் ஓடும் என்ற நம்பிக்கை இருந்தது. இந்தக் கதையைப் படிக்கும்போது 'ஆண் பாவம்' படம் ஞாபகம் வந்தது. அந்தத் தலைப்பைக் கேட்டேன், தரமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள்.

பள்ளிக் காதல், கல்லூரிக் காதல், வேலைக்குச் செல்லும்போது உள்ள காதல், திருமணத்துக்குப் பிறகான காதல் என 4 காதல்கள் படத்தில் உள்ளன. நிவாஸ் கே.பிரசன்னா அற்புதமான பாடல்கள் கொடுத்திருக்கிறார். இந்தப் படக்குழுவினர் இரவு பகலாகப் பணிபுரிந்து கொடுத்தார்கள். கண்டிப்பாக ஒரு ஜாலியான படமாக இருக்கும்.

இங்கு இயக்குநர் நலன் நான் ரிஸ்க் எடுப்பதைப் பற்றிச் சொன்னார். எனக்கு எப்போதுமே ரிஸ்க் எடுப்பது பிடிக்கும். பாதுகாப்பான வாழ்க்கையில் இருக்க வேண்டும் என நினைக்கும் யாருமே முன்னுக்குச் செல்வதில்லை. வாழ்நாள் முழுக்க ஒரே இடத்தில் நின்றுகொண்டே இருப்பார்கள். ரிஸ்க் எடுக்கும்போது காடு உங்களை நோக்கித் திரும்பினால் நீங்கள் ராஜா, இல்லையென்றால் நீங்கள் ரோட்டில்தான் நிற்க வேண்டும்.

வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க எங்க அப்பா எனக்குச் சொல்லிக் கொடுத்தார். இப்போது அவர் என்னுடன் இல்லை (என்று பேசிக் கொண்டிருக்கும் போதே கண் கலங்கினார்).

'மாயவன்' படம் தோல்விக்குப் பிறகு அனைத்துமே போய்விட்டது. வீட்டுக்குச் சென்றேன். அம்மா திட்டினார், மனைவி சோகமாக இருந்தார். ஆனால் அப்பாவோ 'விடு.. திறமைசாலி திரும்ப வருவான்' என்றார். (மீண்டும் கண் கலங்கினார்).

எங்க அப்பாதான் எனக்கு உத்வேகம், அவர் தான் ரோல் மாடல். இப்படித்தான் வாழ வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பார். ஆனால், எங்க அப்பா, ''சம்பாதிக்கிறதைச் சேர்த்து வைச்சுடாதே.. ஜாலியா செலவு பண்ணு.. நினைத்த மாதிரி வாழ்.. ஒரு தடவை கிடைக்கிற இந்த வாழ்க்கையை நினைத்த மாதிரி வாழ்ந்து செத்துப் போய்விடணும்” என்றார். அதுதான் என் ஐடியாலஜி. ஒரு விஷயம் நினைத்தால் செய்துவிட வேண்டும். வெற்றி, தோல்வி எல்லாம் அதற்குப் பிறகு தான்.

இன்று நான் எடுக்கும் ரிஸ்க்கை விட, 'அட்டகத்தி' படத்தின்போது எடுத்ததுதான் பெரிய ரிஸ்க். அந்தப் படத்துக்கு முன்பு 10 ஆண்டுகள் உழைத்த உழைப்பை அதில் போட்டிருந்தேன். அந்தப் படம் முடிந்து 2 மாதம் ரோட்டில் சுற்றிக் கொண்டிருந்தேன். இன்று என்னுடன் பணிபுரிந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவருமே உறுதுணையாக இருக்கிறார்கள். அன்று தனியாக நிற்கும்போது, ஞானவேல்ராஜா சார் உதவி செய்தார்.

'அட்டகத்தி' படத்தைப் பலருக்கும் போட்டுக் காட்டினேன். இது ஒரு குப்பை, ரிலீஸ் செய்யாதீர்கள் எனப் பலரும் சொன்னார்கள். ஒரு கட்டத்தில் தப்பான படம் பண்ணவில்லை என்று முடிவெடுத்து ஊருக்குப் போய்விட்டேன். ஒரு நாள், ''ஞானவேல்ராஜா சார் படம் பார்த்துவிட்டு வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்கிறார், நீங்கள் வாருங்கள்'' என இரஞ்சித் அழைத்தார். உண்மையான படத்தின் பட்ஜெட் என்னவென்று சொன்னேன். அப்போது 4.25 கோடி ரூபாய் எம்.ஜி.யில் வாங்கிக் கொள்கிறேன் என்றார். அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு அடுத்த நாள் 'பீட்சா' ஷுட்டிங் போய்விட்டோம். அதுதான் என் கேரக்டர்.

'ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் ஒரு வேலை முடியும் என்றால், அதற்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் நீ பெரிய ஆளல்லை. ஒரு கோடி ரூபாய் வேலையை 10 லட்ச ரூபாயில் முடித்தால்தான் நீ பெரிய ஆள்' என்று அப்பா சொல்வார். அதைத்தான் நான் செய்து வருகிறேன்”.

இவ்வாறு தயாரிப்பாளர் சி.வி.குமார் பேசினார்.

தவறவிடாதீர்:

SCROLL FOR NEXT