நான் தெலுங்கு நடிகையா, தமிழ் நடிகையா என விவாதம் நடக்கிறது என்று ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
2018-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான படம் 'கனா'. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம், தெலுங்கில் 'கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இப்படம் வெளியானது.
'கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி' திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், தெலுங்கில் பல்வேறு வாய்ப்புகள் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வரத் தொடங்கின. தற்போது கூட விஜய் தேவரகொண்டாவுக்கு நாயகியாக நடித்துள்ள 'வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்' நாளை (பிப்ரவரி 14) வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில் ஐஸ்வர்யா ராஜேஷ், 'கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி' படம் தெலுங்கில் வரவேற்பு பெறாதது குறித்தும் பேசியுள்ளார்.
இது தொடர்பாக ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது:
"தயாரிப்பாளர் கேஎஸ் ராம ராவுக்கு 'கனா' படம் பிடித்தது. அதன் தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்கி தயாரித்தார். 45 நாட்களில் படப்பிடிப்பை முடித்து வெளியிட்டு விட்டோம்.
'சாஹோ' வெளியான சில தினங்களில் 'கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி' வெளியானது. சரியாக ஓடவில்லை. ஒரு படம் என்ன என்பதை மக்கள் தெரிந்துகொள்ள ஒரு வாரமாவது அரங்கில் ஓட வேண்டும். புதுமுகத்தைத் திரையில் பார்க்க, பணம் செலவழிக்க மக்கள் யோசிப்பார்கள். ஆனால் சமீபத்தில் படம் தொலைக்காட்சியில் திரையிடப்பட்டபோது பார்த்தவர்கள் படத்தைப் பாராட்டுகின்றனர்".
இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்தார்.
மேலும், "சென்னை நண்பர்கள் தெலுங்கில் நிறையப் படங்கள் நடிப்பது குறித்து என்ன சொல்கிறார்கள்" என்ற கேள்விக்கு, ஐஸ்வர்யா ராஜேஷ் பதில் அளிக்கையில், "யூடியூப், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் நிறைய கருத்துகளைப் பார்க்கிறேன். நான் தெலுங்கு நடிகையா, தமிழ் நடிகையா என விவாதம் நடக்கிறது.
என் அம்மாவுக்கு நான் நிறைய தெலுங்குப் படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசை. ஜூனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோருடன் நான் நடிக்க வேண்டும் என்று சொல்கிறார். தெலுங்குப் படங்கள் பார்த்துதான் நாங்கள் வளர்ந்தோம். என்னால் தெலுங்கில் எழுத, பேச, படிக்கத் தெரியும். தமிழ், தெலுங்கு என இரண்டு கலாச்சாரம் தொடர்பான பண்டிகைகளையும் நாங்கள் கொண்டாடுவோம்" என்று தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
தவறவிடாதீர்!