பலன்கள்: மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும், மரியாதை கொடுக்கும் மேஷ ராசி வாசகர்களே! நீங்கள் எதிலும் அறிவார்ந்து செயல்படுபவர். வெளி வட்டாரப் பழக்கங்களை விரும்பும் தாங்கள் ஒரு சிறந்த பண்பாளர். வார்த்தைகளில் நிதானம் மிக்கவர். தேவை இல்லாத இடங்களில் கருத்து கூற மாட்டீர்கள். யாரும் கேட்டால் மட்டுமே உதவி செய்வீர்கள். அதிலும் உடல் ஊனமுற்றோருக்கு அள்ளி வழங்குவீர்கள். முயற்சிகள் பல செய்து நல்ல செயல்களைச் செய்து சிறப்படைவீர்கள்.
குடும்பத்திலும் சிறு சலசலப்புகள் ஏற்படும். வெளியில் கொடுத்திருந்த பணம் கைக்கு திரும்பி வரத் தாமதமாகும். இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்கு சிறிது கடன் வாங்க நேரிடலாம். சகோதர, சகோதரி வகையிலும் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம்.
உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களும் உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்த நினைப்பார்கள். மற்றபடி மனதில் ஊக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு செயல்படுவீர்கள். கடினமாக முயற்சி செய்து உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. யாரையும் புண்படுத்தாமல் உங்கள் அணுகு முறையால் வெற்றி பெறுவீர்கள்.
ஜூலை மாதம் முதல் ஆண்டு இறுதி வரை உள்ள கால கட்டத்தில் குடும்பத்தில் பாகப் பிரிவினை சுமுகமாக நடக்கும். அசையாச் சொத்துக்களில் இருந்து வருமானம் வரத் தொடங்கும். பல விஷயங்களை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். குறைந்த உழைப்பிலும் அதிக ஆதாயம் கிடைக்கும்.
அதேசமயம் புறம் பேசுபவர்களை இனம் கண்டு ஒதுக்கவும். குடும்பத்தில் ஏற்படும் சில அனாவசியப் பிரச்னைகளைக் கண்டும் காணாமல் இருக்கவும். செய் தொழிலில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். நவீன பொருட்களை வாங்கி இல்லத்தை அலங்கரிப்பீர்கள். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்கும் உதவி செய்து பெருமையடைவீர்கள்.
மற்றபடி அலைச்சல் தரும் வேலைகளைக் குறைத்துக்கொள்ளவும். அனாவசியப் பயணங்களையும் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு அலைச்சலும் வேலைப்பளுவும் அதிகரித்தாலும் உங்கள் வேலைகள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறும். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். அலுவலக ரீதியான பயணங்களால் பண வரவு உண்டாகும். அதே நேரம் சக ஊழியர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம்.
சிலருக்கு இந்த ஆண்டு விரும்பத்தகாத இடமாற்றங்கள் உண்டாகும். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் அனுகூலமான பலன்களைக் காண்பீர்கள். தொழில் ரீதியாக புதிய திருப்பங்கள் ஏற்படும். புதிய சந்தைகளை நாடிச் செல்லும் போது அதீத கவனத்துடன் செயல்பட்டு செயல்பட வேண்டும்.
கூட்டுத்தொழில் புரிவோர் சற்று உஷாராக இருப்பது நல்லது. சந்தையில் போட்டிக்குத் தகுந்தவாறு விலையை நிர்ணயம் செய்து விற்றால் நல்ல வருமானத்தைப் பெற முடியும். அரசியல் வாதிகள் இந்த ஆண்டு பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். இதனால் உங்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். எதிரிகளும் உங்களிடம் அடங்கியே நடப்பார்கள்.
கலைத் துறையினரைத் தேடிப் புதிய ஒப்பந்தங்கள் வரும். ஆனாலும் ரசிகர்களின் ஆதரவு குறைந்தே காணப்படும். எனவே ரசிகர் மன்றங்களுக்கு செலவு செய்து அவர்களை உற்சாகப்படுத்தவும். தொழிலில் கவனமும், செயல்பாட்டில் நிதானமும் தேவை. பெண்மணிகளுக்கு குழந்தைகளால் பெருமை உண்டாகும்.
அதேசமயம் கணவருடன் வாக்கு வாதங்கள் ஏற்படலாம். அதனால் பொறுப்புடனும், நிதானத்துடனும் நடந்துகொள்ளவும். மற்றபடி பொருளாதார நிலையில் எந்தக் குறைவும் ஏற்படாது. எனவே ஆடை , அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகள் படிப்பில் கவனத்துடன் ஈடுபடவும். சிலர் முதல் தரம் வாங்குவார்கள். விளையாட்டிலும் வெற்றி பெறுவார்கள்.
அஸ்வினி: இந்த ஆண்டு காரியத்தடைகள் நீங்கி அனுகூலம் பிறக்கும். மதிப்பு மரியாதை சுமாராகவே இருக்கும். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும்.
பரணி: இந்த ஆண்டு புதிய வீடு வாங்க வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும் என்றாலும் ஏழாம் இடத்தில் இருக்கும் ராகுவால் சிற்சில பிரச்சனைகள் வரத்தான் செய்யும். எனவே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும்.
கார்த்திகை 1ம் பாதம்: இந்த ஆண்டு உறவினர் வகையில் அதிக நெருக்கம் வேண்டாம். சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். தூரத்தில் இருக்கும் உறவினரால் நன்மை ஏற்படும்.
பரிகாரம்: செவ்வாய்கிழமை தோறூம் அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வரவும். முடிந்தவர்கள் அருகில் இருக்கும் அறுபடை ஸ்தலங்களுக்குச் சென்று வாருங்கள். ’கந்த ஷஷ்டி கவசம்’ அன்றாடம் பாராயணம் செய்வது. “ஓம் சரவண பவ” என்ற மந்திரத்தை சொல்லி வரவும்.
பலன்கள்: சொன்ன நேரத்தில் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்து பொறுப்புடன் நடந்து கொள்ளும் ரிஷப ராசி வாசகர்களே! நீங்கள் இராப்பகல் பாராமல் உழைப்பதில் வல்லவர். காசு விஷயத்தில் கறாராக இருப்பவர். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்பவர். தன்னை விட தங்கள் குழந்தைகள் நன்றாக வர வேண்டும் என்று விரும்புபவர்கள்.
இந்த ஆண்டில் உங்களின் வாக்கு வன்மையில் பிரச்சனை வரலாம். மற்றபடி உங்களின் ஆன்மிக சிந்தனைகள் மெருகேறும். புதிய ஆலயங்களைத் தேடிச் சென்று வழிபடுவீர்கள். குடும்பத்தின் வளர்ச்சியில் உங்களின் பங்களிப்பு பெருகும். உற்றார் உறவினர்களையும் நண்பர்களையும் அனுசரித்து நடந்து கொள்வீர்கள்.
அதேநேரம் எவரிடமும் அனாவசிய பேச்சு வேண்டாம். மற்றவர்களின் பேச்சுக்களையும், நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனித்து அதற்கேற்ப உங்களின் செயல்பாடுகளை வகுத்துக்கொள்ளவும். இந்த ஆண்டு புதுப்புது ஆராய்ச்சிகளில் ஈடுபடுவீர்கள். திடீரென்று தொலை தூரப் பயணம் மேற்கொள்ளும் நிலைமை உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் எந்தக் குறைபாடும் ஏற்படாது.
யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றைச் செய்து உடல் நலத்தையும், மன வளத்தையும் பெருக்கிக் கொள்வீர்கள். செய் தொழிலில் படிப்படியான வளர்ச்சி ஏற்பட்டு பொருளாதார நிலை உயரும். போட்டியாளர்கள் பின் வாங்குவார்கள். அரசு வகையில் சில சலுகைகள் தேடி வரும். ஜுலை மாதத்தில் இருந்து ஆண்டு இறுதி வரையில் உள்ள கால கட்டத்தில் மனதில் ஏற்பட்ட இனம் புரியாத வேதனைகளும், பயங்களும் முற்றிலும் நீங்கிவிடும்.
உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களின் குறைகளைக் கண்டறிந்து தயவு தாட்சண்யமின்றி திருத்துவீர்கள். உங்களின் செயல்களுக்கு நண்பர்கள், கூட்டாளிகளிடம் வரவேற்பு கிடைக்கும். பெரியோரைத் தேடிச் சென்று அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். நேர் வழியில் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் கிடைக்கும்.
உங்களின் முடிவுகளை பயமின்றி செயல்படுத்துவீர்கள். குடும்பத்தினரை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். போட்டியாளர்கள் உங்களை ஏமாற்ற முடியாது. உங்களின் நெடுநாளைய ஆசை ஒன்று இந்தக் கால கட்டத்தில் பூர்த்தியாகும். உங்களின் தெளிந்த சிந்தனைகளால் பிறருக்கு தகுந்த அறிவுரைகளை வழங்குவீர்கள்.
உங்களைச் சார்ந்தவர்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பீர்கள். வெளிநாடு விசா குறித்த சந்தேகத்தில் இருந்தவர்களுக்கு ஆச்சரிப்படும் வகையில் விசா கிடைத்துவிடும். காணாமல் போயிருந்த பொருட்கள் மீண்டும் கை வந்து சேரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்தக் கால கட்டத்தில் புத்திர பாக்கியம் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் இந்த ஆண்டு ஓரளவுக்கு முன்னேற்றம் காண்பார்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். அதேநேரம் வேலைப் பளு அதிகரிக்கும். எனவே பொறுப்புடனும், நிதானத்துடனும் நடந்துகொள்ளுங்கள். அலுவலக ரீதியான பயணங்களைச் செய்ய நேரிடும். வியாபாரிகளுக்கு தொடர்ச்சியான லாபம் கிடைக்கும். அதிக முதலீடு செய்யாமல் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள்.
போட்டிகளை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். உபரி வருமானத்தை எதிர்காலத்திற்காக சேமித்து வைப்பீர்கள். கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொண்டு அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குவீர்கள். அரசியல் வாதிகள் மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கட்சித் தொண்டர்களின் ஆதரவு நன்றாக இருக்கும்.
எவரையும் பகைத்துக்கொள்ளாமல் உங்கள் செயல்களைச் செய்து நற்பெயர் வாங்குவீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு உயரும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கும். எனவே வாய்ப்புகளை நன்கு ஆராய்ந்து தேர்வு செய்ய வேண்டி வரும்.
சக கலைஞர்களின் உதவிகளையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். பெண்மணிகளின் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். திருமணம் தடைபட்டவர்களுக்கு இந்தக் கால கட்டத்தில் திருமணம் நடக்கும். உத்யோகமும் கிடைக்கும். புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும். முக்கியப் பிரச்னைகளில் மௌனம் சாதித்து பிரச்னைகள் பெரிதாகாமல் பார்த்துக் கொள்ளவும். மாணவமணிகள் படிப்பில் அலட்சியம் காட்டாமல், திட்டமிட்டபடி படித்து நல்ல மதிப்பெண்களைப் பெற முயற்சிக்கவும். மற்றபடி உங்கள் படிப்புக்கு அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த மானியங்கள் கிடைக்கும்.
கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த ஆண்டு உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். ஆனாலும் வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. உடன் பணிபுரிவோரிடம் அனுசரனையாக நடந்து கொள்ளவும். சிலர் எதிர்பாராத இடமாற்றத்தை சந்திக்கலாம்.
ரோகிணி: இந்த ஆண்டு சொந்தத் தொழில் புரிவோர் சிறிது சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். ஆனாலும் உழைப்புக்கு ஏற்ற லாபம் கிடைக்கும். தொழில் நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் போக வேண்டி வரும்.
மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த ஆண்டு எதிரிகள் வகையில் அசட்டையாக இருத்தல் கூடாது. புதிய முதலீடுகளின் போது ஆலோசனைகள் அவசியமாகிறது. பண விஷயத்தில் தொடர்ந்து அக்கறை தேவை.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறூம் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று வரவும். “ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லுங்கள். உங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறும்.
பலன்கள்: எதிலும் நிதானத்தைக் கடைபிடித்து காரியங்களை கரை சேர்க்கும் மிதுன ராசி வாசகளே நீங்கள் எதிலும் உங்கள் அறிவை வெளிக்காட்டுபவர். உங்களுடைய சாதுரியத்தால் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். இன்முகம் காட்டாது அனைவரையும் அனுசரித்து செல்வீர்கள். உங்களுடைய தாய் மாமனுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுப்பீர்கள்.
இந்த ஆண்டு சமூகத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டிருந்த நண்பர்கள் மனம் மாறி மீண்டும் நட்புடன் பழகத் தொடங்குவார்கள். கடினமான காரியங்களையும சுலபமாக செய்து முடிப்பீர்கள். உங்களிடம் கடன் வாங்கியவர்கள் குறித்த நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவார்கள்.
வசதி படைத்தவர்கள் உங்களின் நண்பர்கள் ஆவார்கள். உங்களின் எளிமையான பேச்சினால் அனைவரையும் கவர்வீர்கள். சமூகத்தில் உங்களின் பெயரும், புகழும் படிப்படியாக உயரும். சிலருக்கு வெளியூர், வெளி நாட்டிற்கு சென்று வசிக்கும் வாய்ப்புகளும் கிடைக்கும்.
புதிய சூழ்நிலைகளில் வாழ உங்களைத் தயார்படுத்திக் கொள்வீர்கள். தொழிலாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். வருமானம் உயரும். குல தெய்வ வழிபாடுகளைச் செய்வீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். சிலர் புதிய தொழில் தொடங்க முயற்சி செய்வார்கள். ஸ்பெகுலேஷன் துறைகளின் மூலம் உபரி வருமானம் உண்டாகும். இதனால் சேமிப்புகள் உயரும்.
ஜூலை மாதத்தில் இருந்து ஆண்டு இறுதி வரை உள்ள கால கட்டத்தில் உங்கள் வேலைகளில் சிறு தடுமாற்றங்கள் ஏற்படலாம். அதனால் பொறுமையுடனும், பொறுப்புடனும் நடந்துகொள்ளவும். பெற்றோர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். உங்களின் முக்கியமான வேலைகளை ரகசியமாக வைத்துக்கொள்வீர்கள். ஆனாலும் நண்பர்கள் உங்கள் மீதுள்ள பொறாமையினால் பகைமை பாராட்டுவார்கள். அதைப் பெரிது படுத்த வேண்டாம். தேவையில்லாத விஷயங்களை மனதில் போட்டுக் குழப்பிக்கொள்வீர்கள். பழைய வழக்குகள் முடிவதில் கால தாமதம் ஏற்படும். மற்றபடி உழைப்பிற்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். உங்களின் செயல்களைத் திட்டமிட்டு சரியாகச் செய்து முடித்து விடுவீர்கள்.
தற்போது வசிக்கும் வீட்டை புதுப்பிப்பீர்கள். ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். புதியவற்றைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்திக்கொள்வீர்கள். தெய்வ வழிபாடுகளில் மனம் ஈடுபடும்.
புதிய இடங்களில் உங்களுக்கு சிறப்பான வரவேற்புகள் கிடைக்கும். ஆடம்பர கேளிக்கைகளில் குடும்பத்தாருடன் பங்கேற்று மகிழ்வீர்கள். உங்களை நம்பி வந்தவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வீர்கள். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். அனைத்துப் பிரச்னைகளையும் நுட்பமாக ஆராய்ந்து தீர்க்கமாக முடிவெடுக்கும் காலகட்டம் இது. உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் ஏற்பட்ட கெடுபிடிகள் குறையும்.
சக ஊழியர்கள் உங்களின் வேலைகளை தாமாகவே முன் வந்து பகிர்ந்துகொள்வார்கள். மேலதிகாரிகள் உங்களின் கோரிக்கைகளை பரிவுடன் பரிசீலிப்பார்கள். உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சுமுகமாக முடியும். கூட்டாளிகள் உங்களிடம் நட்போடு பழகுவார்கள்.
புதிய சந்தைகளை நாடிச் சென்று வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். போட்டிகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள். வாகனங்களுக்கு சிறிது பராமரிப்பு செலவு செய்ய நேரிடும். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவுடன் பதவியைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். முக்கியப் பிரச்னைகளில் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
கலைத் துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். பாராட்டும், பணமும் ஒருங்கே கிடைக்கும். சக கலைஞர்களின் மூலம் உங்களைப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். ரசிகர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்களின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். அதனால் நிதானத்துடன் செயல்படவும்.
உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை. மற்றபடி பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்களின் குடும்பம் நல்ல நிலையை அடையும். மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வெளி விளையாட்டுகளில் ஆர்வத்தைக் குறைத்துக்கொண்டு முன்னேறவும். ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த ஆண்டு நீண்ட முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் வாக்கு வாதம் ஏற்படலாம்.
திருவாதிரை: இந்த ஆண்டு பிற்பாதி மிகவும் சிறப்பாக இருக்கிறது. வேலையில் தீவிர அக்கறை எடுக்க வேண்டும். பெண்கள் குடும்ப ஒற்றுமைக்காக விட்டுக் கொடுத்து போக வேண்டியிருக்கும்.
புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த ஆண்டு உடல் நலத்தைப் பொறுத்தவரையில் பித்தம் மயக்கம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். மருத்துவச் செலவு வெகுவாகக் குறையும். மனதில் பட்டதை பளிச்சென்று சொல்வீர்கள்.
பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகில் இருக்கும் பெருமாள் ஆலயங்களுக்கு செல்லுங்கள், முடிந்தவர்கள் திவ்ய தேசங்களுக்கும் செல்லலாம். செல்வங்கள் குவியும். ஓம் ஹரி ப்ரும்ஹ வாசினே நமஹ - என்ற மந்திரத்தை தினமும் 27 முறை சொல்லவும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.