உலக மசாலா: அணில் சண்டை!

By செய்திப்பிரிவு

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் புகைப்படக்காரர் கிஸ்கிலோவ், மிக அரிதான ஒரு சண்டையைப் படம் பிடித்திருக்கிறார்.

‘‘இரண்டு அணில்கள் சண்டையில் இறங்கின. நான் கேமராவோடு தயாரானேன். என்னால் நம்பவே முடியவில்லை… எண்டர் தி டிராகன் படத்தில் புரூஸ் லீ காற்றில் பறந்து சண்டை போடுவது போல இரண்டு அணில்களும் சண்டையிட்டன. கைகளால் குத்தின. கால்களால் உதைத்தன. தற்காப்பு கலைகள் தெரிந்த ஒருவரால்தான் இப்படிச் செய்ய இயலும். என் வாழ்நாளில் வித்தியாசமான காட்சிகளைப் படம் பிடித்துவிட்டேன்!’’ என்கிறார் கிஸ்கிலோவ்.

அணில்கள் தற்காப்பு கலைகளைக் கற்றுள்ளதோ!

பிலிப்பைன்ஸைச் சேர்ந்தவர் ஹெர்னான்டோ குவான்லாவோ. கணக்காளராகப் பணிபுரியும் இவர், பொதுமக்களுக்கான நூலகத்தைத் தன் வீட்டில் அமைத்து, பராமரித்து வருகிறார். தினமும் கை நிறையப் புத்தகங்களைச் சேகரித்துக்கொண்டு வருகிறார். அதேபோல நூலகத்தில் இருக்கும் புத்தகங்களை ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாகவே வழங்கி வருகிறார். ’’எங்கள் பகுதியில் ஏழைகள் அதிகம் இருக்கிறார்கள். குழந்தைகளின் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிடுகிறார்கள். படிக்க ஆர்வம் உள்ள குழந்தைகளுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வதற்காகவே இந்த நூலகத்தை உருவாக்கியிருக்கிறேன். நான் 70 வயதை அடைவதற்குள் கல்வி அறிவில் எங்கள் மக்கள் முன்னேறிவிட வேண்டும்.

புத்தகங்கள் அறிவை மட்டும் கொடுப்பதில்லை. மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன. கற்பனையை வளர்க்கின்றன. சில புத்தகங்கள் நம்மோடு உறவாடவும் செய்கின்றன. ஒரு புத்தகம் எத்தனை வழிகளில் நமக்குப் பயன் தருகிறது என்பதைப் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் புரிய வைக்கிறேன். குழந்தைகள் இங்கே வந்து எந்தப் புத்தகத்தை வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். படித்துவிட்டு, எப்போது வேண்டுமானாலும் திருப்பித் தரலாம். இங்கே விதிகள் எதுவும் இல்லை என்பதுதான் ஒரே விதி.

6 ஆண்டுகளுக்கு முன்பு நான் சிறு வயதில் படித்த புத்தகங்களை சேகரித்து, ஒரு அலமாரியில் வைத்தேன். அது நாளடைவில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் கொண்ட மிகப் பெரிய நூலகமாக உருவாகிவிட்டது. என்னுடைய முயற்சி வெளியே தெரிய ஆரம்பித்த பிறகு பெரிய பெரிய பெட்டிகளில் புத்தகங்கள் நன்கொடையாக வர ஆரம்பித்தன. என் வீட்டின் ஒவ்வோர் அங்குலத்திலும் புத்தகங்கள்தான் ஆக்கிரமித்திருக்கின்றன. மணிலாவில் 50 நூலகங்கள் இருக்கின்றன. அவை எல்லோரும் பயன்படுத்தும் விதத்தில் எளிதாக இல்லை. சில நூலகங்களில் பணம் செலுத்த வேண்டும். ஆனால் என்னுடைய நூலகத்துக்குப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்தால் போதும். வேறு எதையும் நான் எதிர்பார்ப்பதில்லை’’ என்கிறார் ஹெர்னான்டோ.

தொடரட்டும் உங்கள் சேவை!

கலிபோர்னியாவைச் சேர்ந்த வீட்டு உபயோகப் பொருட்களுக்கான நிறுவனம் பிர்ச். வியாபாரத்தில் புதிய உத்தியைக் கையாண்டு வருகிறது. இங்கே வாங்கக்கூடிய ஒவ்வொரு பொருளையும் பயன்படுத்திப் பார்க்கலாம் என்பதே இந்தக் கடையின் தனிச் சிறப்பு. சமையலறைப் பொருட்களைப் பயன்படுத்திப் பார்ப்பதற்கு மிகப் பெரிய சமையலறை இங்கே இருக்கிறது. குளியலறைப் பொருட்களைப் பயன்படுத்திப் பார்ப்பதற்கு பெரிய குளியலறை இருக்கிறது. ஒவ்வொரு பொருளையும் பயன்படுத்திப் பார்ப்பதற்கு 2 மணி நேரம் ஆகும் என்பதால் காபியும் நொறுக்குத் தீனிகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன. ’’எங்கள் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு நீண்ட நேரம் ஆகும்.

ஆனால் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திப் பார்த்து, ஒரு பொருளை வாங்கும்போது மன நிறைவு அடைகிறார்கள். அதுதான் எங்கள் வெற்றியின் ரகசியம். ஷவர் வாங்குகிறீர்கள் என்றால், குளியலறையில் அந்த ஷவரைப் பயன்படுத்தி, திருப்தி என்றால் வாங்கலாம். இல்லாவிட்டால் வேறு பொருட்களைத் தேடலாம். அமெரிக்கா முழுவதும் 8 கடைகளை நடத்தி வருகிறோம்’’ என்கிறார் பிர்ச் நிறுவனத்தின் சி.இ.ஓ ஜெஃப்ரி சியர்ஸ். 2015-ம் ஆண்டு மட்டும் இந்தக் கடைகளின் வருமானம் 225 மில்லியன் டாலர்கள். ஒவ்வோர் ஆண்டும் வருமானம் இரட்டிப்பாகிறது. ஒவ்வோர் ஆண்டும் 4 புதிய கடைகளைத் திறக்கிறார்கள்.

புதிய வியாபாரத் தந்திரம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

39 mins ago

தமிழகம்

8 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்