டெல்டாவைவிட ஒமைக்ரானால் மீள் தொற்றுக்கு மூன்று மடங்கு அதிக வாய்ப்பு: உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தகவல்

By செய்திப்பிரிவு

உருமாறிய டெல்டாவைவிட ஒமைக்ரான் வைரஸால் மீள் தொற்று ஏற்பட மூன்று மடங்கு அதிக வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி மருத்துவர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று (திங்கள்கிழமை) அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:

கரோனா பாதித்தவர்களுக்கு 90 நாட்களுக்குப் பின்னர் மீள் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கும். அத்தகையோருக்கு டெல்டா திரிபைவிட ஒமைக்ரான் திரிபால் மீள் தொற்று ஏற்பட மூன்று மடங்கு அதிக வாய்ப்புள்ளது.

ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை என்னவென்பதைத் தெரிந்து கொள்ள நாம் இன்னும் 2 முதல் 3 வாரங்களுக்கு காத்திருக்க வேண்டும். தென் ஆப்பிரிக்காவில் ஓமைக்ரானால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தென் ஆப்பிரிக்கா அதிகமாக சோதனைகளை மேற்கொள்கிறது. அங்கு, தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் அதே வேளையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. நாம் இன்னும் 2 முதல் 3 வாரங்களுக்கு காத்திருக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு இன்னும் பல நாடுகள் தடுப்பூசி செலுத்தவில்லை. மிகக் குறைவான நாடுகளே அதுவும் குறைந்த அளவிலேயே தடுப்பூசியை செலுத்தியுள்ளன. அதனால் ஒமைக்ரானால் குழந்தைகளும், தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களும் பாதிக்கப்படலாம். இருப்பினும் நாங்கள் உலக நாடுகளில் இருந்து இன்னும் அதிகமான தரவு வருவதற்காகக் காத்திருக்கிறோம்.

தடுப்பூசியைப் பொருத்தவரை நான் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தான் முடிவுகளை எடுக்க வேண்டும். நாம் இப்போது எதிர்கொண்டிருப்பது அதே கரோனா வைரஸ் தான். அதனால், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே போதுமானது தான்.

ஒருவேளை இந்த புதிய உருமாறிய கரோனா வைரஸுக்கு என்று பிரத்யேகமாக தடுப்பூசி தயாரிக்க வேண்டும் என்றால், அதற்கு இப்போதைய தடுப்பூசிகளை எதிர்க்கும் ஆற்றல் ஒமைக்ரானுக்கு இருப்பது உறுதியாக வேண்டும்.

தடுப்பூசி தொடர்பாக அமெரிக்காவில் இருந்து மிகப்பெரிய தரவுகள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் பார்க்கும் போது தடுப்பூசிகள் கரோனா உயிரிழப்புக்கு எதிராக கேடயமாக இருக்கிறது என்பது நிரூபணமாகியுள்ளது. உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்துவதில் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. இதனை சரிசெய்யவே உலக சுகாதார அமைப்பு கோவேக்ஸ் திட்டத்தை செயல்படுத்துகிறது. இருப்பினும் குறைந்த அளவில் தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகளுக்கு இன்னும் அதிகமாக தடுப்பூசிகளை கொண்டு செல்ல வேண்டும்.

இந்த பெருந்தொற்றை எதிர்கொள்ள நமக்கு நிறைய அறிவியல் ஆதாரங்கள் தேவை. ஆகையால் உலக நாடுகள் தங்கள் நாட்டில் கண்டறியப்படும் உருமாறிய வைரஸ்கள் பற்றிய தகவலை துரிதமாக, வெளிப்படையாக எங்களுடன் பகிர வேண்டும். உலக நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு எட்டப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

7 mins ago

சினிமா

12 mins ago

இந்தியா

33 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்