உலக மசாலா: ராட்சச நண்டுகள்!

By செய்திப்பிரிவு

இந்தியப் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்திருக்கிறது கிறிஸ்துமஸ் தீவு. இந்தத் தீவில் பிரத்யேகமான உயிரினங்கள் வசிக்கின்றன. தீவில் உள்ள காடுகளில் உலகிலேயே மிகப் பெரிய நண்டுகள் வாழ்கின்றன. 4 கிலோ எடையும் 3 அடி நீளமும் கொண்ட இந்த நண்டுகள், ஒரு தேங்காயைத் தங்கள் கால்களால் உடைத்துவிடும் அளவுக்கு வல்லமை பெற்றவை.

இவை தண்ணீரில் வசிப்பதில்லை. நிலத்தில் உள்ள வளைகளில் வசிக்கின்றன. மரங்களில் ஏறுகின்றன. 60 ஆண்டுகள் வாழ்கின்றன. லட்சக்கணக்கில் இருந்து வந்த நண்டுகளின் எண்ணிக்கை, அவற்றின் மாமிசத்துக்காக வேட்டையாடப்பட்டு, வெகுவாகக் குறைந்து வருகின்றன. மார்க் பியரோட் என்ற புகைப்படக்காரர் கிறிஸ்துமஸ் தீவுக்குச் சென்று, துணிச்சலுடன் ராட்சச நண்டுகளைப் படங்கள் எடுத்திருக்கிறார்.

எவ்வளவு பெரிய உயிரினமாக இருந்தாலும் மனிதன் விட்டுவைப்பதில்லை…

உலகிலேயே மிகவும் வித்தியாசமான உணவுகளை விற்பனை செய்து வருகிறது ஜப்பானில் உள்ள சின்ஜுயா உணவு விடுதி. இங்கே சமைக்கப்படும் இறைச்சிகள் அனைத்தும் நாம் எந்தப் பகுதியைச் சாப்பிடுகிறோம் என்பது கண்கூடாகத் தெரியும் விதத்தில் தயாரிக்கப்படுகின்றன. முதலையின் பாதம் சமைக்கப்படாமலும் கால் பகுதி சமைக்கப்பட்டும் இருக்கிறது. ஆபத்தான மீன்களில் ஒன்றான பிரானா அப்படியே முழுவதுமாக க்ரில் செய்யப்பட்டிருக்கிறது. சாலமண்டர் முழு உருவத்துடன் பொரிக்கப்பட்டிருக்கிறது. இறைச்சியை விரும்பிச் சாப்பிடுபவர்கள் கூட சாப்பிடத் தயங்குவார்கள். ஆனால் 6 ஆண்டுகளாக இந்த உணவு விடுதியை மிகவும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள்.

இந்த விடுதியின் தலைமை சமையல் கலைஞர் ஃபுகுஒகா, ‘’எங்கள் வாடிக்கையாளர்கள் உலகம் முழுவதிலுமிருந்து வருகிறார்கள். உலகில் வேறு எங்கும் கிடைக்காத உணவுகளை, வித்தியாசமான முறையில் வழங்குவதுதான் எங்கள் விடுதியின் நோக்கம். ஒட்டகக் கறியிலிருந்து கறுந்தேள் வரை எங்கள் விடுதியில் கிடைக்கும். கிறிஸ்துமஸ் நேரத்தில் பனிமான்களின் உணவுகளைப் பரிமாறினோம். கரடி மாமிசத்துடன் கோழி முட்டைகள், கரப்பான்பூச்சி வறுவல், காட்டுப் பன்றியின் கால்கள் எல்லாம் எங்கள் உணவு விடுதியில் அதிகம் சுவைக்கப்படும் உணவுகள். இறைச்சி கிடைக்கும் காலத்தைப் பொறுத்து உணவுப் பட்டியல் மாறிக்கொண்டே இருக்கும். எங்களின் வித்தியாசமான உணவுகளுக்காகவே எங்கள் விடுதி மிகவும் பிரபலமாகிவிட்டது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வந்து பார்க்கிறார்கள். தவளை வறுவலையாவது ருசித்துவிட்டே செல்கிறார்கள்’’ என்கிறார்.

என்ன வித்தியாசமோ… முரட்டுத்தனமாகத் தெரிகிறது…

சீனாவில் வசிக்கும் வெங் ஸியோபிங் புகழ்பெற்ற மருத்துவர். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஆதரவு அற்ற விலங்குகளுக்கு அடைக்கலம் கொடுப்பதையே தன்னுடைய முழு நேர வேலையாக மாற்றிக்கொண்டார். ஓய்வு பெற்ற பிறகு தன்னுடைய சொத்துகளை 2.25 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டார். அந்தப் பணத்தை வைத்து மலையடிவாரத்தில் ஒரு சரணாலயத்தை ஆரம்பித்தார். யாரும் விரும்பாத, ஆதரவற்ற நாய்களையும் பூனைகளையும் வளர்த்து வருகிறார். அவருக்கு உதவியாக இருவர் வேலை செய்து வருகிறார்கள். தன்னுடைய 72 ஆயிரம் ரூபாய் பென்ஷன் தொகையில் இருந்து, ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கிவிடுகிறார். ’’இந்தச் சின்னஞ்சிறு விலங்குகளுக்கு ஒரு வேளைக்கு 18 வாளி உணவு தேவைப்படுகிறது.

அதாவது 50 கிலோ அரிசி தினமும் வேண்டும். என்னுடைய பென்ஷனுடன், ஏராளமான நல்ல உள்ளங்களும் இவற்றுக்காக உணவுகளை வழங்கி வருகிறார்கள். அதனால் என்னால் எளிதாகச் சமாளித்துக்கொள்ள முடிகிறது. இங்கே நாய்களையும் பூனைகளையும் வளர்ப்பதை விட, அவற்றை நோய் அண்டாமல் பார்த்துக்கொள்வது மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. எனக்கும் வயதாகிறது. எனக்குப் பிறகு இந்தச் சரணாலயத்தை யாராவது கவனித்துக்கொள்ள வந்தார்கள் என்றால் நிம்மதியாக இருப்பேன். யாராவது நல்ல உள்ளம் படைத்தவர் வருவார் என்று நம்புகிறேன். எனக்குப் பின்னால் வருபவர்களுக்கு நான் எந்தக் கஷ்டமும் கொடுக்கக்கூடாது என்று ஒவ்வொன்றையும் திட்டமிட்டு உருவாக்கி வருகிறேன்’’ என்கிறார் வெங்.

கருணையின் மறு உருவம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்