உலக மசாலா: பருமனான யோகா ஆசிரியர்!

By செய்திப்பிரிவு

எடை மிகுந்தவர்களால் எதையும் செய்ய இயலாது என்ற கட்டுக்கதையைத் தகர்ந்தெறிந்து இருக்கிறார் சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த யோகி வலெரி சாகுன். கடந்த 3 ஆண்டு களாகத் தன் எடை மிகுந்த உடலுடன் கடினமான யோகா சனங்களைச் செய்து, புகைப் படங்கள் எடுத்து வெளி யிட்டு வருகிறார். ‘‘என் உடல் பருமனால் நான் மிகவும் தன்னம்பிக்கை அற்றவளாக இருந்தேன். 4 ஆண்டுகளுக்கு முன்பு வாரம் இருமுறை யோகா வகுப்புகளுக்குச் செல்ல ஆர்ம்பித்தேன். கடினம் என்று நினைத்திருந்த யோகா, எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தது.

யோகா குரு, என்னை மிகவும் உற்சாகப்படுத்தி ஒவ்வொன்றையும் கற்றுக் கொடுத்தார். என் எடை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. என் எடை குறைந்ததை விட என் மனத்தில் இருந்த அவநம்பிக்கை, தாழ்வு மனப்பான்மை போன்றவை காணாமல் போனதில்தான் நான் ஆச்சரியமடைந்தேன். யோகா செய்வதற்கு முன் என்னால் மலை ஏற முடியாது, ஸ்கைடைவிங் செய்ய முடியாது.

இன்று எல்லாவற்றையும் எளிதாகச் செய்துவிடுகிறேன். என்னைப் போல பருமனானவர்கள் எடை குறித்து தாழ்வுமனப்பான்மை கொள்ளத் தேவை இல்லை என்பதைச் சொல்வதற்காகப் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறேன்’’ என்கிற வலேரி, இன்று யோகா ஆசிரியர்.

தலைகீழாகவும் ஒற்றைக் கையிலும் நிற்கும் வலேரியைப் பார்க்கும்போது நிச்சயம் நம்பிக்கை வருகிறது!

அமெரிக்காவின் பிரபல டாட்டூ கலைஞர் சார்லஸ் ஹாம். சமீபத்தில் ‘சேவ் மை இங்க்’ என்ற அமைப்பை ஆரம்பித்திருக்கிறார். டாட்டூ போட்டுக்கொண்டவர்கள் இறந்த பிறகும் அவர்களது டாட்டூ இந்த உலகத்தில் பத்திரமாக இருக்கும். ‘‘எத்தனையோ மணி நேரங்களைச் செலவிட்டு, எவ்வளவோ பணத்தைக் கொடுத்து தங்களுக்குப் பிடித்த டாட்டூக்களை உடலில் வரைந்துகொள்கிறார்கள். நான் 150 மணி நேரங்களைச் செலவிட்டு, உடல் முழுவதும் டாட்டூ வரைந்துகொண்டேன். நடிகர் ஜானி டெப் தன் டாட்டூவைத் தனக்குப் பின்னாலும் பாதுகாக்க வேண்டும் என்று சொன்னதைக் கேள்விப்பட்டேன். டாட்டூ சேமிக்கும் முறையை உருவாக்கிக்கொண்டேன்.

இறந்த உடலில் சில ரசாயனங்களை ஊற்றி, டாட்டூவை ஒரு தாளில் சேமித்துவிடலாம். அதை ஒரு கண்ணாடிக்குள் வைத்து பிரேம் செய்து, வீட்டில் மாட்டி விடலாம். நம் அன்புக்குரியவர்களின் விருப்பம் அவர்கள் மறைந்தாலும் இந்த உலகத்தில் நிலைபெற்று இருக்கும்’’ என்கிறார் சார்லஸ். இவருடைய அமைப்பில் உயிருடன் இருக்கும்போது உறுப்பினர்களாகிவிட வேண்டும். இறந்த பிறகு 18 மணி நேரத்துக்குள் தகவல் சொல்லிவிட வேண்டும். இறுதி நிகழ்ச்சிக்குள் டாட்டூவைப் பத்திரமாக எடுத்துச் சென்றுவிடுவார்கள். 3 மாதங்களில் வீட்டுக்கே டாட்டூ பிரேம் செய்யப்பட்டு வந்து சேரும்.

உலகில் புதுப் புதுத் தொழில்கள் உருவாகிக்கிட்டே இருக்கு…

உக்ரைனின் க்ரொலெவெட்ஸ் நகரில் இருக்கும் ஓர் ஆப்பிள் தோட்டம் உலகிலேயே தனித்துவம் மிக்கது. 10 ஏக்கர் நிலப்பரப்பில் அடர்ந்து வளர்ந்திருக்கும் ஆப்பிள் மரங்கள் அனைத்தும் ஒரே ஒரு மரத்தில் இருந்து தோன்றியவை. அந்தத் தாய் மரத்துக்கு வயது 220 ஆண்டுகள்! இத்தனை ஆண்டுகள் ஆப்பிள் மரம் உயிர் பிழைத்திருப்பதற்குக் காரணம், அந்த மரம் மரணத்திலிருந்து தப்பிக்கொள்ள மேற்கொண்ட உத்திதான். எல்லா ஆப்பிள் மரங்களைப் போலத்தான் இதுவும் இருந்தது. ஆனால் வயதாக வயதாக, ஆப்பிள் மரத்தின் கிளைகள் தாழ்வாகப் படர ஆரம்பித்தன. அப்படியே நிலத்தில் ஊன்றியபடி வளர்ந்தன. ஒருகட்டத்தில் ஆப்பிள் மரம் உயிர் இழக்கும் தறுவாயில், நிலத்தில் பதிந்துள்ள கிளைகளில் இருந்து வேர்கள் பரவி மரத்தைக் காப்பாற்றிவிடுகின்றன.

இப்படியே 220 ஆண்டுகள் இந்த ஆப்பிள் மரம் பூமியில் வசித்து வருகிறது. 1970ம் ஆண்டு 9 கிளைகளில் இருந்து புதிய மரங்கள் தோன்றியிருந்தன. 2008ம் ஆண்டு 18 மரங்களாகப் பெருகிவிட்டன. இன்று அந்தத் தோட்டம் முழுவதும் தாய் மரத்தின் கிளைகளில் இருந்து உருவான மரங்கள்தான் பரவியிருக்கின்றன. சீசன் காலத்தில் பாதி மரங்கள் மட்டுமே பூக்கின்றன. மீதி மரங்கள் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றன. இந்த ஆப்பிள்கள் இனிப்பும் புளிப்பும் கலந்த சுவைகொண்டவை. விஞ்ஞானிகள் இந்த ஆப்பிள் மரத்தின் தப்பிப் பிழைக்கும் காரணம் அறிய பல முறை முயன்றும் தோல்வியே கிடைத்திருக்கிறது. இந்த ஆப்பிள் மரம் 1972ம் ஆண்டு தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ளும் உயிரினங்கள் தொடர்ந்து வாழும் என்று சொல்லியிருக்கிறாரே டார்வின்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

இந்தியா

16 mins ago

இந்தியா

22 mins ago

இந்தியா

29 mins ago

தமிழகம்

22 mins ago

இந்தியா

40 mins ago

க்ரைம்

57 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

56 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

மேலும்