கரோனா தொற்று சூழல்: கொரிய தமிழ்ச் சங்கத் தலைவருடன் தமிழக ஆளுமைகள் கலந்துரையாடல் 

By செய்திப்பிரிவு

கொரிய தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் சு.ராமசுந்தரம் தமிழகத்தில் உள்ள பல ஆளுமைகளுடன் கலந்துரையாடல் நிகழ்த்தினார். கரோனா தொற்று சூழலில் கொரியாவில் இருக்கும் தமிழ் மக்களின் நலத்தை அனைத்து ஆளுமைகளும் அக்கறையுடன் கேட்டறிந்தனர்.

இது தொடர்பாக கொரிய தமிழ்ச் சங்கம் வெளியிட்ட அறிக்கை:

''கொரிய தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் சு.ராமசுந்தரம் தமது கொரியப் பொங்கல் 2020 உரையில் குறிப்பிட்டவாறு 1990 முதல் கொரியாவை அறிந்த தமிழ் மக்களின் வரலாற்றுக் கனவான சட்டப்படியாக கொரியா அரசில் பதிவு செய்யப்பட்ட கொரிய தமிழ்ச் சங்க உருவாக்கம் தற்பொழுது நனவாகியிருக்கிறது.

தமிழ்நாட்டின் கடைநிலைக் குடும்பங்களிலிருந்து கொரியாவிற்கு வந்து உயர் கல்வி/ அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி/ உயர் தொழில்நுட்ப வேலை போன்ற பணிகளில் ஈடுபட்டிருக்கும் தமிழ்நாட்டின் சமூக அரசியல் மற்றும் பொருண்மிய வளர்ச்சியின் அடையாளமாகத் திகழும் இளைஞர்களால் முற்று முழுதாக கட்டமைக்கப்பட்டது என்ற சிறப்பு உலகில் கொரிய தமிழ்ச் சங்கத்திற்கே உண்டு என்றால் அது மிகையாகாது.

சங்கத்தின் அடிப்படைக் கட்டமைப்பு வேலையை முன்னின்று செய்த அறிவியலாளர் சங்கத்தின் முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணி செய்யும் வாய்ப்பும் வேறு எங்கும் எளிதில் காணக் கிடைக்காத ஒரு நிகழ்வு. எனவே, இயல்பிலே கொரிய தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடும் பொதுக் கோரிக்கைகளும் அறிவுத்தளம் எங்கும் விரிகிறது.

இந்தச் சிறப்பியல்பிற்கு அமைய, கொரிய தமிழ்ச் சங்கம் பொது கோரிக்கைளை வென்றெடுக்கும் வகையில் பொது ஆளுமைகளுக்கும் மக்களுக்குமான உரையாடலை எப்பொழுதும் ஊக்கப்படுத்துகிறது என்பதை தமிழ்கூறும் நல்லுலகு நன்கு அறியும்! அவ்வகையில், ஊடகவியலாளர்கள், அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள், மொழி மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல பொது ஆளுமைகள் சங்கத்தின் நிகழ்வுகளில் நிகர்நிலை காணொலி ஊடாகவும் நேரடியாகவும் கலந்துகொண்டு கருத்துகளைப் பரிமாறியிருக்கின்றனர்.

சங்கம் பொதுவெளியில் முன்வைத்த கோரிக்கைகள் உரிய முக்கியத்துவத்தைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக, கடந்த வாரம் அதிமுக தலைமைக் கழகப் பேச்சாளர் ஆவடி குமார், திமுக செய்தித் தொடர்புத்துறை செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டான்டைன் ரவீந்திரன், பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் குமரகுரு, பொதுவுடைமை இயக்க ஆளுமைகள் தோழர் மகேந்திரன், தோழர் க. கனகராஜ், மதிமுக பொதுக்குழு உறுப்பினர் காரை. செல்வராஜ் ஆகியோருடன் கொரிய தமிழ்ச் சங்கத் தலைவர் ராமசுந்தரம் கலந்துரையாடினார்.

கரோனா தொற்று சூழலில் கொரியாவில் இருக்கும் தமிழ் மக்களின் நலத்தை அனைத்து ஆளுமைகளும் தலைவரிடம் அக்கறையுடன் கேட்டறிந்தனர். சங்க உருவாக்கம் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டு அறிவுத்தளத்தில் பொதுநலன் கருதி சங்கம் முன்வைக்கும் கோரிக்கைகள் நிறைவேற பொது ஆளுமைகள் உதவ வேண்டும் என்று தலைவர் ஆளுமைகளிடம் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக தமிழ்நாடு ஆசிரியர் பணி தேர்வாணையத்தால் உதவிப் பேராசிரியர் மற்றும் தொடர்பான பணிகளுக்கான விண்ணப்பத்தில் வெளிநாட்டில் வேலைபார்த்த/ பார்க்கும் விண்ணப்பதாரர்களுக்கு கேட்கப்பட்டிருக்கும் பணிப் பட்டறிவிற்கான சான்றிதழ் மற்றும் தொடர்பான தேவைப்பாடுகள் உள்ளிட்டவற்றால் ஏற்பட்டிருக்கும் அதீத படிவ வேலை (paper work), வேலைநேர நேர விரயம் (consumption of working hours) மற்றும் பண விரயம் ஆகியவற்றால் உண்டாகும் இடர்ப்பாடுகளை எடுத்துரைத்து இத்தகைய இடர்பாடுகள் கொரியா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியறிவு பெற்ற நமது இளைஞர்களை களைப்படையச் செய்து நாட்டில் மூளை வறட்சிக்கு வழி வகுக்கும் என்பதை தலைவர் விளக்கிக் கூறினார்.

தற்பொழுது குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப விதிமுறைப்படி வேலைசெய்த ஒவ்வொரு நிறுவனத்தின் தலைவரிடமும் ஆங்கிலத்தில் பெறப்படும் சான்றிதழை நோட்டரி பப்ளிக் கையெப்பத்திற்கு உள்ளூர் மொழியில் மாற்றம் செய்து, பின்னர் அப்போஸ்டைல் (Apostille) மற்றும் தூதரக ஒப்பம் (Attestation at Embassy) ஆகியவை பெறுவது உள்ளிட்ட அதீத வேலைப்பாடுகள் தேவைப்படுகிறது. இன்று சான்றிதழின் உண்மைத்தன்மையையை நேரடியாக சரிபார்க்க பல தொடர்பு வழிகள் இருக்கும் நிலையில் பணி செய்த ஆய்வுக்குழுவின் தலைவர் மற்றும் ஆய்வுத்துறையின் இயக்குனர் ஆகியோரின் சான்றொப்பத்துடன் கூடிய பட்டறிவுச் சான்றிதழ் என்ற அளவில் எளிமைப்படுத்துதல் நலம் பயக்கும் என்று தெரிவித்தேன். எனவே எதிர்காலத்தில் கூடிய மட்டும் படிவ வேலைகளை எளிமைப்படுத்தி இடர்ப்பாடுகளைக் களைய முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்று தலைவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக, குமரகுருவிடம், முன்னதாக மன்னர் சேதுபதியின் படத்தை உலகெங்கும் இந்திய அரசால் நடத்தப்படும் விவேகானந்தர் கலாச்சார மையங்களில் வைக்க வேண்டும் என்று மத்திய அரசிற்கு வேண்டுகோள் விடுத்திருந்ததையும் அதனை மூத்த நாடாளுமன்ற உறுப்பினரும் அரசியல் தலைவருமான வைகோவும் மன்னரின் நேரடி வாரிசுகளும் வலியுறுத்தியதையும் தலைவர் எடுத்துரைத்து இந்தக் கோரிக்கை நிறைவேற உரிய உதவியை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

பொறியியல் படிப்பில் வேதியியல் பாடம் சேர்ந்திருக்க வேண்டிய தேவையை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியமைக்காக வைகோவுக்கு சங்கத்தின் தலைவர் என்ற வகையிலும் தற்காலத்திற்கு தேவையான உயர் அறிவியல்-தொழில்நுட்ப ஆய்வை செய்யும் அறிவியலாளர் என்ற வகையிலும் தமது நன்றியை தெரிவிக்குமாறு காரை செல்வராஜிடம் கேட்டுக்கொண்டார்.

ஆவடி குமார் தென்கொரியாவில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிவக்கைகள் தொடர்பில் விரிவாக கேட்டறிந்தார். மேலும் தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் கள இடர்ப்பாடுகள் குறித்தும் உரையாடினார்.

மூத்த பொதுவுடமை ஆளுமைகள் உயர்கல்வியும், அறிவியல் தொழில்நுட்பமும் பயின்ற இளைஞர்கள் தமிழ்ப்பணி செய்வதையிட்டு தாம் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகக் கூறினர். இன்று காலம் தமிழருக்கு கொடுத்துக்கொண்டிருக்கும் பல்வேறு நெருக்கடிகளுக்கு நடுவில் தமிழ் என்ற பொதுத்தளத்தில் ஆளுமைகள் அனைவரும் மிகவும் கண்ணியத்துடனும் அன்புடனும் கருத்துகளை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது''.

இவ்வாறு கொரிய தமிழ்ச் சங்கம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

7 mins ago

இந்தியா

10 mins ago

இந்தியா

17 mins ago

இந்தியா

2 mins ago

விளையாட்டு

23 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்