இலங்கையில் பலத்த பாதுகாப்புடன் அதிபர் தேர்தல் நிறைவு: முஸ்லிம் வாக்காளர்கள் சென்ற பேருந்து மீது மர்ம கும்பல் துப்பாக்கிச்சூடு

By செய்திப்பிரிவு

இலங்கையில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்காகப் பலத்த பாதுகாப்புடன் இன்று (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்களிப்பதற்காக பேருந்தில் சென்ற வாக்காளர்கள் மீது மர்மக் கும்பல் துப்பாக்கியால் சுட்டது. மேலும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தினர்.

இலங்கை அதிபராக மைத்திரிபால சிறிசேனா பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக் காலம் ஜனவரியில் முடிவடைய உள்ளது. இதையொட்டி புதிய அதிபரை (எட்டாவது) தேர்வு செய்வதற்காக நவ.16-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் கமிஷன் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இந்தத் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிபர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி சார்பில் சஜித் பிரேமதாச, மக்கள் விடுதலை முன்னணியின் அதிபர் வேட்பாளராக அநுர குமார திசநாயக்க, இலங்கை சோசலிச கட்சி சார்பில் அஜந்தா பெரேரா, தேசிய மக்கள் இயக்கம் சார்பில் முன்னாள் ராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுப்ரமணியம் குணரத்னம் உட்பட 35 பேர் போட்டியிட்டனர்.

1982-ம் ஆண்டுக்குப் பிறகு இலங்கையில் பதவியில் உள்ள பிரதமர், அதிபர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் யாரும் போட்டியிடாத அதிபர் தேர்தல் இது. அதாவது அதிபர் பதவியில் இருந்து விலகும் மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகிய மூவரும் போட்டியிடவில்லை.

பிரதான அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிடாத முதலாவது அதிபர் தேர்தலும் இதுவாகும். அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சேவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது ஆதரவைத் தெரிவித்தருந்தது. ஆனால் இக்கட்சியின் மூத்த தலைவர் மைத்திரிபால சிறிசேனா யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலைமை வகித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகரும் முன்னாள் அதிபருமான சந்திரிகா பண்டாரநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

இலங்கையில் அதிபர் தேர்தல் பிரச்சாரம் கடந்த மூன்று வாரங்களாக தீவிரமாக நடைபெற்றது. இப்பிரச்சாரம் கடந்த 12-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து நாடு முழுவதும் 22 மாவட்டங்களில் 12,845 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. 1 கோடியே 59 லட்சத்து 92 ஆயிரத்து 96 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

துப்பாக்கிச் சூடு

அதிபர் தேர்தலில் வாக்களிப்பதற்காக மன்னாரில் இன்று அதிகாலை முஸ்லிம் வாக்காளர்களை ஏற்றி வந்த பேருந்து மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இந்த வன்முறைக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். மேலும் இக்கும்பல் வாகனங்களின் டயர்களையும் எரித்தனர். இதில் யாருக்கும் ஆபத்து இல்லை எனக் காவல் துறையினர் தெரிவித்தனர்.

இதேபோல் தெரணியகல மலையகப் பகுதியில் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களித்த இந்திய வம்சாவளித் தமிழர்கள் மீதும் சிலர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அங்கு கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மாலை 5 மணி அளவில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

இன்றே வாக்கு எண்ணிக்கை..

இலங்கை அதிபர் தேர்தலில் 80% வாக்குப்பதிவானதாக அந்நாட்டு தேர்தல் ஆணைய குழு தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து வாக்குகளை எண்ணும் பணி 43 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

தேர்தல் முடிவை நாளை (ஞாயிறு) வெளியிட முயற்சிப்பதாக இலங்கை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இம்முறை வாக்குகளை எண்ணுவதற்காகக் கூடுதல் நேரம் தேவைப்படுவதால் முழு தேர்தல் முடிவை நாளை வெளியிட முடியவில்ல என்றால் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை இறுதி முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீளமான வாக்குச்சீட்டு:

இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றிலேயே அதிக அளவில் வேட்பாளர்கள் போட்டியிட்ட தேர்தல் இதுவாகும். வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அதிக எண்ணிகையில் வேட்பாளர்கள் போட்டியிட்டதால் இதுவரை நடைபெற்ற தேர்தல்களிலேயே மிகவும் நீளமான வாக்குச்சீட்டு இந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றிலேயே அதிக செலவு ஏற்பட்ட அதிபர் தேர்தல் இது. இலங்கை ரூபாய் மதிப்பில் 750 கோடி ரூபாய்க்கும் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.300 கோடி) அதிகமாக செலவிடப்பட்டுள்ளது.

எஸ். முஹம்மது ராஃபி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

38 mins ago

ஜோதிடம்

57 mins ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

உலகம்

10 hours ago

ஆன்மிகம்

10 hours ago

மேலும்