இலங்கை அதிபர் தேர்தலில் முதன்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் போட்டி

By செய்திப்பிரிவு

ராமேசுவரம்

இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக இந்திய வம்சாவளித் சேர்ந்த தமிழர் ஒருவர் போட்டியிடுகிறார்.

உலகின் பெரும்பாலான நாடுகளில் பிரதமர் ஆட்சி முறையைக் கொண்டிருந்தாலும், இலங்கையைப் பொறுத்தவரை அதிபர் ஆட்சி முறையே பின்பற்றப்பட்டு வருகின்றது.

இலங்கையில் 1978-ம் ஆண்டு அதிபர் ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்டு முதல் அதிபராக ஜே.ஆர்.ஜெயவர்தன தேர்தெடுக்கப்பட்டார். 1988 ஆம் ஆண்டு ரணசிங்க பிரேமதாசவும், 1994 மற்றும் 1999ம் ஆண்டுகளில் சந்திரிக்கா குமாரதுங்கவும், 2005 மற்றும் 2010 ஆண்டுகளில் மகிந்த ராஜபக்சவும் அதிபர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

தற்போது இலங்கையின் 7-வது அதிபராக பதவி வகித்து வரும் மைத்ரிபால சிறிசேனா கடந்த 2015-ல் நடைபெற்ற தேர்லின்போது தேர்ந்தெடுக்ப்பட்டவர். இவர்கள் அனைவரும் பௌத்த மதத்தை சார்ந்தவர்கள்.

இலங்கையில், பௌத்தர்களை தவிர்த்த மற்ற சமுதாயத்தினர்களான தமிழர்களோ, முஸ்லிம்களோ, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரோ அதிபராக பதவி வகிக்கமுடியாது என்று பரலான கருத்து நிலவுகின்றது.

அதே சமயம் 1982-ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் முதன்முறையாக இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழரான ஜீ.பொன்னம்பலம் என்பவர் போட்டியிட்டுள்ளார். அதுபோல 1999ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் இலங்கை முஸ்லிம் கட்சி சார்பில் அப்துல் ரசூல் என்ற முஸ்லிம் முதன்முறையாக போட்டியிட்டுள்ளார்.

அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் பதவி டிசம்பர் மாதம் நிறைவடையும் நிலையில் 8-வது அதிபரைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 16 அன்று இலங்கை அதிபர் தேர்தலை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தள்ளது.

இந்தத் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி சார்பில் சஜித் பிரேமதாசவும், மக்கள் விடுதலை முன்னணியின் அதிபர் வேட்பாளராக அநுர குமார திசநாயக்கவும், இலங்கை சோசலிச கட்சி சார்பில் அஜந்தா பெரேராவும், தேசிய மக்கள் இயக்கம் சார்பில் முன்னாள் ராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க உள்ளிட்ட 35 பேர் போட்டியிடுகின்றனர்.

இதில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் முன்னாள் ஹிஸ்புல்லா அமைச்சர்கள் பஷீர் சேகுதாவூத், இல்யால் ஐதுரூஸ் முகம்மது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலவி ஆகிய நான்கு வேட்பாளர்கள் முஸ்லிம்கள் ஆவர்.

இலங்கைத் தமிழரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கமும் போட்டியிடுகிறார்.

மேலும் இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றில் முதல் முதன்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் சுப்ரமணியம் குணரத்னம் என்பவர் போட்டியிடுகிறார்.

ஊடகவியலாளராக பணிபுரியும் சுப்ரமணியம் குணரத்னம் கொழும்பில் கடந்த 1973ஆம் ஆண்டு பிறந்தவர். தொடக்க கல்வியை பம்பலப்பிட்டி பள்ளியில் பயின்றுள்ளார்.

1983-ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரினை தொடர்ந்து சுப்ரமணியம், குணரத்னத்தின் குடும்பத்தினர் தமிழகம் நோக்கி புலம் பெயர்ந்துள்ளனர். தொடர்ந்து மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உயர் கல்வியும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்.

தொடர்ந்து குணரத்னம், 1995-ம் ஆண்டு இலங்கை திரும்பி உள்ளார். உள்நாட்டுப் போரின் இறுதி நாட்களில் காணாமல் போன சுப்ரமணியம் குணரத்னத்தின் தந்தை இன்றும் வீடு திரும்பவில்லை.

போட்டியிடுவது ஏன்?

இந்நிலையில், தேர்தலில் போட்டியிடுவதற்கான காரணம் குறித்து சுப்ரமணியம் குணரத்னம் கூறும்போது, "பௌத்த சிங்கள வேட்பாளர்களுக்கு சவால் விடும் நோக்கத்திற்காக நான் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. நான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முக்கிய காரணம் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் வாக்களிப்பிற்கான உரிமையை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவும், தேர்தல் தொடர்பாக தமிழ் மக்கள் விழிப்புணர்வை பெற வேண்டும் என்பதற்காகவும் தான் போட்டியிடுகின்றேன்.

ஒரு வேளை நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் நாட்டின் கல்வி மற்றும் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பேன்.

ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினரை சரியான முறையில் நடத்தினாலேபோதும் நாடு சிறந்த நிலைக்குச் சென்றடையும்" என்று தெரிவித்துள்ளார்.

எஸ். முஹம்மது ராஃபி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்