இந்தியர் அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 

By செய்திப்பிரிவு

ஸ்டாக்ஹோம்

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி உள்ளிட்ட பிரிவுகளுக்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வரும் பொருளாதார அறிஞரான அபிஜித் பானர்ஜி, அமெரிக்காவில் வசிக்கும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவரும் தனது மனைவியுமான எஸ்தர் டூப்ளோ, அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு பொருளாதார அறிஞர் மைக்கேல் கிரிமர் ஆகிய 3 பேருக்கும் இந்த ஆண்டுக்கான பொருளாதார பிரிவுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இவர்கள் மூன்று பேருமே தற்போது அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.

இந்த மூன்று விஞ்ஞானிகளுக்கும் சேர்த்து 9.18 லட்சம் அமெரிக்க டாலர்கள் (ரூ.5.61 கோடி) பரிசும், தங்கப்பதக்கமும், விருதுப் பட்டயமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசுப் பணத்தை 3 விஞ்ஞானிகளும் பகிர்ந்து கொள்வர்.

வறுமை ஒழிப்பு குறித்த ஆய்வுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக வளர்ச்சி பொருளாதாரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய ஆராய்ச்சிகளை இவர்கள் மேற்கொண்டுள்ளனர். உலகம் முழுவதும் 70 கோடி மக்கள் மிகவும் மோசமான வருமானத்தைக் கொண்டுள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் 5 வயதுக்குட்பட்ட 50 லட்சம் குழந்தைகள் குறைந்தபட்ச மருத்துவ உதவி கூட கிடைக்காமல் மரணமடைகின்றனர். இதுபற்றிய ஆய்வுகள் புதிய வளர்ச்சி பொருளாதாரத்தில் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன.

இயற்பியல்

2019-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு ஜேம்ஸ் பீபிள்ஸ், மைக்கேல் மேயர், திதியர் குவெலோஸ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம்

மருத்துவத்துக்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த 2 ஆய்வாளர்களுக்கும், இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு ஆய்வாளருக்கும் என மொத்தம் 3 பேருக்குஅறிவிக்கப்பட்டது.

வேதியியல்

வேதியியல் துறையில் 2019 ஆண்டுக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் குட்இனஃப், ஐக்கிய ராஜ்ஜியத்தைச் சேர்ந்த ஸ்டான்லி விட்டிங்கம், ஜப்பானைச் சேர்ந்த அகிரா யோஷினோ ஆகிய மூன்று அறிவியலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

இலக்கியம்

இலக்கியத்துக்கான நோபல் பரிசு 2 ஆண்டுகளுக்கு அறிவிக்கப்பட்டது. 2018-ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசை போலந்து நாட்டைச் சேர்ந்த நாவலாசிரியர் ஒல்கா டோகார்ஸக் என்ற பெண் எழுத்தாளர் பெறுகிறார். 2019-ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசை ஆஸ்திரியாவைச் சேர்ந்த எழுத்தாளர் பீட்டர் ஹேண்ட்ஹே பெறுகிறார்.

அமைதி

2019 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை எத்தியோபிய பிரதமர் அபி அகமத் அலி பெறுகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

45 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்