ஜம்மு காஷ்மீர் விவகாரம்: சர்வதேச ஆதரவு கோருகிறார் பாக்.பிரதமர் இம்ரான் கான்

By செய்திப்பிரிவு

இஸ்லாமாபாத்,

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் பாகிஸ்தான், சர்வதேச ஆதரவு கோரும் முயற்சியில் இறங்கியுள்ளது.

அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான், " இந்தியா அதிகபட்சமாக காஷ்மீர் மக்களுக்கு எதிராக ராணுவத்தைப் பயன்படுத்துவதைக் கைவிட வேண்டும்" என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு உரிமைகள் ரத்து செய்யப்பட்டதற்குப் பதிலடியாக இந்தியத் தூதரை திருப்பி அனுப்பியும், வர்த்தக உறவை ரத்து செய்தும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தது. இதற்கு பதிலடி கொடுத்து இந்தியா அறிக்கை வெளியிட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு உரிமைகளை திரும்பப் பெற்ற குடியரசுத் தலைவரின் உத்தரவுக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு உரிமைகள், தனி அந்தஸ்துகள் வழங்கப்பட்டு இருந்த அரசியலமைப்புச் சட்டம் 370-வது பிரிவில் மத்திய அரசு திருத்தம் செய்து நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்த மசோதா கொண்டு வந்து நிறைவேற்றியது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாகவும், ஜம்மு காஷ்மீரை சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசமாகவும் மத்திய அரசு அறிவித்தது. இதுதொடர்பாக குடியரசுத் தலைவரும் உத்தரவு பிறப்பித்து, 370 பிரிவு திருத்தப்பட்டதாகவும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் காஷ்மீர் மாநிலத்துக்கு செல்லுபடியாகும் என்று அறிவித்தார்.

இந்தியாவின் நடவடிக்கையைக் கண்டித்த பாகிஸ்தான் அரசு இந்தியத் தூதர் அஜய் பிஸாரியாவை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பியும், வர்த்தக உறவை ரத்து செய்தும் அறிவித்தது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து, நேற்று தொலைக்காட்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் கூறுகையில், " காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த 370-வது பிரிவு சலுகையால் தீவிரவாதம், ஊழல், பிரிவினைவாதம், குடும்ப ஆட்சிதான் அதிகரித்தது.

இதை வைத்து பாகிஸ்தான் தீவிரவாதத்தைப் பரப்பும் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டது. காஷ்மீருக்கான 370-வது பிரிவை நீக்கியது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வு. லடாக், ஜம்மு காஷ்மீர் மாநில வளர்ச்சிக்கான புதிய அத்தியாயம் தொடங்கும். 1.5 கோடி மக்களுக்கு அரசின் சலுகைகள் மறுக்கப்பட்ட நிலையில் இனிமேல் மத்திய அரசின் அனைத்து திட்டங்களின் பலன்களும் அவர்களுக்குக் கிடைக்கும்" என்று மோடி பேசினார்.

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகளின் உதவியை நாடும் வகையில் ட்வீட் செய்துள்ளார்.

அவர் ட்விட்டரில் கூறுகையில், "காஷ்மீரில் தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டவுடன் காஷ்மீர் மக்களுக்கு என்ன நடக்கும் என்பதைக் காண ஒட்டுமொத்த உலகமே காத்திருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஜம்மு காஷ்மீர் பகுதியில் அனைத்துவிதமான தகவல் தொடர்புகளும் முடக்கப்பட்டுள்ளன.

காஷ்மீர் மக்களுக்கு எதிராக அதிகபட்சமாக ராணுவ பலத்தைப் பயன்படுத்தினால், விடுதலை இயக்கத்தை நிறுத்திவிடலாம் என்று பாஜக அரசு நினைக்கிறதா? போராட்டத்திற்கான வாய்ப்பு அதிகரிக்கத்தான் செய்யும்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மிகக்கடுமையான வன்முறை நிகழும் என அச்சப்படுகிறேன். அவ்வாறு நடந்தால், அதைத் தடுக்கவேண்டிய பொறுப்பும், துணிச்சலும் சர்வதேச சமூகத்துக்கு இருக்கிறது " என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

23 mins ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

உலகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வேலை வாய்ப்பு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்