உலக மசாலா: பறவைகளுக்கான மருத்துவமனை

By செய்திப்பிரிவு

அபு தாபி அமீரகத்தில் இயங்கி வருகிறது அபு தாபி ஃபால்கன் மருத்துவமனை. கழுகுகள், வல்லூறுகள் போன்றவற்றுக்கான பிரத்யேக மருத்துவமனை இது. இனப்பெருக்கம் மையம், எக்ஸ்-ரே போன்றவற்றோடு பறவைகள் தொடர்பான அத்தனை விஷயங்களும் கிடைக்கும் இடமாக இது இருக்கிறது. ஆண்டுக்கு 9 ஆயிரம் பறவைகளுக்கு இந்த மருத்துவமனையில் மருத்துவம் அளிக்கப்படுகிறது. ஓர் அறையில் பெஞ்ச் மீது இரண்டு இரண்டு பறவைகள் வரிசையாக அமர்ந்தபடி மருத்துவருக்காகக் காத்திருக்கின்றன. பறவைகளின் எடை பார்க்கப்பட்டு, பரிசோதனை செய்யப்படுகின்றன.

அனஸ்தீசியா கொடுத்து, வைத்தியமும் பார்க்கப்படுகின்றன. 1999-ம் ஆண்டில் இருந்து இயங்கும் இந்த மருத்துவமனை 24 மணி நேரமும் இயங்கக்கூடியது. இதுவரை 67 ஆயிரம் பறவைகளுக்கு இங்கு சிகிச்சையளிக்கப்பட்டிருக்கிறது. ஓய்வின்றி சுற்றித் திரியும் பறவைகளுக்கு இங்கே குளிர்சாதன வசதியோடு ஓய்வளிக்கப்படுகிறது. உலகிலேயே மிகப் பெரிய பறவைகள் மருத்துவமனை இதுதான். மிகப் பெரிய செல்வந்தர்கள் வல்லூறுகளையும் கழுகுகளையும் அபு தாபியில் வளர்த்து வருகிறார்கள். அவர்கள் காலம் தவறாமல் பறவைகளை அழைத்து வந்து பரிசோதித்துச் செல்கிறார்கள். இவை பல லட்சம் ரூபாய்க்கு விலை போகக்கூடியவை.

பணக்காரர்களிடம் வளர்கிற பறவைகளுக்கு மட்டும்தான் இந்த ஸ்பெஷல் கவனிப்பு...

லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து போர்ட்லாண்டுக்குக் கிளம்ப இருந்தது அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம். பெண் பயணி ஒருவர் விமானத்துக்குள் நுழையும்போது கதவில் கை வைத்தார். கடுமையான வலியால் துடித்தார். விமான ஊழியர்கள் வந்து பார்த்தபோது அங்கே ஒரு தேள் இருந்தது. தேளைக் கொன்றுவிட்டு, கடிபட்ட பெண்மணியை மருத்துவரிடம் அனுப்பி வைத்தனர். சக பயணிகள் அதிர்ந்து போனார்கள். இன்னும் என்னவெல்லாம் இங்கே இருக்குமோ என்று விமான ஊழியர்களிடம் சண்டையிட்டனர். ஆய்வுக்குழுவினர் வந்து, விமானம் முழுவதும் சோதனையிட்டனர். வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று சொன்ன பிறகு, ஒரு மணி நேரம் தாமதமாக விமானம் கிளம்பியது. தேள் கொட்டிய பெண் திரும்பவே இல்லை.

ஐயோ… திகிலான பயணம்தான்…

ஹாங்காங்கில் 26-வது மாடியில் வசித்து வந்தது ஜொம்மி என்ற 18 வயதுடைய பூனை. வெளிக்காற்று உள்ளே வருவதற்காகச் சிறிய ஜன்னல் ஒன்று திறந்து வைக்கப்பட்டிருந்தது. ஜொம்மி அந்த ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது, தவறி கீழே விழுந்தது. தரையில் வைக்கப்பட்டிருந்த கூடாரத் துணியைக் கிழித்துக்கொண்டு, கீழே குதித்தது. அடுத்த நொடி, ஒன்றுமே நடக்காதது போல கம்பீரமாக எழுந்து நடந்து சென்றுவிட்டது ஜொம்மி! இந்தக் காட்சியைப் பார்த்த மனிதர்கள்தான் வாயடைத்து நின்றுவிட்டனர்.

பாராசூட் போல பத்திரமா தரையிறங்கியிருக்கு ஜொம்மி!

சீனாவில் இளம் ஆண்கள், விரைவில் திருமணம் செய்துகொள்ளும்படி அவர்களது குடும்பத்தினரால் வற்புறுத்தப்படுகிறார்கள். இதனால் இளைஞர்கள் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். 32 வயது லியு, 24 வயது டான் என்ற பெண்ணை அவரது தொழிற்சாலையில் இருந்து வெளிவந்தபோது கடத்தினார். டான் மிகவும் போராடினார்.

வாயைக் கைகளால் பொத்தி அருகில் இருந்த மறைவிடத்துக்கு அழைத்துச் சென்ற லியு, குடும்பத்தினர் முன்பாகத் தன் மனைவியாக நடிக்கும்படிக் கேட்டுக்கொண்டார். டான் எவ்வளவோ மறுத்தார். தனக்கு வேறு வழி தெரியவில்லை என்ற லியு, டானின் போனையும் பறித்துக்கொண்டார். இதற்குள் இரண்டரை மணி நேரங்கள் கடந்துவிட்டன. டானின் போன் அணைக்கப்பட்டிருந்ததால் சந்தேகம் அடைந்த அவரது காதலர், போலீஸுக்குப் புகார் அளித்தார். லியுவைக் கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீட்ல ஆயிரம் சொல்வாங்க… அதுக்காக இப்படியா பண்றது லியு?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 mins ago

வணிகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்