உன்னை விடமாட்டேன்

இரண்டு கார் குண்டுத் தாக்குதல்கள் முன்னதாக நிகழ்த்தப்பட்டன. யார், என்னவென்று விவரம் தெரியவில்லை; யாரும் இன்னும் பொறுப்பேற்கவில்லை என்று லெபனான் அரசாங்கம் சொல்லிக்கொண்டிருந்தது. இது நடந்து ஒரு வாரம் ஆன நிலையில் இன்றைக்குப் பூனைக்குட்டி வெளியே வந்திருக்கிறது.

ஆகவே மகாஜனங்களே, போன வாரம் வெடித்த கார் குண்டுகளைப் பிள்ளையார் சுழியாகக் கருதுங்கள். நேற்று வரைக்கும் லெபனானுக்குள் நாங்கள் இல்லை. இதோ வந்துவிட்டோம். உலகெங்கும் காற்றைப் போல் நீக்கமற நிறையும் செயல்திட்டத்தின் விடுபட்ட இடத்தை இப்போது நிரப்புகிறோம். லெபனானும் முஸ்லிம் தேசம்தான். மத்தியக் கிழக்கின் மகத்தான மாநிலம். குறு புவி இயலாயினும் பெருவரலாறு இதற்கும் உண்டு. வரலாற்றின் ஒரு பக்கமாவது அல் காய்தாவுக்கு ஒதுக்காவிட்டால் அது சமகால சரித்திரப் பிழையாகிப் போய்விடும். ஆகவே...

நிற்க. அந்தப் பக்கம் இருக்கிற மண்டையிடி பத்தா தென்று இன்றைக்கு லெபனானுக்குள் கால் வைத்திருக்கும் அல் காய்தா, பிராந்தியத்தை பயப் பிராந்தி பிடிக்க வைத் திருக்கிறது. வேறு என்ன தேசமானாலும் இத்தனைக் கலவர மாகாது. லெபனான் ஒரு ஷியா தேசம் என்பதும் அங்கே லோக்கல் தாதாவாக ஆண்டாண்டு காலமாக ஆட்சி புரிந்துவருவது ஹிஸ்புல்லா என்பதும்தான் விவகாரத்தின் முதல் காரம்.

ஒரு கடைமட்டப் போராளியாகக் கூட எந்த ஷியா முஸ்லிமையும் சேர்க்காத அல் காய்தாவுக்கும் ஹிஸ்புல்லாவுக்குமான உறவு சற்றே விசித்திரமானது. அதை உறவென்பதா பகையென்பதா என்று தெளிவாகச் சொல்வதற்கில்லை. முன்னொரு காலத்தில் ஹிஸ்புல்லாவின் கமாண்டர்கள் சிலர், ஒசாமா பின்லேடனின் பிரத்தியேக அழைப்பின் பேரில் ஆப்கனிஸ்தானுக்கு வந்து அல் காய்தா போராளிகளுக்குப் பயிற்சியளித்திருக்கிறார்கள். மத்தியக் கிழக்குப் போராளி இயக்கங்கள் அனைத்தையும் ஒரு குடையின்கீழ் திரட்டி அமெரிக்காவுக்கு எதிரான முழு நீளத் தாக்குதல் ஒன்றைத் தொடங்க மேற்படி இரு அமைப்புகளும் ரூம் போட்டு யோசித்த வரலாறு உண்டு.

ஆனாலும் இந்த ஷியா - சன்னி பிரச்சினை எப்போதும் உள்ளது. நேருக்கு நேர் பார்க்க நேர்ந்தால் நண்பா நலமா. அந்தப் பக்கம் நகர்ந்து போனால் அடித்துக் கொல்லு.

ஆனாலும் அடித்துக் கொண்டதில்லை. கொன்றதுமில்லை. லெபனானில் ஹிஸ்புல்லாவின் இருப்பை அங்கீகரிக்கும் விதமாகத்தான் நாளது தேதி வரைக்கும் அந்த ஒரு தேசத்துக்குள் அல் காய்தா நுழையாதிருந்தது.

இப்போது அதில்தான் மாறுதல் வந்திருக்கிறது. சிரியாவில் பலப் பரீட்சை பண்ணிக்கொண்டிருக்கும் ISIS மற்றும் லெபனானில் இருக்கும் ஜபாத் அல் நுஸ்ரா என்னும் அல் காய்தாவின் ஃப்ரான்சைசீஸ் அமைப்பு இரண்டும் மிகத் தெளிவாக அறிவித்துவிட்டன. இனி லெபனானில் அல் காய்தா இருக்கும், இயங்கும். இது காலத்தின் தேவை. அதுவும் ஹிஸ்புல்லாவின் செயல்பாட்டை மிகத் தீவிரமாகத் தடைபண்ணி, லெபனான் மண்ணிலிருந்தே ஹிஸ்புல்லாவை விரட்டி யடிக்கும் தெளிவான செயல்திட்டத்துடன் வந்திருக்கிறோம் என்று சொல்லிவிட்டார்கள்.

ஆக, அடுத்த பட்டாசுத் திருவிழா இனி லெபனானில் தொடங்க விருக்கிறது. சிரியாவில் பதவி விலக மாட்டேன் என்று அழிச்சாட்டியம் பண்ணிக்கொண்டிருக்கும் அதிபர் பெருமானுக்கு (அவர் ஷியா) ஹிஸ்புல்லா வழங்கிய ஆதரவின் தொடர்ச்சியாக அல் காய்தா இந்த முடிவை எடுத்திருக்கிறது.

மத்தியக் கிழக்கின் எண்ணெய் அரசியல் மகா யுத்தத்தில் இந்த ஷியா - சன்னி குடுமிப்பிடி ஒரு பேரலல் டிராக்காகத் தீவிரம் சேர்த்துக் கொண்டிருக்கிறது. எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் லாபம் போய்ச் சேருமிடம் அமெரிக்காவாகத்தான் இருக்கப் போகிறது.

லெபனான் தலைநகர் பெய்ருட்டில் ஹிஸ்புல்லா இயக்க தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லாவின் படம் தொங்கிக் கொண்டிருக்கும் கட்டிடம் அருகே கடந்த 22-ம் தேதி நிகழ்ந்த கார் குண்டு தாக்குதலால் சேதமடைந்த பகுதியை பார்வையிடும் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள். படம்: ராயட்டர்ஸ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

11 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்