பனாமா பேப்பர்ஸ் கசிவு: சர்வதேச பெரும்புள்ளிகளின் பணப் பதுக்கல் தகவல்கள் அம்பலம்

உலகம் முழுவதும் அரசியல் முக்கியஸ்தர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பிரபலங்கள் பலர் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி வைத்திருக்கிறார்கள், எப்படி எல்லாம் வரி ஏய்ப்பு செய்துள்ளார்கள் என்ற தகவல் கசிந்துள்ளது. இதுதான் 'பனாமா பேப்பர்ஸ்'. விக்கிலீக்ஸ் மாதிரி இதுவும் ஒரு தகவல் கசிவு விவரம்.

பன்னாட்டு ஊடகங்கள் பலவற்றின் இன்வெஸ்டிகேவ் ஜர்னலிஸம் (புலனாய்வு இதழியல்) இந்த தகவல் கசிவின் பின்னணியில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வாஷிங்டன்னை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் புலனாய்வு இதழியலாளர்கள் சர்வதேச கூட்டியக்கம் (International Consortium of Investigative Journalism) நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 'பனாமா பேப்பர்ஸ்' என்ற தலைப்பில் பல தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது. 11.5 மில்லியன் தகவல் தரவுகளைத் திரட்டியுள்ளது.

புதின், மெஸ்ஸி.. இன்னும் பலர்

இந்த பட்டியலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பார்சிலோனா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி இடம்பெற்றிருக்கின்றனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் புலனாய்வில் 140 அரசியல் புள்ளிகளின் வரி ஏய்ப்பு, பண பதுக்கல் அம்பலமாக்கியிருக்கிறது. இந்த 140 அரசியல் பிரபலங்களில் 12 பேர் இன்னாள், முன்னாள் தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலிருந்து..

இந்த ஆவணங்களை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர்கள் குழுவில் இந்தியாவின் சார்பில் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தியாளர்களும் இடம் பெற்றிருந்தனர். பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், டி.எல்.எப். உரிமையாளர் கே.பி.சிங், வினோத் அதானி ஆகியோர் பனாமா பேப்பர்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஸ்விஸ் வங்கிக்கும் பனாமா வங்கிக்கும் என்ன வித்தியாசம்?

ஸ்விஸ் வங்கிகளில் தனி நபர்கள் தங்கள் பெயரிலேயே வங்கி கணக்கு ஆரம்பிக்க முடியும். ஆனால் பனாமா வங்கியில் அது சாத்தியமில்லை. பனாமா வங்கியில் ஒருவர் சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டுமானால் அந்நாட்டில் ஒரு தொழில் நிறுவனத்தை தொடங்க வேண்டும். அந்த நிறுவனத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றுகூட அவசியமில்லை. அவ்வாறாக தொடங்கப்பட்ட நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் தொடர்ந்து பணத்தை சேமிக்கலாம். இதற்கு பெயர்தான் ஷெல் கம்பெனி (Shell Company).

தகவல் பெறப்பட்டது எப்படி?

வெளிநாட்டு வங்கிகளில் பெருமளவில் பணம் முதலீடு செய்பவர்கள் விவரங்களை சம்பந்தப்பட்ட வங்கிகள் உச்சபட்ச ரகசியமாக பேணும் நிலையில் பிரபலங்கள் பலரை இப்படி அம்பலப்படுத்தும் வகையில் தகவல் எப்படி கசிந்தது என்பது சுவாரஸ்யமானது.

இது குறித்து முனிச் நகரில் இருந்து செயல்படும் சுடட்சே ஜெய்துங் (Sueddeutsche Zeitung) என்ற நாளிதழின் நிருபர் பாஸ்டியன் ஓபர்மேயர் கூறும்போது, "அடையாளத்தை வெளியிடாத உள்வட்டாரம் ஒன்று எங்களுக்கு இத்தகவலை வழங்கியது. அவர்கள் இதற்காக பண பலன் ஏதும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், தங்கள் அடையாளம் எவ்விதத்திலும் வெளியாகிவிடக்கூடாது என்பதை மட்டும் வலியுறுத்தினர்" என்றார்.

பனாமா அதிபர் உறுதி

பனாமா பேப்பர்ஸ் தகவல் கசிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவரும் நிலையில், பனாமா நாட்டு அதிபர் ஜூவான் கார்லஸ் வெரெலா விடுத்துள்ள அறிக்கையில், "பனாமா நிதித் துறையில் எவ்வித முறைகேட்டுக்கும் இடமில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம். தற்போது கசிந்துள்ள ஆவணங்கள் தொடர்பாக முழுமையான நீதி விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

12 mins ago

சினிமா

19 mins ago

விளையாட்டு

42 mins ago

வணிகம்

54 mins ago

இந்தியா

56 mins ago

சினிமா

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

கல்வி

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்