முகமது மோர்சியின் மரணம் குறித்து வெளிப்படையான விசாரணை தேவை: ஐ.நா.

By செய்திப்பிரிவு

எகிப்தின் முன்னாள் அதிபரான முகமது மோர்சி நீதிமன்றத்தில் மயங்கி விழுந்து மரணமடைந்தது குறித்து வெளிப்படையான விசாரணை வேண்டும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

எகிப்தில் நீண்ட காலம் அதிபராக இருந்த சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக், ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 2012ஆம் ஆண்டில் தேர்தல் நடத்தப்பட்டது.

இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த  முகம்மது மோர்சி அதிபரானார். அதிபர் பதவியில் ஓராண்டு மட்டுமே இருந்த முகமது மோர்சிக்கு எதிராகப் போராட்டம் வெடித்தது. சாலையில் இறங்கி சகோதரத்துவ அமைப்பினரும், எதிர்க்கட்சியினரும், மக்களும் போராட்டம் நடத்தினார்கள். இதை அடக்க உத்தரவிட்ட அதிபர் மோர்சி, போராட்டம் நடத்துபவர்களைக் கொல்ல உத்தரவிட்டதாகக் கூறப்பட்டது.

கலவரம் வலுத்த நிலையில் மோர்சிக்கு எதிராக அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் அப்தல் பதா அல் சிசி தலைமையிலான ராணுவம், மோர்சியைப் பதவியை விட்டு நீக்கியதுடன், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது.

பின்னர் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு, அந்த அமைப்பச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டோரைக் கொல்வதற்கு உத்தரவிட்டதாக  முகமது மோர்சி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் முதலில் மோர்சிக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு, பின்னர் 20 ஆண்டுகள் சிறை தண்டனையாக குறைக்கப்பட்டது.

மேலும், மோர்சி மீது ஏராளாமான வழக்குகள் நிலுவையில் இருந்து அந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தன. குறிப்பாக பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினருக்கும், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் நீதிமன்றத்தில் கண்ணாடிக் கூண்டில் ஆஜராகி மோர்சி பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென நீதிமன்றத்திலேயே மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன்பு அவர் உயிரிழந்தார்.

முகம்மது மோர்சியின் மரணம் இயற்கையான மரணம் அல்ல, திட்டமிட்ட கொலை என்று முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினர் குற்றம் சாட்டி வரும் நிலையில் மோர்சியின் மரணம் தொடர்பாக வெளிப்படையான விசாரணை தேவை என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பு கூறும்போது, “முகமது மோர்சி மரணம் குறித்து வெளிப்படையான விசாரணை தேவை. சிறையில் இருந்த 6 ஆண்டுகளில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை தேவை” என்று தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை நடந்த மோர்சியின்  இறுதி ஊர்வலத்தில் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டு தங்கள் மரியாதையைச் செலுத்தினர்.

இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட துருக்கி அதிபர் எர்டோகன் இந்த மரணத்தை இயற்கை மரணமாக நான் கருதவில்லை என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

இந்தியா

22 mins ago

சினிமா

23 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சுற்றுலா

2 hours ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்