‘இப்படிப்பட்ட முட்டாள்தனமான பேச்சுகளை பொறுத்துக் கொள்ள முடியாது’ - மோடி, இந்துக்கள் மீது துவேஷக் கருத்துகள் கூறிய தன் கட்சி அமைச்சர் மீதே இம்ரான் கான் நடவடிக்கை

By பிடிஐ

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண தகவல் மற்றும் கலாச்சார அமைச்சர், ஆளும் பிடிஐக் கட்சியைச் சேர்ந்த  ஃபயாஸுல் ஹசன் சோஹான் தனது இந்து-எதிர்ப்பு கருத்துக்களுக்காக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று இம்ரான் கான் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாப் கட்சியால் வலியுறுத்தப்பட்டுள்ளார். கட்சியின் மூத்த தலைவர்களே இவரது கருத்தை ஏற்காமல் கடும் விமர்சனங்களை முன் வைத்தனர்.

 

இதனையடுத்து பஞ்சாப் முதல்வர் உஸ்மான் பஜ்தார், சோஹானை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினார். அவர் வந்த போது ராஜினாமா செய்து விடுங்கள் என்று முதல்வர் வலியுறுத்தினார். இதனை ஜியோ டிவி தொலைக்காட்சி செய்திகள் வெளியிட்டுள்ளன.

 

சோஹான் ஏற்கெனவே சிலபல சர்ச்சைக்குரிய கருத்துகளை சிறுபான்மையினர் மீது பிரயோகித்ததற்காக கடுமையாக எச்சரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

தன் கட்சி உறுப்பினர்களே கடும் விமர்சனங்கள் வைத்த பிறகு சோஹான் மன்னிப்பு கேட்டார்.

 

ஆனால் அவர் கூறும்போது, “நான் பிரதமர் மோடியையும் இந்திய ராணுவத்தையும்தான் விமர்சித்தேன், இந்துக்களை அல்ல.  இந்து சமூகத்தினரை அது புண்படுத்தியிருந்தால் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன், என் கருத்து பாகிஸ்தான் வாழ் இந்து மக்களுக்கு எதிரானது அல்ல” என்றார்.

 

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு  ஃபயாஸ் சோஹான் பிப்.24ம் தேதி கூட்டம் ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆனது.

 

இந்தக் கருத்தைத்தான் பாகிஸ்தான் முதல்வருக்கு உதவியாளராக இருந்து வரும் கட்சித் தலைவர் நயீமுல் ஹக் “இத்தகைய முட்டாள்தனத்தை பிடிஐ கட்சி சகித்துக் கொள்ளாது” என்று கண்டித்திருந்தார்.

 

“படுமோசமான, புண்படுத்தும் கருத்துகளை இந்து சமூகத்துக்கு எதிராக ஃப்யாஸ் சோஹான் பயன்படுத்தியுள்ளார், பஞ்சாப் தகவல் அமைச்சர் கடும் நடவடிக்கை கோருகிறார், பிடிஐ அரசு இந்த முட்டாள்தனங்களை சகித்துக் கொள்ளாது, முதல்வரை கலந்தாலோசித்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பிடிஐ கட்சித் தலைவர் நயீமுல் ஹக் தெரிவித்தார்.

 

அந்நாட்டு மத்திய மனித உரிமை மற்றும் நிதியமைச்சர்களான ஷிரீன் மஜாரி, ஆசாத் உமர் ஆகியோர், “சோஹான் கருத்தை கடுமையாகக் கண்டிக்கிறோம், எந்த ஒருவரது மதத்தையும் புண்படுத்த யாருக்கும் உரிமை கிடையாது. நம் இந்துக் குடிமக்களும் நாட்டுக்காக தியாகம் செய்துள்ளனர்.  நம் பிரதமரின் கொளை எப்போதும் சகிப்புத்தன்மையும் சகமனிதரை மதிப்பதும்தான், மத துவேஷத்தை பரப்புவோரைக் கட்சி ஆதரிக்காது” என்று கடுமையாகச் சாடியிருந்தனர்.

 

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மொகமது ஃபைசல் தன் ட்விட்டர் பக்கத்தில், “பாகிஸ்தான் தன் கொடியில் வெள்ளை நிறத்தை பெருமையுடன் தக்கவைத்துள்ளது, பச்சை எப்படி முக்கியமோ அதே போல் வெள்ளை நிறமும் முக்கியம், இந்து மக்களின் பங்களிப்புக்காக அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக நம் கொடி உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

 

ஃபயாசுல் ஹசன் சோஹான் கூறியது என்ன?

 

கடந்த மாதம் இந்துக்களை குறிவைத்து, ‘பசு சிறுநீரைக் குடிப்பவர்கள்’ என்று கிண்டலடித்திருந்தார் ஃபயாசுல் சோஹான். மேலும், “நாங்கள் முஸ்லிம்கள் எங்களுக்கு ஒரு கொடி உள்ளது, மவுலா அலியாவின் தீரத்தின் கொடி, ஹஸ்ரத் உமராவின் வீரக்கொடி, உங்களிடம் இது போன்ற கொடி உள்ளதா?

 

எங்களை விட 7 மடங்கு நீங்கள் சிறந்தவர்கள் என்ற எண்ணம் வேண்டாம். எங்களிடம் உள்ள எதுவும் உங்களிடம் இல்லை. நீங்கல் சிலைகளை வணங்குபவர்கள்” என்று பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

 

இதனையடுத்து இம்ரான் கான் கட்சி இதனை முட்டாள்தனமானது, ஏற்க முடியாது என்று கண்டித்து அந்த அமைச்சரை ராஜினாமா செய்ய வலியுறுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

12 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

கல்வி

4 hours ago

மேலும்