மனசாட்சியே இல்லாத உலகம்…

By டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

ஏமன் நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டில் உள்நாட்டுக் கலவரம் தொடங்கியது. உலகின் மிக மோசமான நெருக்கடியாகக் கருதப்படும் இந்த கலவரத்தால் ஏறக்குறைய 1.3 கோடி மக்கள் உணவின்றி தவிக்கிறார்கள். கலவரமும் முடிவதுபோல் தெரியவில்லை. நாட்டின் 50 சதவீத மருத்துவ சேவை வசதிகள் அழிக்கப்பட்டுவிட்டன. பள்ளிகள் அனைத்தும் போராளிகள் இருப்பிடமாகவும் அகதிகள் தங்குமிடமாகவும் ஆகிவிட்டன. யேமனில் உள்ள அனைத்துக் குழந்தைகளுமே உதவியை எதிர்பார்த்து உள்ளனர். ஏமன் குழந்தைகள் பஞ்சம், பட்டினி காரணமாக ஊட்டச்சத்தில்லாமல் இருப்பதாக மனித உரிமை குழுக்கள் தெரிவித்துள்ளன.

ஏமனின் இறக்குமதியில் 70 சதவீதம் வரை ஹோடய்டா துறைமுக நகரம் வழியாகத்தான் வருகிறது. இதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பெரிய போராட்டமே நடந்து வருகிறது. இதில் ஏறக்குறைய 2.5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 3 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த உள்நாட்டுக் கலவரத்தில் சவுதி அரேபியா, எமிரேட் நாடுகள் ஒரு பக்கமும் ஈரான் நாட்டின் ஆதரவுடன் செயல்படும் ஹவுத்தி போராளி குழு மறுபக்கமும் இருந்து போராடி வருகின்றன.

மனித உரிமை குறித்தும் ஜனநாயகம் குறித்தும் ஓயாமல் பேசும் மேற்கத்திய நாடுகள் ஏமனில் நடக்கும் சர்வதேச மனித உரிமை மீறல்களைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்றன. சவுதி அரேபியா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுடன் தங்களுக்கு இருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்தி, இந்த உரிமை மீறல்களைத் தடுக்க இந்த நாடுகள் தவறிவிட்டன. மாறாக, ஹவுத்தி போராளிகளுக்கு எதிராக நடக்கும் ராணுவ நடவடிக்கைகளில் மேற்கத்திய நாடுகளும் பங்குபெற்று வருகின் றன. துருக்கியில் பத்திரிகையாளர் ஜமால் கஸோக்கி மரணத்துக்குப் பிறகுதான் ராணுவ நடவடிக்கைகளில் இருந்து இவை விலகி நிற்கின்றன.

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களையும் தடுக்காமல் உலக நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. 2011-ல் ஆட்சியாளர்களுக்கு எதிரான கிளர்ச்சியாகத் தொடங்கிய இப்போராட் டம், மிகப் பெரிய உள்நாட்டுப் போராக மாறிவிட்டது. ஆனால் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசு இறங்கி வருவதாக இல்லை. இதனால் கடந்த 7 ஆண்டுகளாக சிரியாவில் ரத்த ஆறு ஓடுகிறது. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இரண்டு முறை விஷ வாயு தாக்குதல் நடந்ததற்கும் ஆதாரம் கிடைத்துள்ளது. ஏறக்குறைய 70 லட்சம் மக்கள் உள்நாட்டிலேயே புலம் பெயர்ந்து வாழ்கின்றனர். 20 லட்சம் பேர் ஜோர்டான், லெபனான், வடக்கு இராக் நாடுகளுக்கும் 35 லட்சம் பேர் துருக்கி நாட்டுக்கும் தப்பிச் சென்று விட்டனர். உள்நாட்டில் இருக்கும் 60 லட்சம் மக்களும் உயிர் பிழைக்க ஐரோப்பிய நாடுகளை நோக்கி உயிரை பணயம் வைத்து பயணம் செய்கின்றனர். ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது பெரிய மனித உரிமை அமைப்புகளோ எதுவும் செய்ய முடியாத அளவுக்கு நிலைமை அவ்வளவு மோசமில்லை.

ஏமனைப் பொருத்தவரை பரம்பரை எதிரிகளான சவுதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான அதிகாரப்போட்டிதான். இடையில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஈரானுக்கு பாடம் கற்பிக்க நினைக்கின்றன.

சிரியாவைப் பொருத்தவரை மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போட்டிதான் நடக்கிறது. சிரியா அரசாங்கத்தை கவிழ்க்க நினைக்கிறது மேற்கத்திய நாடுகள் கூட்டணி. ஆனால் ரஷ்யாவோ அதை நடக்கவிடாமல் தடுத்து வருகிறது.

அரசியல் காரணங்களுக்காகவும் முக்கிய இடங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற் காகவும் நடக்கும் விளையாட்டில், அப்பாவி பொது மக்கள் பகடைக் காய்களாக பயன்படுத்தப்படுகிறார்கள். இதில் யாரும் வெற்றி பெறப் போவதில்லை. இதுபோன்ற செயல்களால், தப்பிச் சென்றவர்களுக்கும் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்து வாழ்பவர்களுக்கும் துன்பம்தான் அதிகரிக்கும்.

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டால்தான் ஐக்கிய நாடுகள் சபையும் மனித உரிமை அமைப்புகளும் களத்தில் இறங்கி செயல்பட முடியும். ஆனால் அதற்கு அரசியல் நெஞ்சுறுதி இருந்தால்தான் முடியும். மனித உரிமை மீறல்கள் குறித்து புள்ளி விவரங்களை அடுக்குவது என்னவோ எளிதான காரியம் தான். ஆனால், இந்த மனித உரிமை மீறல்களை சர்வதேச சமூகம் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் அனுமதிக்கப் போகிறது என்பதுதான் இப்போதைய கேள்வி.

- கட்டுரையாளர் டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி, எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் பேராசிரியர், வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர் | தமிழில்: எஸ்.ரவீந்திரன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

18 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்