உலக மசாலா: காலத்துக்கு ஏற்ப மாற வேண்டும் கானா

By செய்திப்பிரிவு

பெரும்பாலான நாடுகளில் இறந்த மனிதர்களுக்கு ஓரிரு நாட்களில் இறுதிச் சடங்கு செய்து விடுவது வழக்கம். ஆனால் ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த கானா நாட்டில் வாரக் கணக்கிலிருந்து வருடக் கணக்கு வரை இறந்த உடல்களுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கு எடுத்துக் கொள்கிறார்கள். யாராவது விரைவில் அடக்கம் செய்துவிட்டால், அது மிகப் பெரிய அவமரியாதையாகக் கருதுகிறார்கள். இது பழங்காலத்திலிருந்தே ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கடைபிடிக்கப்பட்டு வரும் பழக்கம்தான்.

பல ஆப்பிரிக்க நாடுகள் இன்று இந்தப் பழக்கத்தை மாற்றிக்கொண்டன. ஆனால் கானாவில் இப்போதும் இது நடைமுறையில் இருக்கிறது. வாழும்போது குழந்தைகள், மனைவி அல்லது கணவன், பெற்றோர் மட்டுமே ஒரு குடும்பமாகக் கருதப்படுகிறது. ஆனால் இறந்துவிட்டால் குடும்பம் என்பது உற்றார் உறவினர்களையும் சேர்த்தே கருதப்படுகிறது. இறந்தவரின் தூரத்து உறவினர், பல ஆண்டுகள் தொடர்பிலேயே இல்லாவிட்டாலும்கூட, அவர் வரும்வரை உடலைப் பாதுகாத்து வருகிறார்கள். அவர் விஷயத்தைக் கேள்விப்பட்டு, வசதிப்படி வந்து சேர்ந்தால்தான் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

கானாவைச் சேர்ந்த  பத்திரிகையாளரும் அரசியல்வாதியுமான எலிசபெத் ஓஹென், "இங்கே இறந்த உடல்களை உடனடியாக அடக்கம் செய்யும் வழக்கம் இல்லை என்பது உண்மைதான். நாங்களும் இப்படி மாதக்கணக்கில் உடல்களை வைத்திருப்பது நல்லதல்ல என்று எவ்வளவோ விழிப்புணர்வு ஊட்டி வருகிறோம். ஆனால் எங்களால் வெற்றி பெற முடியவில்லை. கடந்த வாரம் தேசிய ஊடகங்களில் ஒரு செய்தி வெளியானது. ஒரு கிராமத் தலைவர் இறந்து 6 ஆண்டுகள் ஆகிவிட்டன. அடுத்த தலைவர் யார் என்று இன்னும் முடிவாகவில்லை. அதனால் அவரது உடலை அடக்கம் செய்யாமல் வைத்திருக்கிறார்கள். வெளியுலகத்துக்கு இது அதிர்ச்சியான விஷயமாக இருக்கலாம். ஆனால் கானாவில் இதை ஒரு விஷயமாகக் கருத மாட்டார்கள்.

கோழி, விமானம், ஷூ, பழம், மீன், சிங்கம் போன்ற உருவங்களில் சவப்பெட்டிகளைச் செய்கிறார்கள். உறவினர்கள் அனைவரும் வந்துவிட்டால் இறந்த உடலை, அழகாகச் செதுக்கப்பட்டுள்ள சவப்பெட்டிக்குள் வைத்துப் புதைத்துவிடுவார்கள். இந்தச் சடங்குகளுக்கு ஆகும் செலவுகளை உறவினர்கள் பகிர்ந்துகொள்வார்கள். ஒருவேளை குடும்பம் இறந்தவரை உடனே புதைத்துவிட்டால் அத்தனை செலவுகளையும் அந்தக் குடும்பம் மட்டுமே ஏற்க வேண்டியிருக்கும். அதனால் எவ்வளவு காலமானாலும் உறவினர்களுக்காகக் காத்திருக்கிறார்கள்.

ஒருவருக்குத் திருமணம் ஆகி 50 ஆண்டுகள் ஆனால் கூட இறந்த பிறகு அவருடைய இறுதிச் சடங்குகளையும் அதற்கான செலவுகளையும் அவரது பிறந்த வீட்டைச் சேர்ந்த உறவினர்கள்தான் செய்ய வேண்டும் என்று இங்கே நடைமுறையில் இருக்கிறது. என்னுடைய பாட்டி 90 வயதில் இறந்தார். நாங்கள் மூன்றே வாரங்களில் அடக்கம் செய்துவிட்டோம். ஆனால் அவரது கிராமத்தில் உள்ளவர்கள் உரிய மரியாதை அளிக்கவில்லை, அவமரியாதை செய்துவிட்டோம் என்றும் கருதுகிறார்கள்" என்கிறார்.   

காலத்துக்கு ஏற்ப மாற வேண்டும் கானா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

3 mins ago

சினிமா

8 mins ago

சினிமா

13 mins ago

இந்தியா

21 mins ago

க்ரைம்

18 mins ago

இந்தியா

24 mins ago

தமிழகம்

46 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

மேலும்